தனித்த மனதுள் வேதனை பெருக்கெடுக்கிறது
ஒற்றைப்பறவையாய்
மொட்டைப் பாறையில்
வெள்ளம் வடியக் காத்திருக்கிறேன்
தாளவில்லை இழப்பின் துயரம்
தோட்டாக்கள் நாகரிகத்தை தின்றன…
அதிகாரம் மனிதாபிமானத்தை நசுக்கியது…
வாழ்க்கை கேட்டவர்கள்
மரணத்திற்குள் தள்ளப்பட்டனர்….
பீதி
பயம்
பாதுகாப்பின்மை
நடுக்கம் பரவ
அழுகுரல்கள் பரவுகின்றன…
இது
இனியும்..
நீடிக்கக் கூடாது
கண்ணீர் சிந்தி
அரண்டு போன காலங்கள் முடியணும்..
என்ன செய்யப் போகிறோம்…?
கொதிக்கும் காலத்தை எதால் சாந்தப்படுத்தப் போகிறோம்…?
எப்படி இனி வாழப் போகிறோம்…?
இசைத்த காலங்கள் முடிந்து போயின
கோஷிக்கத் தருணம் உதிக்கிறது
சூடு பரவும் போது
இதயங்களின் போர்வைகளை விலக்குங்கள்.
அதர்மம் ருத்ர தாண்டவம் ஆடுகிறது
அவதாரங்கள் தோன்றாது
அவதாரங்களாய் நாம் மாறணும்.
மிரட்சியூனாடக பயணிக்கிறேன்
தனிமையின் துணை சுமையாயிருக்கிறது.
வசந்த தீபன்
சிற்பங்கள் : றாம் சந்தோஷ் வடார்க்காடு