பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மகன் சுப்பிரமணியன்-புவனேஸ்வரி ஆகியோர் திருமணம் புதன்கிழமை மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்கள் யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்படாமல் ரகசியமாக இத்திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் வடிவேலு.
தனது மனைவி வழி உறவினப்பெண் தான் மணமகள். இத்திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் பெண் வீட்டார், சொந்தஊரான மதுரை ஐராவதநல்லூரிலுள்ள நெருங்கிய நண்பர்கள் சிலருக்கு மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். சினிமாத்துறையில் தெனாலிராமன் பட இயக்குநர் யுவராஜ், அமீரின் உறவினரும் இயக்குநருமான ஆதம்பாபாவும் பங்கேற்றனர்.
அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு வடிவேலு தரப்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதுடன், முடிந்தால் யாருக்கும் தெரிவிக்காமல் திருமணத்தில் தாங்கள் மட்டும் வந்து கலந்து கொண்டு ஆதரவு கொடுக்க வேண்டும் என தொலைபேசியில் வடிவேலு தெரிவித்ததால், அவர்கள் யாரும் திருமணத்திற்கு செல்வதை தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மணமேடையில் நிற்பதையும், திருமண மேடையில் மணமக்கள் உறவினர்களுடன் புகைப்படம் எடுப்பதையும் அவர் தவிர்த்ததாக கூறப்படுகிறது. மங்களநாண் பூட்டும் போது மட்டும் மேடையில் மணமக்களுடன் சிறிது நேரம் இருந்த அவர் பின்னர், திருமண மண்டப மணமகன் அறையிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிட்டாராம்.
நீதிமன்றம் அருகில் பரபரப்பான இடத்தில் விழா நடைபெற்றபோதும், வடிவேலு வீட்டு திருமணம் என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியாத வகையில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் எந்த இடத்திலும் வடிவேலு பெயர் இடம்பெறவில்லை.
ஏற்கனவே, ஓராண்டுக்கு முன்பு மதுரை கேகே நகரில் மகளின் திருமணத்தை வடிவேலு சப்தமின்றி நடத்திய நிலையில், மகன் திருமணத்தையும் புதன்கிழமை மிக ரகசியமாக நடத்தியிருக்கிறார் வடிவேலு.