கேள்வி – வடக்கில் இராணுவத்தின் வசம் இருந்த 92 சதவிகிதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளதே? இது உண்மையா?
பதில் – புளுகு, அண்டப்புளுகு, புள்ளிவிபரங்கள் என்று கூறுவார்கள் (Lies, Bloody lies and Statistics). அதுபோல்த்தான் இவ்விடயம் அமைகின்றது. நாங்கள் பதவிக்கு வந்த போது அதாவது 2013 கடைசியில் வலிகாமம் வடக்கில் சுமார் 6500 ஏக்கர் மக்கள் காணி இராணுவத்தினர் கைவசம் இருந்தது. இப்பொழுது அவற்றில் ½ வாசி மட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கையளித்துள்ளார்கள். அதை 92 சதவிகிதம் என்று கூறுவது தாங்கள் 2009ல் கைவசம் வைத்திருந்த காணிகளின் விகிதாசார அடிப்படையில் தற்போது 8 சதவிகிதமே மிகுதி உள்ளதென்பதையே அவர்கள் கூறுகின்றார்கள். இது யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் மட்டுமே.
நாம் பதவியேற்ற போது 65000 ஏக்கர் காணிகளை வடமாகாணம் முழுவதிலும் படையினர் கையகப்படுத்தி வைத்திருந்தார்கள். அவற்றுள் பெரும்பான்மை அரச காணிகள். அவற்றைப் பற்றி எதுவும் கூறாமல் 92 சதவிகிதம் கையளித்து விட்டதாகக் கூறுவதன் அர்த்தம் அரச காணிகளைத் தாம் தான்தோன்றித்தனமாய் ஆயிரம் வருடங்களுக்குந் தொடர்ந்து வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில். சுமார் 60000 ஏக்கர் வடமாகாணக் காணிகள் இப்பொழுதும் படையினர் வசம் இருக்கின்றன என்பதே எமக்குத் தரப்பட்ட ஏற்றுக் கொள்ளக்கூடிய புள்ளி விபரங்கள்.
