
ஏன்??????
எதற்கு?????
காரணங்கள்
விடையற்றதாய்……
துளையிட முடியாத சுண்ணாம்பு சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட
மூட்டைப்பூச்சி நான்
இடம்
இருக்கை
அத்தனையும்
அதற்குள்ளே முடிந்து விடும்………….
மாதமும் கிழமையும்
திகதியும் மறந்தாகினும்,
நகவிரலின் கீறுகள் வரைந்த கோடுகள் ஆண்டுகள் பல என்று கணித்துவிடும்…
சூரியனும் சந்திரனும்
ஒளிதர வெறுக்கும் மயானமது
கண்கள் இருந்தும்
பார்க்க இயலாத குருடன் ஆக்கப்பட்டதால்,
பூச்சியும் புழுக்களும் இருப்பிடம் கொள்ளும் அறையில் கீழே விரிக்கப்பட்ட சிறு துண்டின் மேல் தலையணையாய் என் கைகள்
மலவறையில் குடிகொள்ளும்
இரத்தப்பருகி நுளம்புகளுக்காக உடல்
சப்பாத்தின் ஒலிகளும் மிரட்டல்
சத்தங்களும் எனக்கு மனப்பாடம்
அலறல் அழுதல் அதற்கு மேலாக…
துணியற்ற உடம்பிலே
எலும்புகளின் சிதறல்கள்
உருக்குலையாத உயிர் மட்டும் மீதமாய்..
ஏன்
எதற்காக
காரணங்களின் விடைகளை எனக்குள் மட்டுமே தேடியாக வேண்டும்
இப்படிக்கு
காணாமல் ஆக்கப்பட்டோன்
முல்லையின் ஹர்வி