நீ என தருகில் இருந்தால்
திட்டுக்களாலும் சண்டைகளாலும் பொழுதுகளை நீட்டியிருப்பேன்
பிறகு உந்தன் கண்ணீரால்
அன்பின் பெருவெளியை உணர்த்தியிருப்பாய்
எந்தன் கண்ணீரோ கங்கையாறாய் பெருகி உலகின் ஈறுவரை சென்று எந் நிலத்தின் மீதான யுத்தத்திற்கும் நீதி கேட்டிருக்கும்
ஓர் நாள் உனைப் பள்ளிக்கு
ஏத்திச் செல்கையில்
உனது கண்ணும் கங்கையானது
உனது ஆற்றின் பெரு ஊற்றை நானறிய எதற்காக அழுகிறாயென
அனுதாபத்தை விரித்து வைத்தேன்
என்னுடன் ஏன் நீ அன்பாயில்லை
நான் கறுப்பு வடிவில்லை என்பதாலா
எனச் சொல்லி
என் நெஞ்சில் குழந்தையானாய்
அன்றிலிருந்து
கறுப்புப் பிள்ளைகளில் என் நெஞ்சைக் கரைக்க லுற்றேன்
நீயும் கறுப்பென்பதால்
கண்ணம்மாவை என் கண்ணுக்குள்ளே
சுமக்கலுற்றேன்
தொலை பேசிக்குள் அவள் குரல் கேட்கையில்
என தருகில் அவள் கண்கள் பார்க்கையில்
நான் பரிசுத்த தேவனாகி
ஒரு அசுர மகிழ்வில் ஆனந்திக்கிறேன்
எதனாலிந்த அன்பு
என்னுள் ஆத்ம மானதென?
ஆகாய ஆராய்ச்சியை
விரித்து வைக்கையில்
அவளும் உன் போல் கறுப்புச் சிலை
கருணை மலர் என்பதால்
கண்ட றிந்தேன்
தெருக்களில் பள்ளிகளில்
சனங் கூடும் இடங்களிலும் என் கண்ணை பறவையாக்கி சிறகொடிப்பேன்
உன்னை எங்கேனும் காண்பேனோ என்ற ஏக்காத்தின் தாயாகி
அதிபர் பேசியதாய் ஓர் நாள் நீ நனைந்தாய்
என் முதல்ச் சம்பளத்தில்
குடையாய் நானோர் சப்பாத்தை தந்திருந்தேன்
இன்றோ!
அதை அணியும் உந்தன் கால்களின் சுவடுகள்
எங்கேனும் காண்பேனோ என மாத்தளன் வரை தேடி நான் நனைந்தேன்
இது காதம் உனைக் காணவேயில்லை
மாத்தளன் சென்று தனித்திருந்த மாதாவிடம் கேட்டேன்
என் தங்கையைக் கண்டாயா என?
அவளும் கள்ள மௌனத்தில் கண்மூடித் தானிருந்தாள்
வற்றாப் பளை சென்று அவளைக் காணாமல் ஆக்கிய
கயவர்களை எரிக்காயோ வெனக் கண்ணகியிடம் கேட்ட ழுதேன்
அவளும் அனல்க் கண்ணை அணைத்து வைத்தபடி தானிருந்தாள்
சுவை உணவு உண்ணும் போதும்
சுதந்திரமாய்ச் சிரிக்கும் போதும்
நானோர் சுய நல அழுக் கென
என்னை நானேதிட்டித் தீர்க்கிறேன்
நானோர் புத்தியுள்ள கள்ள னென
என்னை நானே வஞ்சிக்கிறேன்
உன்னைத் தொலைத்து
என்னைக் மீட்ட அந்தகன் நானென
வாழ்வைக் கடிகிறேன்
தங்கையே!
என் பெருவானம் கருகித் தகிக்கிறது
நீ காணாமல் ஆக்கப் பட்டு
நெடிய காலங்களால் உடைந்து கொண்டிருக்கிறேன்
உன்னைக் காணாமல்
ஆக்கிய. துச்சாதனர்களுக்கும் கூனியர் மற்றும்
சகுதிச் சாத்தான் களுக்கும் நீதிதேவதை
தன் நெருப்பின் தீர்ப்பை எழுதுகையில்
என் மகிழ்வுப் பூக்களை உன் பாதங்களில் சூடி என்னைத் தொலைப்பேன்
அதுவரை என் கண்ணீரைக் கவிதையாக்கி நிறைவேன்
இன்று கனவில் வந்தது போல்
என்றும் வா
கனவிலாவது உனைக் காண்பேன் நான்
இப்படிக்கு
நீ எங்கிருந்தாலும் நல முடன் வாழ இறைவனை இறைஞ்சும் நானுந்தன்
அன்பு அண்ணா
செல்லம்.
-த. செல்வா