ஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த சிறிய படகொன்று விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
110க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் குறித்த சிறிய படகு, நேற்று காலை பிரான்ஸின் கிராவ்லைன்ஸ் (Gravelines) கடற்பகுதியில் வைத்து மீட்புக் கப்பலொன்றினால் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
படகு விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதில் பயணித்தவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது 70க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட போதிலும், ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலக் கால்வாய் வழியாக சிறிய படகுகளில் இங்கிலாந்தை நோக்கிப் புலம்பெயர்வோரின் பயணங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், தற்போது இவ்வாறான கடத்தல்களில் பயன்படுத்தப்படும் சிறிய படகுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புலம்பெயர்ந்தோர் ஆபத்தான முறையில் ஆங்கிலக் கால்வாயை கடப்பதைத் தடுக்கும் வகையில், பிரான்ஸ் கடலோரக் காவல்படையினர் கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடுமையான கடல் சூழ்நிலைகளில் அதிக எண்ணிக்கையிலானோரை ஏற்றிச் செல்லும் சிறிய படகுப் பயணங்கள் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.