மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்துக்குச் சென்று, கடந்த 31ஆம் திகதி அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, அலுவலகத்தில் மேசையை உடைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் எதிர்வரும் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, ஏற்கனவே நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, அந்த இரு வழக்குகளிலும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.