Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சிறுகதை | வாழ்வு வதையாகி…..| நிவேதா உதயராஜன்

சிறுகதை | வாழ்வு வதையாகி…..| நிவேதா உதயராஜன்

6 minutes read

பரமேஸ்வரி படுக்கையில் கண்விழித்துச் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். இது தன் வீடு இல்லை என்பதுமட்டும் தெரிகிறது. கண்களைச் சுழலவிட்டு அவ்விடத்தை அடையாளம் காண முற்பட்டாலும் எதுவும் நினைவில் வர மறுக்கிறது. பிள்ளைகள் எங்கே ஒருவரையும் காணவே இல்லை. தாகம் எடுப்பதுபோல் இருக்கிறது. யாரையாவது கூப்பிட வேண்டும் என எண்ணி கூப்பிட எத்தணிக்கிறாள். வாயிலிருந்து வார்த்தைகள் ஏதும் வரவில்லை.
என்ன இது தொண்டை அடைக்குதே. யாருமில்லையா என எண்ணியவளுக்கு பதட்டம் வந்து ஒட்டிக்கொள்ள தலையைத் திருப்பி அங்குமிங்கும் பார்த்தபடி எழ முயல்கிறாள். அதுவும் முடியவில்லை.பதட்டம் மேலும் அதிகரிக்க இரு கைகளையும் கண்டபடி அசைத்ததில், மேசையில் இருந்த எதோ ஒன்று கீழே விழுந்து சத்தம் எழுப்பியதில் பக்கத்து அறையில் இருந்த தாதி ஓடிவந்து பார்க்கிறாள்.

ஓ உனக்கு நினைவு திரும்பிவிட்டதா? என தனக்குத்தானே கேட்டபடி கொஞ்சம் அமைதியாக இரு என ஆங்கிலத்தில் கூறியபடி பரமேஸ்வரியின் நெஞ்சில் தட்டி அவளைச் சமாதானப் படுத்துவதுபோல் தலையை அன்புடன் வருடிக் கொடுக்க, பரமேஸ்வரியின் கண்களிலிருந்து கண்ணீர் இருகன்னங்களிலும் வழிகிறது. வாய் திறந்து தன் மகன் எங்கே எனக் கேட்கிறாள். வழமைபோல் காற்றே தொண்டைக்குழியில் இருந்து வெளிவருகிறது. உன் பிள்ளைக்கு போன் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு தாதியும் இவளுக்குச் சைகை மூலம் கூறிவிட்டுச் செல்கிறாள்.

பரமேஸ்வரிக்கு கடந்த ஒருவருடங்களாகவே இந்த நிலை. கடந்த வருடம் கணவன் இறந்தபின் மற்றவர்கள் போல் இவள் தொடர்ந்து அழுதுகொண்டு இருக்கவில்லை. செத்தவீட்டுக்கு வந்தவர்களுக்கு அது ஒருமாதிரியாக இருந்தாலும் கணவர் இறந்துவிட்டார் என்று மூத்த மகன் கூறியபோது தன்னையும் மீறி ஏற்பட்ட அதிர்ச்சியில் குளறி அழுதவள்தான். அதன் பின் கண்ணீரே வரவில்லை. தாய், ஆட்கள் வரும்போதெல்லாம் அளவில்லை என்பது மூத்த மகனுக்குக் குறையாக இருந்திருக்க வேண்டும். அம்மா, ஆக்கள் வந்தால் நான் கதைக்கிறன். நீங்கள் உள்ளேயே படுத்திருங்கோ என்றது பரமேஸ்வரிக்குப் பிடிக்கவில்லை ஆயினும் பிள்ளைகள் சொல்வதற்கு மறுத்துப் பேசிப் பயனில்லை என்றதனால் அதன் பின்னர் மகன் கூப்பிடாது வெளியே வரவே இல்லை.

கட்டிலில் படுத்திருந்த பரமேஸ்வரி, கணவனின் கட்டளைகளுக்குப் பயந்து பயந்து வாழ்ந்த காலங்கள் போய் இப்ப பிள்ளைகளுக்குப் பயந்து வாழும் நிலைக்கு வந்துவிட்டது நிலைமை என எண்ணிச் சோர்வுற்றாள். இப்ப கொஞ்ச நாட்களாக பேரனும் இவளை எதிர்த்துக் கதைக்கிறான். மொத்தத்தில் எனக்கென்றொரு ஆசாபாசங்களின்றி கணவன், பிள்ளை, பேரப்பிள்ளை என தொடர்ந்தும் தான் மற்றவர்களின் வழிநடத்தலிலேயே வாழ்ந்துகொண்டிருப்பதை நினைக்க ஒருவகைச் சோர்வு அவளை ஆட்கொண்டது.

பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில். கணவனும் பென்சன் எடுத்தபின் கொஞ்சநஞ்சம் இருந்த சுதந்திரமும் பறிபோய்விட, மற்றவர்களைப் போல்தானே தன் நிலையும் என தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். இத்தனை காலம் வாழ்ந்தாகிவிட்டது.  இனி என்ன ஒரு பத்தோ பதினைந்தோ ஆண்டுகள் பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கவேண்டியதுதான் எனத் தன்னையும் தேற்றியும் கொண்டாள்.

அடுத்துவந்த காலங்களில் கணவனின் வார்த்தைகள் கடுமையாகி இவள் மனதை வேதனைப் படுத்தினாலும் என்னசெய்வது தன் தலைவிதி என்று இருப்பதை விட அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை. வீட்டில் இருக்கும் கணவன் முன்னரிலும் அதிகாரமாக தேத்தண்ணி கொண்டுவா, சாப்பாடு கொண்டுவா, உடுப்பு அலம்பிப் போட்டியோ என்று சிறு பெண்ணை எவுவதுபோல் வேலை வாங்குவதும், இந்த வயதிலும் இவள் வேறு வழியின்றிச் செய்தாலும் கூட, சமீப காலமாக எங்க இவ்வளவுநேரம் போனனி??எவனோட கதைச்சுக்கொண்டு நிண்டனி என்று கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாது அப்பால் சென்றாலும், ஓ உனக்கு பதில் சொல்லக் கூட நேரம் இல்லையோ என்று ஆண் என்னும் அகம்பாவத்தில் வீசப்படும் கற்களை மீண்டும் இவளால் எறிய முடியும்தான். ஆனாலும் தன் கணவனுக்கும் தனக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடும் என்று பேசாமல்த்தான்   இருந்தாள்.

ஒருநாள் களைத்து விழுந்து சந்தைக்குப் போய்விட்டு வந்தபோது, சந்தையிலை ஆரோட நிண்டு கதைச்சிட்டு வாறாய் இவ்வளவு நேரமா எண்டதுக்கு என்றுமில்லாமல் இவளுக்குக் கோவம் வந்தது. ஓம் ஊரில உள்ள எல்லாரோடையும் நிண்டு கதச்சிட்டுத்தான் வாறன். வயது போனா நாக்கு நரம்பு கூடச் செத்துப் போகுமோ என்று இவள் கொஞ்சம் உரத்தே கேட்டதில் அதன் பிறகு கணவனின் உறுக்கல்கள் அடங்கிப்போயின. இவளுக்கே கூட அது அதிசயமாகவே இருந்தது. இப்படித் தெரிஞ்சிருந்தால் முதலே இந்த குத்தல் கதைகளை நிறுத்தியிருக்கலாமே என்று கொடுப்புக்குள் சிரிப்பும் எட்டிப் பார்த்த்தது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பிள்ளைகள் இவளையும் கணவரையும் கனடா  அழைக்க, இவளுக்கு பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் இருக்கும் சந்தோசத்தில் உடனே புறப்பட்டுவிட்டாள். கணவனுக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லையாயினும், சரி ஒருக்கா வெளிநாட்டையும் பாத்திட்டு வருவம் என்னும் ஆசையும், பரமேஸ்வரி இல்லாது தான் தனிய அங்கே இருந்து ஒன்றும் செய்யவும் முடியாது என்ற உண்மையும் புலப்பட அவரும் புறப்பட்டுவிட்டார்.

470_bc_seniors_111025

அங்கு போய் இரண்டு மாதங்கள் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் தலையில் வைத்துக் கொண்டாடினார்கள் தான். இவளுக்கும் சமையல் வேலை, வீடுவாசல் கூட்டும் வேலை எதுவும் இல்லாது சும்மா இருந்து சாப்பிடுவதும், மிகுதிநேரம் எல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதுமாகக் கழிந்ததில் முகத்தில் ஒரு பளபளப்புக் கூட வந்திருந்தது இருவருக்கும். இவ்வளவு நாட்கள் நான் பட்ட கஷ்டத்துக்குத் தான் கடைசி காலத்தில் கடவுள் தனக்கொரு நல்ல வழி காட்டியதாக மகிழ்ந்திருந்த வேளையில், அதிகம் ஆசைப்படுகிறாய் எனப் பிள்ளைகள் சொல்லாமல் சொன்னார்கள்.

இருவரையும் ஒன்றாக வைத்திருப்பது தனக்குக் கஷ்டம் என்று தம்பி அண்ணனிடம் புலம்ப, நானும் இருவரையும் ஒன்றாக வைத்துக்கொள்ள முடியாது. தன் மனைவிக்கு அது கரைச்சல். எனவே ஆளுக்குப் பாதியாக, ஒருவரை ஒருவீட்டிலும் மற்றவரை ஒருவீட்டிலுமாக வைத்துக்கொள்வது என முடிவு செய்து, அம்மா நாளைக்கு உங்கட உடுப்புக்களை அடுக்கிக் கொண்டு என்ர வீட்டை வாங்கோ. பிறகு மூண்டு மாதம் கழிய தம்பியிடம் வந்து நிக்கலாம் என்று மூத்த மகன் கூற, மூத்தமகனுடன் போய் நிக்கும் மகிழ்வில் நெஞ்சம் முழுதும் மகிழ்வு முட்ட சரி என்றவளை அடுத்து மகன் கூறிய வார்த்தைகள் திடுக்கிட வைத்தன.

அப்பா தம்பியுடன் நிக்கட்டும். மூண்டுமாதம் கழிய நீங்கள் தம்பியிட்டைப் போக அப்பா என்னட்டை வந்து நிக்கலாம் என்றான் ஆசையாகப் பெற்று வளர்த்த மூத்த மகன். இந்த ஐம்பது வருட கணவனுடனான வாழ்வில் ஒருநாளும் கணவனைத் தனியே விடவில்லை. என்ன தான் கணவன் தன்னைத் திட்டினாலும் தன்மேல் இருக்கும் பிரியமும் அவள் அறிந்ததுதான். தானில்லாமல் அந்தாள் என்ன செய்வது என்னும் ஏக்கம் எட்டிப் பாக்க, கணவனிடம் சென்று மகன் கூறியதைக் கூறியதும், கணவனின் முகத்தில் தெரிந்த திகைப்பு அவளுக்கு வேதனையைக் கொடுத்தது.

நாங்கள் ஊருக்கே திரும்பிப் போவம் என்று கணவன் கூறியவுடன் இவளுக்கும் அதுதான் சரி என்று தோன்றினாலும் கூட, பிள்ளைகளைப் பேரப்பிள்ளைகளை விட்டு இருவரும் தனியாகச் செல்ல பரமேஸ்வரிக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. அங்க போய் நாங்கள் இரண்டுபேரும் தனிய இருக்கிறதுக்கு இங்கை இவையின்ர முகத்தைப் பாத்துக் கொண்டாவது இருப்பம் அப்பா எனக் கணவனைச் சமாதானப் படுத்த முனைந்தாள்.

ஓராண்டு ஓடுமுன்னர் இருவருக்குமே வாழ்வு வெறுத்துவிட்டது. ஆரம்பத்தில் இருவரும் சுகம் விசாரிப்பது தொலைபேசியில் என்றது, மருமக்களின் நமட்டுச் சிரிப்பில் இல்லாது போய், எப்பவாவது இரு குடும்பங்களும் சேரும் நாட்களில் இவள் கணவனை ஆசைதீரப் பார்ப்பதும் பேசுவதுமாக நாட்கள் நகர்ந்தன.

ஆறுமாதத்தில் கணவன் ஒருநாள் தொலைபேசியில் தன்னால் வடிவாக நடக்க முடியாமல் இருக்கு நீ மேனிட்டைச் சொல்லிப் போட்டு இங்க வா என்றதும் இவள் துடித்துப் பதைத்து மகனிடம் கெஞ்சி மூத்த மகன் வீட்டுக்குச் சென்ற போதுதான் கணவன் மனதாலும் நிறையப் பாதிக்கப் பட்டிருப்பது தெரிந்தது. முன்பெனில் இவர் எனக்குச் செய்ததுக்கு இவருக்கு வேணும் என்று எண்ணியிருப்பாள். இப்பொழுது இவளின் நிலையும் அதே போலானதில் கணவன்மேல் அளவிடமுடியாப் பச்சாதாபம் மேலோங்க என்ன செய்வது என்று தெரியாது தவித்தாள்.

வீட்டை விட்டு இறங்குவதில்லை. குளிர் கூடினால் என்ன?? தொலைக்காட்சியைப் பார்த்த்துக்கொண்டே இருக்கிறது. அதுதான் உப்பிடி என்று மூத்த மகன் கூறுவதைக் கேட்டதும், தம்பி நாங்கள் ரண்டு பெரும் ஊரிலேயே போய் இருக்கிறம். உங்களுக்கும் கரைச்சலில்ல. எங்களை அனுப்பிவிடெடா  எனத் துணிவை வரவழைத்துக் கொண்டு கூறியும் பயனின்றிப் போனது. அங்க இருக்கிற வீட்டை வித்து நானும் தம்பியும் காசை எடுக்கப் போறம். அதுக்கு ஒழுங்கு செய்திட்டம். அங்க போய் நீங்கள் எங்க இருக்கப் போறியள் என்று கூறிவிட்டு இவள் பதிலுக்கும் காத்திருக்காமல் செல்லும் மகனை வேறு வழியின்றிப் பார்த்துக்கொண்டு இருக்கத்தான் இவளால் முடிந்தது.

என்ர பென்சன் காசில நாங்கள் சீவிச்சுப் போட்டுப் போவம். இவை என்ன எங்களுக்குப் பிச்சை போடுறது என்று கணவனின் சத்தம் இவளை சுய நினைவுக்குக் கொண்டுவர, சத்தம் போடாதைங்கோ அப்பா. நாங்கள் இருக்கப்போறது இன்னும் கொஞ்சநாள். அதுக்குள்ளை பிள்ளையளோட சண்டை பிடிச்சுக்கொண்டு….. விடுங்கோ அப்பா என்று இவள் சமாதானப் படுத்தியும் மயிலரின் மனம் ஆறவில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ என்னெண்டு உன்ர பேரை மாத்துவாய். என்ர பேரை எல்லோ இன்சூரன்சில குடுத்தனான் என்று மூத்த மகன் கூற, காசு கழிபடுறது என்ர எக்கவுண்டில. அம்மா செத்தா காசு எடுக்கிறது நீயோ. என்னை என்ன கேணையன் எண்டு நினைச்சிட்டியே அண்ணா. உனக்குக் காசு வேணுமெண்டால் நீயும் அம்மாவின்ர பேருக்கு ஒரு லைப் இன்சூரன்சைப் போட்டு மாதாமாதம் காசுகட்டு. நான் வேண்டாம் எண்டு சொல்லேல்லை. என்ர காசுக்கு ஏன் ஆசைப்படுறாய் என்று மாறிமாறி இரு மகன்களும், அது மருத்துவமனை என்பதையும் மறந்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதை, நினைவு மீண்டும் திரும்பிய பரமேஸ்வரியின் செவிகள் கேட்டு அருவருப்புற்றன.

இருவரையும் வளர்த்து ஆளாக்க எத்தனை கஷ்டப்பட்டோம். நான் செத்தவுடன் யாருக்குக் காசு என்று என்முன்னாலேயே பேசும் இவர்கள் என்ன பிறப்புக்கள் என்று மனதில் எண்ணியவாறே, ஆசையாகப் பார்க்க எண்ணிய பிள்ளைகளைப் பார்க்க ஆசைகொண்ட மனத்தைக் கட்டுப்படுத்தி கண்களைத் திறக்காமலே படுக்கையில் கிடந்தாள். ஆனால் அவளையும் மீறி வழியும் கண்ணீரை நிறுத்த அவளால் முடியவே இல்லை.

 

Nivetha   நிவேதா உதயராஜன்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More