
அரிசியும் சீனியும்
எண்ணெயும் கேசும்
வருகுதாம் கப்பலில்
புரையோடிய புண்ணுக்கு
மருந்து போட
நினைக்கினம்
கொஞ்ச நாளைக்கு
கொதி வலி மாற்றி
குந்தலாம் கதிரையில்
என்று நினைக்கினம்
சனங்களின் கோபத்தை
தணிக்கலாம் என்று
சரியாக படிச்ச
பீரிஸும் சொல்லுறேர்
எத்தனை காலம்
ஏமாத்த முடியும்
இந்த நாட்டிலே
வந்த வருத்தமோ
மாறாது இப்போ
அண்ணண் இந்தியா
தந்த கடன் தீர
பின்ன யாரிடம்
போய் கேட்பது
கோத்தா கோ என்று
கொதிச்சு திரியுது சனம்
வேண்டாம் நீ போ என்று
வெறுத்து கத்துது
என்ன பிளான் என்று
எதுகும் தெரியல்ல
அண்ணன் தம்பிக்க
அடி பிடி தானோ
யாருக்கு தெரியும்
கொஞ்ச நாளுக்கு
பொறுத்து பார்ப்பம்
என்ன நடக்கும்
நாட்டில என்று
வந்த பருப்பும்
சீனியும் முடிய
என்ன செய்வினம்
இருந்து பார்ப்பம்
படிச்சவ கொஞ்சம்
நிமிர்த்த வருகினம்
பார்ப்பம் ஏதேன்
மாறுதோ என்று
விடாப்புடியா
நிற்கிறேர் கோத்தா
விடுவேரா கதிரையை
கொடாப்பிடி தானோ
என்னமோ ஏதோ
எத்தனை நாளுக்கு
சனமும் கத்துமோ
ஏறுமோ வேதாளம்
மீண்டும் கதிரையில்
எங்கட தமிழரும்
அமைதியாய் இருக்கினம்
13 ஐ போட்டுட்டு
பார்த்துக் கொண்டு இருந்தவை
சனத்தோட போய்
நீங்களும் கேளுங்கள்
அரிசியும் பருப்பும்
முக்கியம் தான்
ஆனால் தமிழரின் உரிமையும்
தரச் சொல்லி கேளுங்கள்
எங்களுக்காகவும் பேசக் கேளுங்கள்
உங்களுக்காகவும் நாங்கள் பேசுவோம்
உரக்கச் சொல்லுங்கள்
எல்லோரும் சேர்ந்து
இனியும் வேண்டாம்
இனவாதம் என்று.
பா.உதயன்