கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள இரணைத்தீவு மக்கள் தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 359 ஆவது நாளான தங்களது சொந்த நிலமான இரணைத்தீவுக்கு சென்று தொடருகின்றார்கள்.
கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டமானது தீர்வுகள் எதுவும் இன்றி தொடர்ந்த நிலையில் இன்று ஜம்பதுக்கு மேற்பட்ட படகுகளில் நூற்றுக்கணக்கான இரணைத்தீவு மக்கள் தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவுக்குச் சென்று அங்கு தங்கியிருந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இரணைமாதாநகரிலிருந்து மக்கள் மீன்பிடி படகுகளில் அருட்தந்தையர்களுடன் இரணைத்தீவுக்கு சென்று தேவாலயத்தில் வழிபாட்டுடன் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்
தங்களின் போராட்டத்திற்கு நல்லாட்சி அரசு முதல் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வரை எவரும் கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டனர் எனவேதான் நாங்கள் எங்கள் சொந்த நிலத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்து போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்து அதனை மேற்கொண்டுள்ளோம். நாங்கள் எங்களது பூர்வீக நிலத்திலிருந்து வெளியேறப் போவதில்லை கடற்றொழில் நடவடிக்கைகளையும் இரணைத்தீவிலிருந்தே மேற்கொள்ளவும் இருக்கின்றோம் எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
1992 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக இரணைத்தீவில் இருந்து வெளியேறிய மக்கள் இரணைமாதாநகர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் பூர்வீக நிலத்தை விட்டு வெளியேறிய நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் நெருக்கடிக்குள் வாழ்ந்து வந்த நிலையிலேயே கடந்த வருடம் மே மாதம் முதலாம் சொந்த நிலத்திற்கு செல்வதற்கான போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.






