புதுமுக நடிகர் டி. அண்டனி கதையின் நாயகனாக நடித்து, எதிர்வரும் செப்டம்பர் மாதம் நான்காம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படம்- மதுவிற்கு அடிமையானவர்களை மீட்கும் பணியை மேற்கொள்ளும் கடற்கரையை பற்றி கவிதையுடன் விவரிக்கப்பட்டிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் டி. ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படத்தில் டி. ஆண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ஆலம் ஷா, நவ்யா சுஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெய்கர் ஹரி நாத்- அசோக் ஸ்ரீதரன் – ஜோய் ரீட்டா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அந்தோணி’ஸ் அட்லியே நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. அண்டனி தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், ஆய்வாளருமான தனஞ்செயன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி, இப்படத்தில் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் பங்கு பற்றி இயக்குநர் பேசுகையில், ”மதுவுக்கு அடிமையான நாயகனும், பாலியல் தொழிலாளியும் வாழ்க்கையில் எதிர்பாராமல் சந்திக்கிறார்கள். இதன் பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை.. கவிதையுடன் ரசிக்கும் வகையில் விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.
இப்படத்திற்காக பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதிய வரிகளில் இருந்து, இதன் தலைப்பை தெரிவு செய்து சூட்டியுள்ளோம்.
இந்தப் படத்தில் பரந்து விரிந்த கடற்கரையும் ஒரு கதாபாத்திரமாக இடம் பிடித்திருக்கிறது. மதுவிற்கு அடிமையான நாயகனை மீட்பதில் கடற்கரைக்கு உள்ள பங்களிப்பையும், அதற்கான அர்த்தமுள்ள பின்னணியையும் குறிப்பிட்டிருக்கிறோம். படம் பார்த்த பிறகு நாங்கள் விவரிக்க முயற்சித்திருக்கும் விடயங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.