இலங்கையின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட மாற்றம் ஒன்று மெல்ல மெல்ல வன்னியிலும் ஏற்பட்டது. ஓரளவு வசதி உள்ளவர்கள் உழவு இயந்திரங்களை (Tractor => a ploughing machine) வாங்கி வயல்களை உழத் தொடங்கினார்கள். தமது வயல்களை உழுத பின் அயலவர்களுக்கும் வாடகைக்கு உழுது கொடுத்தார்கள். உழவு இயந்திரங்களின் வரவால் எருமைகளினதும் எருதுகளினதும் தேவைகள் குறைந்தன. இளைஞர்கள் உழவு இயந்திரங்களால் கவரப்பட்டு, அவற்றை ஓட்டப் பழகி உழவு இயந்திர உரிமையாளர்களிடம் சம்பளத்திற்கு றைவர்களாக வேலைக்குப் போனார்கள். வயோதிபர்கள் தமது பாரம்பரிய முறைகளை கைவிடாது தொடர்ந்து மாடுகளால் உழுதார்கள்.
ஒரு சில சிறு விவசாயிகளையும் வயோதிபர்களையும் தவிர மற்றவர்கள் உழவு இயந்திரத்தால் உழுவதையே விரும்பினார்கள், வேலையும் விரைவில் முடிந்து விடும். சேற்றில் எருமைகளையும் எருதுகளையும் கலைத்துக் கொண்டு வெயிலில் திரிய வேண்டியதில்லை. கூடுதலான எருமைகளை வைத்திருந்த விவசாயிகளுக்கு வருமானம் குறைந்தது. எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக எருமைகளை விற்றார்கள். ஒன்றாக கூடி, ஒன்றாக வேலை செய்து, ஒன்றாக சாப்பிட்டு வாழ்ந்த அந்த இனிய வாழ்வு பறிபோவதை ஒருவரும் உணரவில்லை. இப்போது ஒருவருக்கொருவர் உதவி வாழ்ந்த அந்த ஊர் பற்றும் குறைய ஆரம்பித்தது.
கூடி வளர்ந்து, கூடி பாடசாலை சென்று, கூடி விளையாடி, கூடி நாட்டு கூத்துகளாடி ஒரே குடும்பம் போல வாழ்ந்த இளைஞர்கள், ஊரிலிருந்த உழவு இயந்திரங்கள் குறைவாக இருந்ததால் வேலை தேடி வேறு ஊர்களுக்குப் போனார்கள். முன்பிருந்த கிராமிய கட்டமைப்பு சிதையத் தொடங்கியது. எதையும் செய்யும் போது ‘நாம்’ செய்வோம் என்றவர்கள் இப்போது ‘நான்’ செய்வேன் என்றார்கள். கூட்டுறவாக வயல் செய்தது மாறி, தனித்தனியாக வயல் செய்யலானார்கள். மனிதனின் செல்வமாக கருதப்பட்ட மாடுகளினதும் எருமைகளினதும் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
மாடுகளும் எருமைகளும் குறைந்தமையால் வயல்களுக்கு தேவையான மாட்டெரு இல்லாமல் போனது. இரசாயன உரத்தை போட்டு வயல்களில் நச்சுத்தன்மையை உண்டாக்கினார்கள். நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, சுவையும் ஆரோக்கியமும் உள்ள பழங்கால நெல்லினங்களை கைவிட்டு, புதுப்புது நெல்லினங்களை விதைத்தார்கள். அவற்றினால் நெற்பயிர்களில் புதிய புதிய நோய்கள் தோன்றின. நோய்களை கட்டுப்படுத்த இரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்தினார்கள். அதனால் தேனீக்கள், தும்பிகள், வண்ணத்துப்பூச்சிகள், சிட்டுக்குருவிகள், மண்புழுக்கள் எல்லாம் அழிந்தன. இரசாயனம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதனின் உடலில் சேர்ந்து, அவனது ஆரோக்கியத்தைக் கெடுத்தது.
சுந்தருக்கும் மணிக்கும் இருந்த காதலை தெரிந்திருந்த மகாலிங்கமும் பொன்னம்மாவும், 1970 ஆம் ஆண்டு அவர்களின் திருமணத்தை நடத்த தீர்மானித்தார்கள். சுந்தரலிங்கத்திற்கும் பத்மாசனிக்கும் கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் திருமணம் நடை பெற்றது. நாதன் மாப்பிளைத் தோழனாக இருந்தான். கோவிலிலிருந்து மணமக்கள் ஊர்வலமாக மகாலிங்கத்தின் விடுதி வரை சென்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி, டீ. ஆர். ஓ., J.P. யோகலிங்கம், சுப்பிரமணியம், கிருஸ்ணராஜா, அழகரத்தினம், சிங்கம் ஓவசியர், மார்க்கண்டு விதானையார், இராசையா விதானையார் என்று முக்கியஸ்தர்கள் எல்லாரும் ஊர்வலத்தில் வந்தனர். திருமணம் முடிந்து சுந்தரும் மணியும் ஆசி பெற சென்ற போது, அவர்கள் இருவருக்கும் விபூதி பூசி விட்ட கணபதியாரின் முகத்தில், மீனாட்சி இறந்த போது மறைந்த புன்னகை மறுபடியும் தோன்றியது.
உழவு இயந்திரத்தின் வருகை மூன்று கிராமங்களிலும் தாக்கத்தை உண்டாக்கியது. கூடுதலான எருமை மாடுகளை வைத்திருந்த பேரம்பலத்தாருக்கு வருமானம் குறைந்தது. அவரும் கொஞ்சம் கொஞ்சமாக எருமைகளை விற்றார். பெரிய பரந்தனில் சிலர் தொடர்ந்தும் வயலை எருதுகளால் உழுதார்கள்.
மூன்று கிராம இளைஞர்கள் சிலர் உழவு பழகி, வேறு ஊர்களுக்கு றைவர்களாக சென்றார்கள். மகாலிங்கம் பால் தேவைக்காக மட்டும் கொஞ்சம் பசுக்களை வைத்துக் கொண்டு, மிகுதியை விற்று விட்டார்.
சொந்தமாக உழவு இயந்திரம் இருந்ததாலும், பொன்னம்மா, சுந்தர், நாபனின் நேரடி கண்காணிப்பாலும் வயல் ஓரளவு விளைந்தது. மணியை உதவிக்கு விட்டு விட்டு, பொன்னம்மா அடிக்கடி சுந்தருடனும் நாபனுடனும் போய் மாமனையும் பார்த்துக் கொண்டு, பொடியங்களுக்கு வயல் வேலைகளில் உள்ள நுட்பங்களை சொல்லிக் கொடுத்தா. நாதன் லீவில் நிற்கும் நாட்களில் தாயாருடன் சேர்ந்து வயல் வேலைகளைச் செய்தான். அவனும் உழவு இயந்திரத்தை ஓட்டப் பழகி வயல்களை உழுதான்.
மகாலிங்கம் நல்லாய் நெல் விளையக்கூடிய மூன்றாம் வாய்க்காலில், ஒரு காணியை குத்தகைக்கு எடுத்து பொடியங்களை செய்ய வைத்தார். சுந்தரும் நாபனும் தங்கள் வயலை விதைத்த பின், மற்றவர்களுக்கு உழுது கொடுத்து கூலியைப் பெற்றனர்.
மகாலிங்கம் தகப்பனாரின் வீட்டுக் கூரையை பிடுங்கி விட்டு, தகப்பனார் கட்டிய அறையை சாமியறையாக வைத்துக்கொண்டு, முழுமையான ஒரு வீட்டை, ஓடு போட்ட கூரையுடன் கட்டினார். அடிக்கடி பொன்னம்மாவும் பொடியளும் வந்து, அந்த வீட்டில் தங்கி போனதால், கணபதியார் ஓரளவு தேறிவிட்டார். காலம் வலிகளை குறைக்கும் ஆற்றல் கொண்டதல்லவா.
மகாலிங்கத்திற்கு தெரிந்த ஒருவர், ரீச்சர் வேலை பார்க்கும் தனது பெண் பிள்ளையை மணியுடன் தங்க அனுமதிக்கும்படி கேட்க அவரும் சம்மதித்தார். பொன்னம்மா, அந்த ரீச்சர் பிள்ளை மணிக்கு துணையாக நிற்கும் நாட்களில் பெரிய பரந்தனில் தங்கினா.
கிளிநொச்சி கிராம சேவையாளர் பிரிவில் இருந்த கனகாம்பிகைகுளம் கிராமத்தில் 1969 ஆம் ஆண்டு மூன்று ஏக்கர் படி காணிகள் வழங்கப்பட்டன. பின்னர் 1972 ஆம் ஆண்டில் கனகாம்பிகைகுளம் காணியில் எஞ்சியிருந்த பகுதியை அரை ஏக்கர் படி கொடுக்க தீர்மானித்தார்கள். மகாலிங்கம் பெரிய பரந்தன் மக்களுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கி விண்ணப்பிக்க வைத்தார்.
நாபனும் சுந்தரும் சச்சியும் (பேரம்பலத்தாரின் மூத்த மகன்) இராசையா விதானையாரிடம் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பித்தனர். மூவரும் மகாலிங்கத்தாருக்கு தெரியாது நேர்முகதேர்வில் பங்குபற்றச் சென்றனர். நேர்முகதேர்வை நடத்த கச்சேரி அதிகாரிகளுடன் மகாலிங்கமும் வருவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
நேர்முக தேர்வு நடந்தது. பெரிய பரந்தனில் கடல் பெருக்கெடுத்து வந்த கதையை மகாலிங்கம் அதிகாரிகளுக்கு சொல்லியிருந்தார். பெரிய பரந்தன் மக்கள் சிலருக்கும், காணி இல்லாத பலருக்கும் காணிகள் கிடைத்தன. சுந்தர், நாபன், சச்சி மூவரையும் கண்ட மகாலிங்கம் ஒரு பூவரசம் மரத்தின் தடியை முறித்து அடிக்கத் துரத்தினார். மற்ற இருவரும் ஓடிவிட நாபனுக்கு முதுகில் ஒரு அடி விழுந்தது. அடி நோகவில்லை என்றாலும் தகப்பனுக்கு விருப்பமில்லாத செயலை, செய்ய வந்ததை நினைத்து நாபன் கவலைப்பட்டான்.
வீட்டுக்கு வந்த மகாலிங்கம் மகனின் முதுகைத் தடவி “நல்லாய் நொந்து போய்ச்சா.” என்று கேட்டவர், “அரசாங்கம் காணி இல்லாதவர்களுக்கு தான் காணி கொடுக்கிறது. உங்களுக்கு என்ன குறை, தியாகர் வயலில் அப்பு எனக்கு தந்த ஐந்து ஏக்கர் காணியோடை பத்தொன்பது ஏக்கர் காணியை வாங்கி உங்களுக்காக சேர்த்து வைச்சிருக்கிறன். இரண்டு வருசத்துக்கு முந்தி எங்கடை பள்ளிக்கூட பிள்ளைகள் ஓடி விளையாட காணி காணாது எண்டதும், இரண்டு ஏக்கர் காணியை பள்ளிக்கூடத்திற்கு எழுதி கொடுத்தனான். என்ரை பிள்ளைகள் காணி தா எண்டு கந்தோர் வாசலில் போய் நிண்டால் எனக்கு எப்படி இருக்கும்.” என்று கவலையுடன் சொன்னார்.
லீவில் வந்த நாதன், நாபனுக்கு அடி விழுந்த கதையை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான். “எனக்கு நடந்தது தெரிஞ்சிருந்தால் நீங்கள் காணி கச்சேரிக்கு போயிருக்க மாட்டீங்கள்.” என்றான்.
சுந்தர், “என்ன நடந்தது?” என்று கேட்க, நாதன் “சுதந்திரபுரத்தில் ஒரு காணி கச்சேரிக்கு போனனான். நேர்முக தேர்வில் என்னை தெரிவு செய்து விட்டார்கள். என்ரை கஷ்டகாலம் அப்ப பார்த்து ஐயா வந்து தெரிவு பட்டியலை வாங்கி பார்த்தார். காணியை விரைவாக வெட்டி, துப்பரவாக்கி, விவசாயம் செய்யோணும் எண்டு ஐயாவை பேச சொன்னார்கள். எல்லாத்தையும் பேசியவர் கடைசியாக என்னை மேடைக்கு கூப்பிட்டு ‘இவர் என்ரை மகன். விரைவில் பல்கலைக்கழகம் போய்விடுவார்.’ என்று சொன்னார். அதோடை கதை முடிஞ்சுது. “நீர் விதானையாற்றை மகன். University க்கும் போகப்போறீர் உமக்கு என்னெண்டு காணி தாறது?” என்று என்ரை பேரை வெட்டி விட்டாங்கள்.” என்றான்.
1971 ஆம் ஆண்டு ஒவ்வொரு தொகுதியிலும் இருபத்தைந்து பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதென்று அரசாங்கம் தீர்மானித்து, சிபாரிசு செய்யும் பொறுப்பை அந்தந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அளித்தது. நாபனும் அதற்கு விண்ணப்பித்திருந்தான். பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நாபனை கூப்பிட்டு அனுப்பினார்.
நாபன் போனபோது அவர் “தம்பி, குடும்பத்தில் ஒருத்தரும் அரசாங்க வேலையில் இல்லாதவர்களுக்கு தான் MP சிபார்சு செய்கிறார். நீர் விதானையாரின் மகன் என்றபடியால் உம்மை சிபார்சு செய்யவில்லை. ஆனால் MP உமக்கு கட்டாயம் வேறை வேலை எடுத்து தருவார்.” என்று சொல்லி நாபனின் உத்தியோக கனவை கலைத்து விட்டார்.
அந்த ஆண்டு சுந்தர் கரைச்சி வடக்கு ப.நோ.கூ. சங்கத்தின் பரந்தன் கிளையில் மனேஜராக நியமிக்கப்பட்டான். சுந்தருக்கு வேலை கிடைத்ததால் குடும்பத்தவர் எல்லாரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
1972 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு (சிறப்பு பட்டம் பெறுவதற்காக) படித்துக் கொண்டிருந்த பொழுது நாதன் தபால் அதிபர்களுக்கான பரீட்சையில் (Postmasters and Signallers) பாஸ் பண்ணி, பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டான். வீட்டில் நின்ற நாதனை, முதல் முதல் தானே கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று மகாலிங்கம் விரும்பினார்.
அதே ஆண்டு பங்குனி மாதம் 13 ஆம் திகதி நியமனம் என்று அறிவிக்கப்பட்டபடியால், மகாலிங்கம் 10 ஆம் திகதி மகனுடன் கொழும்புக்கு போவதற்கு லீவு எடுத்து, ஒழுங்குகள் செய்திருந்தார்.
1972 ஆம் ஆண்டு கல்வி அமைச்சர் கணித, விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தீர்மானித்தார். க.பொ.த. சாதாரண பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று, உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பாடத்தில், ஒரு பாடத்தில் ஏனும் சித்தியடைந்திருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தார்கள்.
நாபனும் விண்ணப்பித்து, நேர்முகப் பரீட்சைக்கும் போய் வந்தான். அந்த ஆண்டு மாசி மாதம் ஆசிரிய நியமனம் செய்வதற்காக, வட மாகாணத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் இரண்டு கிழமை பயிற்சியும் தொடங்கியது. நாபனுக்கு பயிற்சிக்கு அழைப்பு கிடைக்கவில்லை, நாபன் நம்பிக்கையை இழந்தான்.
1972 ஆம் ஆண்டு மகாலிங்கம் நாதனை கொழும்புக்கு கூட்டி செல்ல ஆயத்தபடுத்திய வேளையில், நாபன் எதிர்பார்க்காத ஒரு காலைப் பொழுதில், ஆசிரிய நியமனம் பற்றி தந்தி அடித்திருந்தார்கள். அதே பங்குனி மாதம் 8 ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு மன்னார் மாவட்ட கல்வி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கணித / விஞ்ஞான ஆசிரியராக நியமனத்தை பெற்றுக் கொள்ளவும்’ என்று தந்தி அடித்திருந்தார்கள். நாபனால் தனக்கு நியமனம் கிடைத்திருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை.
இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்த மகாலிங்கம், தன்னுடைய காரில் போய் நாபனின் நியமனம் முடிய, திரும்பி வந்து கொழும்புக்கு போவது கஷ்டம் என்பதால் பரந்தனில் கார் வைத்து ஓடிய சண்முகம் என்பவருடைய காரை வாடகைக்கு அமர்த்தி, எட்டாம் திகதி காலமை நாலு மணிக்கு போகவேணும் என்று கூறி வைத்தார். அன்றிரவு வீட்டில் ஒருத்தருக்கும் நித்திரை இல்லை.
நாபன் தந்தியில் குறிப்பிட்டிருந்த படி சான்றிதழ்களை அடுக்கி ஒரு பைலில் (file) வைத்துக் கொண்டான். பொன்னம்மா, நாபனிடம் “தம்பி, நான் ரீச்சராய் வரோணும் எண்டு ஆசைப்பட்டன். எனக்குக் கிடைக்கேல்லை, உனக்கு கிடைச்சிருக்கு. மன்னாரிலும் பெரிய பரந்தனை போலை அதிகம் படிக்காத சனங்கள் தான் இருக்கினம், அவையின்ரை பிள்ளையளை கவனமாக படிப்பி அப்பன்.” என்று சொல்லி அனுப்பி வைத்தா.
இருவரும் எட்டாம் திகதி காலை நாலு மணிக்கு வெளிக்கிட்டு, பூநகரி பாதையால் போய் ஆறு மணிக்கே திருக்கேதீஸ்வரத்திற்கு போய் சேர்ந்தார்கள். பாலாவியில் குளித்து, திருக்கேதீஸ்வரத்தானின் காலை பூசையை பார்த்து வணங்கி, அங்கே இருந்த சைவ உணவகத்தில் சாப்பிட்டு, எட்டு மணிக்கு மன்னார் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்று விட்டார்கள்.
மாவட்ட கல்வி அதிகாரி சான்றிதழ்களை சரி பார்த்து விட்டு, மன்/இலகடிப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு பத்மநாபனை தராதரப்பத்திரமற்ற கணித / விஞ்ஞான ஆசிரியராக நியமித்து கடிதம் வழங்கினார். மகாலிங்கத்தின் நண்பர்களான மூன்று கச்சேரி அலுவலர்கள் குறுகிய கால லீவு போட்டு விட்டு காரில் ஏறி பாடசாலையை காட்டுவதற்கு வந்தார்கள்.
முதல் நாள் என்றபடியால் கையெழுத்திட்டு, நியமனத்தை பெற்ற பின், அறை ஒன்றை வாடகைக்கு எடுக்கவும், மன்னார் நகரத்தை காட்டி அறிமுகப்படுத்தவும், அதிபர் நாபனை மகாலிங்கத்துடன் திரும்பி போக அனுமதித்தார். நண்பர்களின் உதவியால் கச்சேரி சிறாப்பரின் விடுதியின் வெளிப்புற அறையில் தங்க ஏற்பாடு செய்து, கச்சேரி கன்ரீனில் (canteen) சாப்பிட ஒழுங்கு செய்து விட்டு மகாலிங்கம் திரும்பிச் சென்றார்.
அவருக்கு அடுத்த நாள் இரவு நாதனை கொழும்புக்கு கூட்டி செல்ல வேண்டியிருந்தது. கொழும்பு செல்லும் மெயில் றெயினில் ஏறி மகாலிங்கம், நாதனுடன் கோட்டை புகையிரத நிலையத்தில் இறங்கினார்.
நாதன் கொழும்பு நகரை நன்கு தெரிந்து வைத்திருந்தான். 13 ஆம்திகதி வரை, தான் பல்கலைக்கழகம் போகாத நாட்களில், முகத்துவாரத்திலும், கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் கடை வைத்துக் கொண்டும் இருந்த தூரத்து உறவினர்களிடம் மகாலிங்கத்தை கூட்டிச் சென்றான். 13 ஆம் திகதி மகாலிங்கம், நாதன் கடமையேற்க இருந்த அமைச்சு அலுவலகத்திற்கு நாதனுடன் சென்றார்.
நியமனம் பெற்ற நாதன் மேலதிகாரிகளுடன் கதைத்து, பல்கலைக்கழகத்தில் வகுப்பு உள்ள நாட்களில் இரவு நேர கடமை செய்ய அனுமதி கோரி, அதற்கான அனுமதியையும் பெற்றுக் கொண்டான். மகாலிங்கம் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் ஊர் போய் சேர்ந்தார்.
மகாலிங்கத்தின் வீட்டிற்கு அருகிலிருந்த பரந்தன். அ. த. க. பாடசாலைக்கு குமரபுரத்தை சேர்ந்த சுப்பையா என்ற அதிபர் இடம் மாறி வந்தார். அவர் மிகவும் அமைதியானவராகவும், மாணவர்களை அன்பு காட்டி பொறுமையாக படிப்பிப்பவராகவும், ஊர் மக்களுடன் நன்கு பழகுபவராகவும் இருந்தார்.
மகாலிங்கத்திற்கு அவரை நன்கு தெரிந்திருந்தது. அவர் சுப்பிரமணியத்தின் தமையன் செல்லையாவின் நெருங்கிய உறவினர் என்பதையும் அறிந்திருந்தார். சுப்பையா மாஸ்டரின் மனைவியும் ஆசிரியையாக கடமையாற்றினா. அவர்களுக்கு இந்திரா என்று ஒரு மகள், உயர்தரம் பாஸ் பண்ணிவிட்டு வீட்டில் இருந்தா.
சுப்பிரமணியத்தாரும் செல்லையரும் செல்லையரின் மனைவியும் இந்திராவிற்கு நாதனை திருமணம் பேசி வந்தார்கள். மகாலிங்கம் 19 வயதிலும் பொன்னம்மா 16 வயதிலும் திருமணம் செய்தவர்கள், 26 வயதாகிவிட்ட நாதனுக்கு விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தனர்.
சுப்பையா மாஸ்டரை தெரியும் என்பதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து, நாதனை அழைத்து பெண் பார்க்க வைப்பதெனவும், அவனுக்கு பிடித்திருந்தால் திருமணத்தை செய்வதென்றும் வந்தவர்களுடன் பேசி ஒழுங்கு செய்தார்கள்.
பெரிய பரந்தனுக்கு வந்த நாதன், ஒரு நல்ல நாளில் சுப்பையா மாஸ்டர் வீட்டிற்கு தந்தை, தாயாருடனும் மணியுடனும் சென்றான். இந்திராவை பார்த்து கதைத்தவுடன் நாதனுக்கு பெண்ணை பிடித்து விட்டது. 1972 ஆம் ஆண்டு ஆனி மாதம் 23 ஆம் திகதி நாதனுக்கும் இந்திராவிற்கும் திருமணம் நடந்தது.
.
திருமணம் நடந்து சில நாட்களில், நாதன் கொழும்பில் வீடு எடுத்துக் கொண்டு மனைவியை தன்னுடன் கூட்டிச் சென்றான்.
நாதனின் திருமணத்தோடு பொன்னம்மா நிரந்தரமாக பெரிய பரந்தன் வீட்டில் தங்கி விட்டா. மணியும் வேலைக்கு போகும் சுந்தருக்கு சாப்பாடு சமைத்து கொடுக்க வேண்டும் என்பதால் தாயாருடன் நின்றுவிட்டாள். சுந்தரும் நாபனும் வேலை கிடைத்து, போய் விட்டதால் வயல்வேலைகளையும் உழவு இயந்திரத்தையும் கண்காணிக்க வேண்டிய தேவை பொன்னம்மாவிற்கு ஏற்பட்டது.
தாங்கள் வீட்டில் நின்றால் கணபதியாரையும் நல்லாய் கவனிக்கலாம் என்றும் பொன்னம்மா கருதியதால், மகாலிங்கம் அலுவலக வேலைக்கு கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து இரண்டு பெண் பிள்ளைகளை உதவியாளர்களாக நியமித்தார். அவர்களின் சம்பளத்தை மகாலிங்கம் தனது சம்பளத்திலிருந்து கொடுத்தார்.
.
தொடரும்..
.
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
ஓவியம் : இந்து பரா – கனடா
.
முன்னைய பகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/
பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/
பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/
பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/
பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/
பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/
பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/
பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/
பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/
பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/
பகுதி 12 – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/
பகுதி 13 – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/
பகுதி 14 – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/
பகுதி 15 – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/
பகுதி 16 – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/
பகுதி 17 – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/
பகுதி 18 – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/
பகுதி 19 – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/
பகுதி 20 – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/
பகுதி 21 – https://vanakkamlondon.com/stories/2021/01/99913/
பகுதி 22 – https://vanakkamlondon.com/stories/2021/02/100718/
பகுதி 23 – https://vanakkamlondon.com/stories/2021/02/101415/
பகுதி 24 – https://vanakkamlondon.com/stories/2021/02/101804/
பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/
பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/
பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/
பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/
பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/
பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/
பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/
பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/
பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/
பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/
பகுதி 35 – https://vanakkamlondon.com/stories/2021/05/110730/
பகுதி 36 – https://vanakkamlondon.com/stories/2021/05/111664/
பகுதி 37 – https://vanakkamlondon.com/stories/2021/05/112697/
பகுதி 38 – https://vanakkamlondon.com/stories/2021/05/113713/
பகுதி 39 – https://vanakkamlondon.com/stories/2021/06/114747/
பகுதி 40 – https://vanakkamlondon.com/stories/2021/06/115804/
பகுதி 41 – https://vanakkamlondon.com/stories/2021/06/116949/
பகுதி 42 – https://vanakkamlondon.com/stories/2021/06/118039/
பகுதி 43 – https://vanakkamlondon.com/stories/2021/06/119015/
பகுதி 44 – https://vanakkamlondon.com/stories/2021/07/120022/
பகுதி 45 – https://vanakkamlondon.com/stories/2021/07/121109/
பகுதி 46 – https://vanakkamlondon.com/stories/2021/07/122111/