இங்கிலாந்தின் தேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் சேவையின் பிரதான கட்டுப்பாட்டு மையமொன்றில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வட இங்கிலாந்தின் பல விமான நிலையங்களில் விமான சேவைகள் பெரும் தாமதத்தை எதிர்நோக்கியுள்ளன.
ஸ்கொட்லாந்திலுள்ள பிரெஸ்ட்விக் (Prestwick) கட்டுப்பாட்டு மையத்திலேயே இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக NATS நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
விமானப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வான்வழிப் போக்குவரத்து ஒழுங்குவிதிகள் உடனடியாக அமுல்படுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசல் மட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், நிலமையைத் துரிதமாகச் சீர்செய்வதற்குப் பொறியியலாளர்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இம்மாத முற்பகுதியில் அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களுடன் தற்போதைய பிரச்சினைக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்போது மான்செஸ்டர் நகருக்கு தெற்குப் பகுதியிலுள்ள விமான நிலையங்கள் பெரும்பாலும் பாதிக்கப்படாமல் இயல்பு நிலையில் காணப்பட்ட போதிலும், வடக்கு நோக்கிப் பயணிக்கும் விமானங்களும் ஸ்கொட்லாந்து விமான நிலையங்களிலிருந்து புறப்படும் விமானங்களும் தொடர்ந்தும் தாமதத்தை எதிர்நோக்கி வருகின்றன.
இதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள கட்டுப்பாட்டுச் சேவை நிர்வாகம், பயணிகள் தத்தமது விமான சேவை நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, விமானப் பயண நேரங்கள் குறித்த சமீபத்திய விபரங்களை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.