******************
என்னை இழந்தேன்.
என்னோடு இருந்த
எல்லாம் இழந்தேன்.
நந்திக்கடலின் கரையில்.
நந்திக் கடலே உன்னை
நான் மறப்பேனா?…
எப்படி மறந்து நான்
வாழ்ந்து போவேன்.
சொந்தம் செத்து
தொலைந்ததும் கூட
உன் கரையில் தான்.
சவரோடு சவமாகி.
தலை இழந்தோர்
அவர் கூட நானும்
தலைவனை இழந்தேன்.
உன் கரையில் தான்.
மூச்சு முட்டி அதை
விட்டு விழுந்ததும்
விரல் விட்டு எண்ணும்
தொகையில் போராடியதும்.
என்ன செய்வோம் நாம்.
ஏங்கிக் கிடந்திட தான்
ஏதுமில்லா ஏதிலியாகி
ஈழத்தமிழர் தவித்திட.
ஏற்றிவந்த குண்டை
கொட்டி விட்டுப் போக
கொக்கரித்து வந்து
எம் மீது சுட்டெரித்ததும்.
என்ன பாவம் செய்தோம்.
பசி கிடந்தும் நாம்
கஞ்சிக்கு ஏங்கி தான்
வரிசையில் நின்றோம்.
எல்லாம் இருந்தது
எங்களிடமும் தான்.
சன்சூவின் தத்துவம்
எம் மீது பாய்ந்ததோ?
எங்கே எமக்கது என்ன
தெரியாத செய்திட.
தவிர்த்து கிடந்தோம் நாம்
தவிர்க்காது துயரை.
வலி தாங்கியும் நாம்
கூவி அழைத்தோம்.
உலகத்து மக்களை எமை
காத்திட கெஞ்சினோம்.
கைவிட்டுப் போக
பறி போனது இங்கே.
பல்வளம் அதுகூட
இன்று நம்மிடம் இல்லை.
குண்டில் சிக்கிய
உடல்கள் சிதறின.
அதன் அருகில் தான்
உண்டு உறங்கினோம்.
நீலக் கடலும் கூட
செந்நீரால் தோய்ந்து
தமிழின அழிவையும்
அழகாக்கிப் போனது.
வணங்கா மண்ணும்
வந்து திரும்பியது.
எதையும் தந்து போகாது.
வெந்து போனோம் நாம்.
கையில் பாதி இழந்து
கால்கள் இரண்டும்
குண்டால் இழந்து போக
உடல் சிதைந்து போனது.
சிறு காயமும் கூட
துளையிட்டு உடல்
குருதி சிந்தி நம்மில்
பலர் மாண்டிட தான்.
மருந்தின்றி தவித்திட
மனமுடைந்து மாண்டவரும்
நந்திக்கடலே நடந்து
உன்கரையில் தான்.
இன்று கூட என் கண்
செந்நீரால் நிறைந்து
மண்ணில் சிந்திடினும்
ஏந்திட யார் வருவாரோ?
நந்திக்கடலே!…..
நின்று வாழும்
உன்னைப் போல்
பட்டபாடு எப்படி மறக்கும்?
நதுநசி