இரவு முழுதும்
கதைகள் பேசியபடியே
நானும் அவனும் இருந்தோம்..
கீழிறங்கி தரைவழிக் கடையில்
உணவருந்தினோம்..
உனக்காகவே
வழித்துணையாகவும் ஊரிலிருந்து
வந்தேன் என்பதை உணர்ந்திருப்பாய்..
தெருக்கோடிக்கடையில்
தொங்கிய அன்றைய
நாளிதழை மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தாய்.
உன் முகத்தில்
தெறித்த மௌனத்தையோ,
இறுக்கத்தையோ
கவனிக்கத் தெரியாத
வழித்துணையாய் வந்துள்ளேன்..
அப்பா வழியனுப்பிவைத்தார் என்பதையோ,
அம்மா கண்ணீருடன்
நின்றிருந்தாள் என்ற நினைப்போ?
உனக்குள்ளும்
இருந்திருக்க வாய்ப்புண்டு.
எனினும்
பேசவில்லை..
தோளில்
தலைசாய்த்து போகும்
இளமைகளை பார்க்கும்போதெல்லாம்..
நட்பு எனக்குள்ளும் இறுகும்.
ஒருகணமேனும்
காற்றும் மூச்சடங்கி பார்த்திருக்கும்..
நீ வெடியாகிப்போகும்வரை..
– முல்லைஅமுதன்
