செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இஸ்ரேலுக்கு பயணித்த விமானத்தில் இந்திய விமானி மீது கத்திக்குத்து: விமானம் சவுதியில் தரையிறக்கம்

இஸ்ரேலுக்கு பயணித்த விமானத்தில் இந்திய விமானி மீது கத்திக்குத்து: விமானம் சவுதியில் தரையிறக்கம்

2 minutes read

டுபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் விமானத்தில், தலைமை விமானி மீது துணை விமானி கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தி விமானத்தைத் தகர்க்க முற்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 33 ஆயிரம் அடி உயரத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து, சவூதி அரேபியாவின் தபூக் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள பென்குரியன் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட ஃப்ளை டுபாய் போயிங் ரக விமானத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விமானத்தில் 27 சிறுவர்கள் உட்பட 174 இஸ்ரேலிய பயணிகள் மற்றும் விமானப் பணிக்குழுவினர் அடங்கலாக 180-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். இவ்விமானத்தை இந்தியாவின் தலைமை விமானி ஸ்மித் மச்சர் மற்றும் ஓமான் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஆகியோர் செலுத்தியுள்ளனர்.

விமானம் புறப்பட்டு இரண்டரை மணித்தியாலங்கள் கடந்த நிலையில், சவூதி அரேபிய எல்லைப் பகுதியைத் தாண்டி ஜோர்தான் வான்பரப்பில் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இதன்போது விமானிகள் அறையில் இருந்த ஓமான் நாட்டைச் சேர்ந்த துணை விமானி, மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் தலைமை விமானியான ஸ்மித் மச்சரைத் தாக்கியுள்ளார். தலைமை விமானியைக் காயப்படுத்திய பின்னர், விமானத்தின் கட்டுப்பாட்டைத் தனது வசப்படுத்திய துணை விமானி, விமானத்தைத் தரையில் மோதி வெடிக்கச் செய்யும் நோக்கில் வெறும் 30 விநாடிகளில் சுமார் 14 ஆயிரம் அடி வரை செங்குத்தாகக் கீழ்நோக்கி இறக்கியுள்ளார்.

விமானம் கட்டுப்பாடின்றி சரிந்தமையினால் பயணிகள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்ட நிலையில், காயமடைந்த நிலையிலும் தலைமை விமானி ஸ்மித் மச்சர் துணை விமானியுடன் போராடி விமானத்தின் கட்டுப்பாட்டை மீளப் பெற முயற்சித்துள்ளார். அதேநேரம், அவசர சமிக்ஞை அனுப்பப்பட்டு காக்பிட் கதவு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானத்தில் பயணித்த இஸ்ரேலிய படையினர் மற்றும் ஏனையோர் உள்நுழைந்து தாக்குதல் நடத்திய துணை விமானியை மடக்கிப் பிடித்துக் கட்டியுள்ளனர்.

விமானம் கடத்தப்பட்டமைக்கான சர்வதேச அபாய சமிக்ஞை இஸ்ரேலிய கட்டுப்பாட்டு அறைக்குக் கிடைத்ததையடுத்து, இஸ்ரேலிய வான்படையின் அதிநவீன போர் விமானங்கள் உடனடியாக மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. எனினும், காயமடைந்த தலைமை விமானி மற்றும் பயணிகளின் துரித நடவடிக்கையினால் விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விமானத்திற்குள் நுழைந்த சவூதி அரேபிய பாதுகாப்புப் படையினர் குறித்த ஓமான் நாட்டுத் துணை விமானியைக் கைது செய்தனர்.

இச்சம்பவம் சாதாரண முரண்பாடு அல்லவென்றும், இஸ்ரேலிய பிரஜைகளைக் குறிவைத்து ஒட்டுமொத்த விமானத்தையும் தகர்க்க முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதச் சதி முயற்சி என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் மொசாட் புலனாய்வு அமைப்பு கூட்டாகத் தெரிவித்துள்ளன.

தபூக் விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பயணிகளைப் பாதுகாப்பாகத் தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பல நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியத் தலைமை விமானியின் சாதுரியமான செயற்பாட்டிற்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.