செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சாணக்கியனின் இடத்தில் தமிழரசு கடும் போட்டிக்கு மத்தியில் வெற்றி!

சாணக்கியனின் இடத்தில் தமிழரசு கடும் போட்டிக்கு மத்தியில் வெற்றி!

1 minutes read

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் பிரதேசமான களுவாஞ்சிக்குடியை உள்ளடக்கிய மண்முனை தெற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் கடும் போட்டிக்கு மத்தியில் தமிழரசுக் கட்சி தலைமைப் பதவியைக் கைப்பற்றியது.

இதற்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் மேகசுந்தரம் வினோராஜ் பத்து வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் கணேசநாதன் 9 வாக்குகளையும் பெற்றதனால் தமிழரசுக் கட்சி சபையைக் கைப்பற்றியது.

20 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சபையில் தமிழரசுக் கட்சிக்கு எட்டு இடங்களும், தேசிய மக்கள் சக்திக்கு ஆறு இடங்களும் கிடைத்தன.

தமிழரசுக் கட்சியோடு தலா ஓர் உறுப்பினரைக் கொண்டிருந்த சுயேச்சைக் குழு ஒன்றும், ஐக்கிய மக்கள் சக்தியும் அணி சேர்ந்திருந்தன.

மறுபக்கத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களும், மற்றொரு சுயேச்சைக் குழுவின் ஓர் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் என ஒன்பது பேர் இருந்தனர்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் ரெலோ ஓர் உறுப்பினரை வைத்திருந்தது.

இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியை ஆதரிக்கும்படி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பல தலைவர்களுடனும் தமிழரசுக் கட்சியின் சாணக்கியன், சுமந்திரன் உட்படப் பலரும் பேசிய போதிலும், ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன், வினோதராதலிங்கம், சுரேன் குருசாமி, பிரசன்னா இந்திரகுமார் போன்றோர் தமிழரசை ஆதரிக்க அல்லது வாக்கெடுப்பில் பங்குபற்றாமல் இருக்க இணங்கிய போதிலும், ரெலோவின் செயலாளர் நாயகமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தமிழரசை எதிர்த்து – தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக தனது ஒரே உறுப்பினரை வாக்களிக்கச் செய்வதில் உறுதியாக இருந்தார் எனச் சாணக்கியன் கூறுகின்றார்.

இந்தத் தவிசாளர் தெரிவு வாக்கெடுப்பை இரகசிய முறையில் நடத்துமாறு தமிழரசுக் கட்சி கேட்டபோது, அதனைத் தேசிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்கள் தரப்பில் உள்ள சுயேச்சை உறுப்பினர் ஆகியோரோடு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி உறுப்பினர் என ஒன்பது பேர் சேர்ந்து எதிர்த்தனர். ஆயினும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் ஒருவர் தமிழரசு அணியோடு சேர்ந்து இரகசிய வாக்களிப்பைக் கேட்டமையால் இரகசிய வாக்கெடுப்புக் கோரிக்கை 11 – 9 என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.

இரகசிய வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் மேகசுந்தரம் வினோராஜ் பத்து வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் கணேசநாதன் ஒன்பது வாக்குகளையும் பெற்றனர். ஒரு வாக்கு செல்லுபடியற்றதானது. தவிசாளர் தெரிவிலும் பிரதித் தவிசாளர் தெருவிலும் அதுவே நடந்தது. அதனால் இரண்டு பதவிகளையும் தமிழரசுக் கட்சி கைப்பற்றியது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More