செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை கிரேக்கத்தில் தைத்த முள்!கிரேக்கத்தில் தைத்த முள்!

கிரேக்கத்தில் தைத்த முள்!கிரேக்கத்தில் தைத்த முள்!

2 minutes read

ஒரு பெரிய மலையுச்சியில் – வெள்ளை வெளேரென்று தூண்கள் எவ்வளவு அழகாகக் காட்சியளிக்கின்றன.

பல்லாயிரம் வருடம் முன்னர் எழுந்த நாகரிகத்தின் சின்னங்களை எப்படி பாதுகாக்கின்றனர் கிரேக்கர்கள்.

‘அக்ரோபலீஸ்’சை பார்க்கும்போதெல்லாம்… அருகில் செல்லும்போதெல்லாம்… அந்த மேதை சோக்கரட்டீசின் ‘உன்னையே நீ அறிவாய்’ என்ற வார்த்தைகள் காதில் ரீங்காரமிடுகின்றன.

மனித குலத்தின் மேம்பாட்டிற்கு எவ்வளவோ அள்ளி வழங்கியுள்ளது கிரேக்க நாகரீகம்.

எந்தத் துறையை எடுத்தாலும் அவர்களது அத்திவாரத்தில்தான் அந்தந்த துறை கட்டப்பட்டுள்ளது என்பதை பலர் அறிவார்.

கண்கள் கட்டப்பட்டு… கையில் தராசுடன் நீதி தேவதை ‘தேமிஸ்’ எவ்வளவு தத்ரூபமாக சிலை வடிக்கப்பட்டிருக்கிறாள்.

 

பல்கலைக்கழகம் என்ற பெயரையே உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவனும், போலியின் போலியை நாடு கடத்துங்கள் என முழங்கியவனுமான பிளேட்டோ சிரித்துக் கொண்டிருக்கிறான்.

‘பிற்கூற்றிலிருந்துதான் முற்கூற்றின் உண்மை நிரூபணமாகிறது என்று சொன்ன அரிஸ்டாடிலின் அளவையியல் தத்துவம் எப்படி இங்கே பொருத்தமாகிறது எனச் சிந்தித்தபடியே ஏதென்ஸ் தெருக்களில் நடந்து கொண்டிருக்கிறேன். அருகில் என் மகனும் தெரு வீதியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இழவிண்டு கொண்டு வருகிறான்.

அவன் கேட்கும் கேள்விகள் ஏராளம். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வது மாபெரும் கடினம் எனினும் முடிந்தவரை முயன்று கொண்டிருக்கிறேன்.

கிரேக்க புராணங்களில் வரும் ஏராளமான தெய்வங்களுக்கெல்லாம் சிலை வடித்து வைத்திருக்கிறார்கள்.

அவற்றில் ஏதோ ஒன்றைக் காட்டி இது யார்? என்று என்னைக் கேட்பான். நான் பதிலுக்கு திண்டாடும்பொழுதுதான் கற்றது கை மண்ணளவு என்ற ஞானம் உதிக்கும். எனினும் சமாளிப்புக் கலையை சமுத்திரமளவு கற்றதனால் அது அடிக்கடி உதவிக் கொண்டிருந்தது.

விடுமுறையை எப்படிக் கழிக்கலாம் என்ற எண்ணம் வந்தபொழுது பாபிலோனியா நாகரீகம் எப்படி இருந்திருக்கும் எனப் பார்வையிடலாம் எ‌ன்ற எண்ணம் எழுந்தது.

 

உலகின் தொன்மையான நாகரீகங்கள் இரண்டு. சிந்துவெளி நாகரீகம், பாபிலோனியா நாகரீகம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சிந்துவெளி நாகரீகத்தில்தான். மற்றைய நாகரீகம் எப்படி இருந்திருக்கும் என்ற ஆர்வம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அந்த ஆர்வம் இம்முறைதான் சாத்தியமாகிறது என்பதில் உள்ளூர ஒரு சிறிய ஆனந்தம்.

ஏதென்ஸ் நகரைச் சுற்றிப்பார்த்து விட்டு ஏதாவது ஒரு தீவில் போய் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வரலாமென முடிவு செய்தேன். பல அழகிய தீவுக்கூட்டங்களையும் கிரேக்க நாடு கொண்டிருந்தது.

ஏதென்சிலிருந்து ஐந்து மணித்தியாலங்கள் ஒரு சிறிய கப்பலில் பயணம் செய்தால் பாரஸ் எனும் தீவை அடையலாம் என்றார்கள்.

சரி, அங்கேயே போகலாம் என முடிவெடுத்து ஏகப்பட்ட உல்லாசப்பயணிகளுடன் நாங்களும் சேர்ந்து கொண்டு பயணித்தோம்.

நீலமும் வெள்ளையுமாய் அழகிய ஒரு தீவு அது. அத்தீவிலுள்ள வீடுகள் எல்லாவற்றிற்கும் வெள்ளைச் சுண்ணாம்புதான் அடித்திருக்கிறார்கள். நீல வானமும் சுற்றுவர நீலக் கடலும் இடையிடையே வெள்ளை வீடுகளுமாய் காட்சியளிக்கிற அத்தீவை நீலவெள்ளைத் தீவு எனப்பெயர் சூட்டியிருக்கலாம்.

அந்தத் தீவிலும் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் நிலத்தைத் தோண்டி பாபிலோனிய நாகரீகத்தின் வேர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

நன்றி : க.ஆதவன் (டென்மார்க்) | வெப் துனியா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.