இன்று (12) அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான AI 171 விமானத்தில் பயணித்த ஒருவர் உயிர்தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண் மற்றும் கைகளில் லேசான காயத்துடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற குறித்த பயணி, கீழே குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலை அகமதாபாத் பொலிஸார் வழங்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
விமானத்தில் பயணித்தவர்கள், குடியிருப்பு மற்றும் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியிருந்தவர்கள் என விபத்து நடந்த இடத்தில் இதுவரை சுமார் 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
விமானச் சிதைவுகளை அகற்றி, காயமுற்றோருக்குச் சிகிச்சை அளிக்க இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 130 அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தொடர்புடை LIVE update செய்திகள் : இந்தியாவில் இருந்து இலண்டனுக்கு புறப்பட்ட விமானம் 242 பேருடன் விபத்துக்குள்ளானது
விபத்துக்குள்ளான குறித்த விமானம், இலண்டன் – கேட்விக் விமான நிலையத்தை நோக்கிப் பயணித்தது. சுமார் 9 மணி நேரத்துக்கும் மேற்பட்டதான பயண தூரம் என்பதால் அதிகளவிலான எரிபொருள் விமானத்தில் இருந்தமையும் இந்த விபத்தை பாரதூரமாக்கியுள்ளது.
Live Updates
இன்று விபத்துக்குள்ளான அதே விமானத்தில் டெல்லியில் இருந்து அகமதாபாத் நோக்கிப் பயணம் செய்த ஆகாஷ் வத்ஷா எனும் பயணி, ஏர் இந்தியா விமானத்தின் நிலை குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அவர்," அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான அதே விமானத்தில்தான் டெல்லியில் இருந்து 2 மணி நேரத்துக்கு முன்பாக அகமதாபாத் வந்தேன். விமானத்தில் இருந்தபோது ஏதோ தவறாக நிகழ்வதை உணர்ந்தேன்.
“அந்த விமானத்தில் வழக்கத்துக்கு மாறான அம்சங்கள் இருந்ததைக் கவனித்தேன். விமானத்தில் இருந்த டிவி டிஸ்பிளே உள்ளிட்ட எதுவும் முறையாக வேலை செய்யவில்லை. கேபின் குழுவை அழைக்கும் பொத்தான், விளக்கு பொத்தான்களும் வேலை செய்யவில்லை.
இதனை ஏர் இந்தியாவை டேக் செய்து எக்ஸ் தளத்திலும் ஏற்கெனவே பகிர்ந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏர் இந்தியா விமான விபத்து வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்குத் துயரமளிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பாதிக்கப்பட்டோருக்கு உதவி வரும் அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் தாம் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த விபத்துச் சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகவும் பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார்.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என Tata குழுமம் அறிவித்துள்ளது.
அத்துடன், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்பதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதாகவும் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், சேதம் அடைந்த பி.ஜே. மருத்துவ கல்லூரி விடுதியை மீண்டும் கட்டுவதற்கும் முழு நிதியுதவி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tata குழுமம், பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இருக்கும் என்று அவர் உறுதியளித்தார்.