Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜெனிவா செல்ல என்னைத் தள்ளிவிடாதீர்! – அரசுக்கு மனோ எச்சரிக்கை

ஜெனிவா செல்ல என்னைத் தள்ளிவிடாதீர்! – அரசுக்கு மனோ எச்சரிக்கை

5 minutes read

“எனக்கு நமது பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு சென்னைக்குச் சென்று, நியூயோர்க்குக்குச் சென்று, ஜெனிவாவுக்குச் சென்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்குத் தள்ளி விட வேண்டாம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகின்றேன்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் நலிவடைந்த பிரிவினர் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் நேற்று கூட்டாகக் கொண்டு வந்த கவனயீர்ப்புப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது:-

“இந்த நாட்டில் நாம் 1958, 1977, 1983 கால கட்டங்களில் இனவாதக் கலவரங்களைப் பார்த்துள்ளோம். 1971, 1988 ஆம் ஆண்டுகளில் தெற்கில் ஆயுதப் போரைப் பார்த்துள்ளோம். 2004 இல் சுனாமி அழிவைப் பார்த்துள்ளோம். அதன்பின் போருக்கு முகம் கொடுத்துள்ளோம்.

எதுவாக இருந்தாலும், எக்காலத்திலும் இன்றைய நிலைமையைப் போல் நமது மக்கள் நெருக்கடியைச் சந்திக்கவில்லை என எண்ணுகின்றேன். எக்காலத்திலும் மக்கள் எப்படியாவது மூன்று வேளையும் சாப்பிட்டார்கள். பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தபடி வாழ்ந்தார்கள். இந்தக் காலத்தில்தான் இப்படி மிகவும் மோசமான நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்றார்கள்.

நாம் இன்று இந்த யோசனையைக் கொண்டு வந்ததன் நோக்கம், இந்த நெருக்கடிக்குள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரிவினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிவாரணங்களை ஏற்பாடு செய்யுங்கள் என்ற கோரிக்கையின்படி ஆகும்.

அது அரசின் கடப்பாடு. அரசு கடமைப்பட்டுள்ளது. எதிரணி என்ற முறையில் நாம் அதை அரசுக்கு எடுத்துக்கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

சபை தலைவரே, நான் அன்றும் சொன்னேன், இன்றும் சொல்கின்றேன். இன்று இந்த நாட்டில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு, துன்புறும், நலிவுற்ற பிரிவினர் தோட்டத் தொழிலாளர் ஆகும். இடதுசாரித் தலைவர் என்பதால் இது உங்களுக்கு நன்கு தெரியும்.

இதை நாம் எப்போதும் சொல்லி வந்தோம். யாரும் கவனத்தில் பெரும்பாலும் எடுக்கவில்லை. இன்று உலகம் சொல்ல ஆரம்பித்து விட்டது. இன்று ஐ.நா. அமைப்புகள் கூறுகின்றன.

ஐ.நா. உணவு விவசாய ஸ்தாபனம் தனது விசேட அறிக்கையில் என்ன கூறுகின்றது? இந்த நாட்டில் அதிகூடிய உணவின்மை நிலைமையால், அதிகம் வாழ்க்கை சுமையைச் சுமக்கும் பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறுகின்றது. தோட்டப்புறத்தில் பெண்கள் மேலதிக சுமையைச் சுமந்து குடும்பங்களை நடத்துகின்றார்கள்.

அதேவேளை உலக உணவு நிறுவனம், தோட்டப்புறங்களில் உணவின்மை 51 விகிதம் எனக் கூறுகின்றது. நகரப் பகுதிகளில் 43 விகிதமும், கிராமப் பகுதிகளில் 34 விகிதமும் என கூறுகின்றது.

இந்த உணவின்மை என்பது ஜனாதிபதி தினந்தோறும் பேசும் ஒரு விடயம் ஆகும். நான் சொன்னது போன்று, மூன்று வேளை உணவு என்பது, இன்று இரண்டு வேளை ஆகிவிட்டது. இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் இன்று ஒருவேளைதான் சாப்பிடுகின்றார்கள். அது அதிகம் நிகழ்வது இங்கேதான்.

இதை இன்று நாம் கூறுவதை விட ஐ.நா. கூறுகின்றது. உலகம் கூறுகின்றது என்பதை அரசு அறிய வேண்டும்.

அதுமட்டுமல்ல, ஐ.நாவின் நவீன அடிமைத்துவத்துக்கான அறிக்கையாளர் டோமாயா ஒபகாடா, சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.நா. மனித உரிமை ஆணையக அவைக்கு அறிக்கை சமர்பித்துள்ளார்.

அவர் என்ன கூறுகின்றார்? இலங்கையில் பெருந்தோட்டங்களில் காணப்படும் ஒடுக்குமுறைக்குப் பின்னால் இனத்துவ காரணம் இருக்கின்றது எனக் கூறுகின்றார்.

பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் துன்பங்களுக்குக் காரணமாக அவர்கள் தொழிலாளர் என்பதை விட, அவர்கள் சிறுபான்மைத் தமிழர்கள் என்ற காரணமும் உள்ளது என அவர் கூறுகின்றார். இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு.

எனக்கு நமது பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு, சென்னைக்குச் சென்று, நியூயோர்க்குக்குச் சென்று, ஜெனிவாவுக்குச் சென்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்குத் தள்ளி விட வேண்டாம் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகின்றேன்.

நாம் அநேகமான பாரபட்சங்களுக்கு முகம் கொடுக்கின்றோம். இங்கே கல்வி அமைச்சர் இருப்பதால் ஒன்றை அவர் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

நீங்கள் கல்வித்துறையில் பல புனர்மாற்றங்களைச் செய்கிறீர்கள். கொழும்பு நகர கல்வி வலயத்தை வட – மத்திய கொழும்பு வலயம் என்றும், தென் கொழும்பு வலயம் என்றும் இரண்டாகப் பிரிக்க நாம் முடிவு செய்துள்ளோம். அது நல்லது.

நுவரெலியாவில் நுவரேலியா, ஹட்டன், நோர்வூட், தலவாக்கலை ஆகிய நான்கு வலயங்கள் உருவாக வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். ஏனெனில், இன்றுள்ள நுவரெலியா, ஹட்டன் வலயங்களில் சுமார் 250 பாடசாலைகள் உள்ளன. 80 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். ஆகவே நான்கு வலயங்கள் என்பது மிக நியாயமான கோரிக்கை. உண்மையில் எமக்கு அங்கே ஆறு வலயங்கள் வேண்டும். ஆனால், மூன்று வலயங்களுடன் முடித்து விட சிலர் முயல்கின்றார்கள்.

அதேபோல், நமது நல்லாட்சிக் காலத்தில் 2019ஆம் ஆண்டு வர்த்தமானி பிரகடனம் மூலம், புதிய பிரதேச செயலகங்கள், நுவரெலியாவில், மேலதிகமாக ஐந்தும், இரத்தினபுரியில் இரண்டும், காலியில் இரண்டும் அமைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதில் இரத்தினபுரி, காலி என்பவற்றில் புதிய பிரதேச செயலகங்கள் அமைக்கப்பட்டு விட்டன. ஆனால், நுவரெலியாவில் இல்லை. ஏன் இந்த அநீதி?

அதேபோல் நாட்டின் ஏனைய இடங்களில் 500 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு சென்றால், பெருந்தோட்ட பகுதிகளில் 1000 முதல் 5000 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த அநீதி?

இப்போது பொலிஸ் அதிகாரம் கிராம சேவகர்களுக்கு வழங்கப்படவுள்ளது எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் இது என்ன பாரபட்சம்?

அடுத்த வருடம் 2023 ஆகும் போது இந்த மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 வருடங்கள் நிறைவடையப் போகின்றன.

இவர்கள் இங்கே நாடு பிடிக்க வரவில்லை. நாட்டை உருவாக்கவே வந்தார்கள். அவர்கள் இங்கே வந்த பாதையே ஒரு சோகப் பாதை. பல கதைகள் உள்ளன. வரும் வழியிலேயே 25 விகிதமானோர் இறந்து போனார்கள்.

இங்கே வந்து காடுகளை வெட்டி, இன்றுள்ள தேயிலை, இறப்பர் தோட்டங்களை உருவாக்கினார்கள். பின்னர் அந்தத் தேயிலை, இறப்பர் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் கொழும்பு துறைமுகத்தை உருவாக்கவும் அவர்களது உழைப்பு பயன்பட்டது. பின்னர் மலைநாட்டுக்கும், கொழும்புத் துறைமுகத்துக்கும் இடையில் ரயில் பாதைகளை உருவாக்கவும், நெடுஞ்சாலைகளை உருவாக்கவும் அவர்களது உழைப்பு பயன்பட்டது.

200 வருடங்களாக உழைத்துக்கொண்டு இருக்கும் இம்மக்களுக்கு இந்த நாடு தரும் பரிசு என்ன? இங்கே தீர்வு, நியாயம் இல்லை என்பதால்தான் இவர்களது இன்றைய நிலைமையை ஐ.நா. அமைப்புகள் பேசும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இதை மாற்றுவோம். புதிதாகச் சிந்திப்போம்.

இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாக விரும்புவதை தவிர, சமீபத்தையை இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களது அபிலாஷைகள் வேறு ஒன்றும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

தேசிய நீரோட்டத்தில் எம்மை உள்வாங்குங்கள். இந்த நாட்டின் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்ட மக்களுக்கு இன்று காணி உரிமை, வீட்டு உரிமை இல்லை. வறுமை அதிகம். மந்தபோசனம் அதிகம். வேலை வாய்ப்புகள் குறைவு. அவர்களது நிர்வாகக் கட்டமைப்புகள் தோட்ட நிர்வாகங்களிடம்தான் அதிகம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் ஏனைய மக்களைப் போல் அவர்களையும் மாவட்ட செயலக, பிரதேச செயலக, கிராம செயலக தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கு உள்ளே கொண்டு வாருங்கள்.

ஆகவே, இன்று மலையகத் தமிழ் இனத்தின் உள்ளே வாழும் பெருந்தோட்டப் பிரிவினரை பின்தங்கிய பிரிவு மக்களாகக் கருதி அவர்களை தேசிய மட்டத்துக்குக் கைதூக்கி விடுங்கள்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More