பொறுப்புகூறல், அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்காக இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்பு | பீரிஸ்

வெளிவிகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், 2022 பெப்ரவரி 18 ஆந் திகதி புதுடில்லியை தளமாகக் கொண்டுள்ள  பஇராஜதந்திரிகளுக்கு மத்தியில் உரையாற்றினார். 

பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள்  பேரவையின் எதிர்வரும் 49 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் குறித்த தகவல்களைப் பகிர்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

தற்போதைய அபிவிருத்திகளைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளக்கங்களின் தொடர்ச்சியாக, புதுடில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அங்கீகாரம் பெற்ற தூதரகத் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் வாய்ப்பை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் பாராட்டினார். 

மாநாட்டில் 83 தூதுவர்கள் கலந்து கொண்டனர்.

மனித உரிமைகள் பேரவையின் 2021 செப்டெம்பர் அமர்வில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மற்றும் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியமையை  அமைச்சர் நினைவு கூர்ந்தார். 

இந்நிலையில், ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் உணர்வுடன் கூடிய சர்வதேச சமூகத்துடனான ஆக்கபூர்வமான ஈடுபாட்டை அமைச்சர் குறிப்பிட்டார்.

இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலைபேறான அபிவிருத்திச் சபை ஆகிய உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் காரணமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளான பொறுப்புக்கூறல், மறுசீரமைக்கப்பட்ட நீதி மற்றும் அர்த்தமுள்ள  நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வ அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

43 வருடங்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

பயங்கரவாதத் தடைச் சட்டம் பல மாதங்களாக நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக விளக்கமளித்த அமைச்சர், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும்  விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப் படியாகும் என சுட்டிக் காட்டினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கணிசமான திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவுப் பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், கட்டுப்பாட்டு ஆணைகள், உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல், நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குகளை விரைவாகத் தீர்த்து வைத்தல், கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை ரத்துச் செய்தல் மற்றும் நீதிவான்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளின் அணுகலுக்கான விதிகளை அறிமுகப்படுத்துதல், தடுப்புக் காவலில் உள்ள காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளைத் தடுத்தல், குடும்பத்துடன் தொடர்பு கொள்ளும் உரிமை,  நீண்டகாலக் கைதிகளுக்கு பிணை வழங்குதல் மற்றும் வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற அம்சங்கள் உள்ளடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக  பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் தொடர்பிலும் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டதுடன், முதலாவது இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது இடைக்கால அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 9 பேர் கொண்ட நிபுணர் குழு தொடர்பிலும் வெளிநாட்டு அமைச்சர்  குறிப்பிட்டார். நிபுணர் குழு தமது பூர்வாங்க ஆலோசனைகளை நிறைவு செய்துள்ளதாகவும், அதற்கான முன்மொழிவுகள் விரைவில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதன் பின்னர், ஜனநாயக நடைமுறையின் அடிப்படையில் பரந்தளவிலான பொது ஆலோசனைகள் பின்பற்றப்படும் எனக் குறிப்பிட்டார்.

கேள்விகளுக்குப் பதிலளித்த வெளிநாட்டு அமைச்சர், புதுடில்லியைத் தளமாகக் கொண்ட தூதுவர்களுடனான ஆக்கபூர்வமான ஈடுபாட்டைப் பாராட்டிய அதே வேளை, ஐ.நா. மனித உரிமைகள்  பேரவை மற்றும் ஏனைய பல்தரப்பு மன்றங்களில் தொடர்ந்து ஒத்துழைப்பதற்கு எதிர்பார்த்தார்.

ஆசிரியர்