November 28, 2023 4:40 pm

அமைச்சர் ரொஷானுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் அவரது பாதுகாப்பைப் பலப்படுத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புக்காகக் குறைந்த பட்சம் ஏழு பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். அமைச்சர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது எனக் கோரிக்கை விடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அதற்கமைய விளையாட்டுத்துறை அமைச்சரின் பாதுகாப்புக்குக் கூடுதலாக மூன்று பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், தற்போது அவரது பாதுகாப்புக்காக 10 பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அண்மையில் அம்பலப்படுத்தியதால், தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு அளித்துள்ள பின்புலத்திலேயே தற்போது அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்று சபாநாயகரிடம் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று முறையிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்