இங்கிலாந்து மற்றும் மிட்லாண்ட்ஸின் சில பகுதிகளில் அதிக பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எச்சரித்து மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (27) அதிகாலை விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை பிற்பகல் 2 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு நோக்கி நகரும் கனமழை, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தின் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில பகுதிகளில் 3 சென்டிமீட்டர் வரை பனி படியக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக வீதிகள் மூடப்படுதல், பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்படுதல் மற்றும் பனியால் வழுக்கி விழுந்து காயமடையும் அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வட அயர்லாந்திலும் உறைபனி தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
