மாகாண சபை தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் முதன்மை எதிர்பார்ப்பாகும். பாராளுமன்றத்தில் எல்லை நிர்ணயப் பணிகள் மற்றும் உரிய சட்டத் திருத்தங்கள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (25) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, மாகாண சபை தேர்தல் மற்றும் அது தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
மாகாண சபை தேர்தலை நடத்த மாட்டோம் என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் போன்று அல்லாமல், மாகாண சபை தேர்தல் நடைமுறை என்பது அரசாங்கத்தின் தனிப்பட்ட செயல்பாடு அல்ல. அது பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துப் பிரதிநிதிகளும் இணைந்து முன்னெடுக்க வேண்டிய ஒரு செயல்திட்டமாகும்.
புதிய எல்லை நிர்ணயங்கள் தொடர்பில் பல்வேறு கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் அனைத்துக் கட்சிகளின் உடன்பாட்டுடன் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவு செய்யப்பட்டால், உடனடியாகத் தேர்தலை நடத்த முடியும்.
பழைய விருப்பு வாக்கு முறைமைக்குச் செல்லாமல், 2018 உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட தொகுதி வாரியான பிரதிநிதித்துவ முறையையே மாகாண சபைகளுக்கும் விரிவுபடுத்த அரசாங்கம் விரும்புகிறது. இதன் மூலம் உள்ளுர் அளவிலான பிரதிநிதித்துவமும் உறுதியான பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவமும் உறுதி செய்யப்படும்.
சுகாதாரம், கல்வி, வீதிகள், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்த பல பணிகள் மாகாண சபைகள் மூலமாகவே மக்கள் நிலைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். எனவே, இத்தேர்தலை விரைவாக நடத்துவது அவசியமாகும்.
மேலும், தேர்தல் நடைபெறாத சூழலிலும் சிலர் வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தலைக் குறிவைத்து இனவாத அல்லது மத மோதல்களைத் தூண்ட முயன்றால், பொதுமக்கள் அதனை ஆரம்பத்திலேயே நிராகரிக்க வேண்டும் என்றார்.