சென்னை: வடகிழக்கு பருவ மழைக்காலம் முடிந்த பிறகு, அதிமுக அரசில் நடந்த ஊழல்களை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்கப்படும். தவறு எங்கு நடந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டு நிச்சயமாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டன. சென்னையில் கடந்த 6ம் தேதி முதல் பெய்த மழைநீர் வடியாமல் பல பகுதிகளில் தேங்கியது.
இதற்கு பத்தாண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், மழைநீர் வடிகால் முறையாக பராமரிக்காமல் இருந்ததே காரணம் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. அதிமுக ஆட்சியின்போது சென்னையின் முக்கிய வணிக கேந்திரமான தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால், இந்த பகுதியில் மழைநீர் சிறிதும் தேங்காது என்று நினைத்தனர். ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தி.நகரின் முக்கிய தெருக்கள், போக்குவரத்துக்கு சாலைகளில் முட்டி அளவுக்கு மழைநீர் தேங்கி இருந்தது. இப்பகுதியை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்மார்ட் பணி திட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
இன்றைக்கு தி.நகரில் தண்ணீர் தேங்க அதிமுக அரசின் முறைகேடு, ஊழல்களே காரணம். இது குறித்து முறையாக விசாரித்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், சென்னையில் 8வது நாளாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மைலப்பா தெரு, நேரு மண்டபப் பகுதியில், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டு, வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு கணக்கெடுப்பு எடுக்கச் சொல்லியிருக்கிறோம். இன்று அல்லது நாளை அந்த அறிக்கையை அளிப்பார்கள். அதன் பிறகு முறைப்படி என்ன செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் நிச்சயமாக செய்வோம்.
நாளை (இன்று) கன்னியாகுமரி செல்வதற்கு முடிவு செய்திருக்கிறேன். டெல்டாவில் பயிர்சேதம் குறித்த மொத்த கணக்கீடு வந்தபின்பு அதையெல்லாம் தயார் செய்து பிரதமருக்கு அனுப்பி வைப்போம். தேவைப்பட்டால், இங்கே இருக்கின்ற அமைச்சர்களையோ, நாடாளுமன்ற உறுப்பினர்களையோ பிரதமரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்கப்படும்.
படாளம், புளியந்தோப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கியது உண்மைதான். ஆனால், தேங்கிய நீரை விரைவாக அப்புறப்படுத்திவிட்டோம். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைப் பற்றி நான் கவலைப்படுவதே கிடையாது. என்னுடைய வேலை, மக்களுக்கு பணியாற்றுவது. அதற்காகத்தான் மக்கள் என்னை முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பெரிய வெற்றியை கொடுத்தார்கள். நான் இன்றைக்கும் சொல்கிறேன், ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வதுதான் எங்களுடைய கொள்கை. அந்த வழியில் என்னுடைய பயணம் இருக்கும். எதிர்க்கட்சிகள் என்ன புகார் சொன்னாலும், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.
அதிமுகவினர் செய்த அக்கிரமத்தை, அநியாயத்தை இந்த மழைக்காலம் முடிந்ததற்கு பிறகு அதற்கென கமிஷன் வைக்கப்பட்டு எங்கெங்கு தவறு நடந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டு, நிச்சயமாக யார் குற்றவாளிகளோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி அழகன், தாயகம் கவி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- டெல்டாவில் பயிர் சேதங்களை கணக்கிட அமைச்சர் தலைமையில் குழு.
- பயிர் சேதம் குறித்த அறிக்கையை பிரதமருக்கு அனுப்புவோம்.
- மக்களுக்கு பணியாற்ற தான் என்னை முதல்வராக தேர்வு செய்தனர்.
- ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வதுதான் எங்களுடைய கொள்கை.