செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் குடிகாரனும் போலீஸ்காரனும்! மனுஷ்ய புத்திரன் கவிதை

குடிகாரனும் போலீஸ்காரனும்! மனுஷ்ய புத்திரன் கவிதை

1 minutes read

போலீஸ்காரனை
கெட்டவார்த்தையில் திட்டும்
குடிகாரனின் காணொளியைக்
நானும் கண்டேன்

காரில் இருந்து இறங்கிவந்து
நெஞ்சை நிமிர்த்தி
போலீஸ்காரனை திட்டுகிறவன்
நிச்சயம் போலீஸ்காரனைவிட
அதிகாரம் மிக்கவனாகத்தானே இருக்கவேண்டும்

குடிகாரன் திட்டிக்கொண்டே இருக்கிறான்
போலீஸ்காரர்கள் அவனிடம் இறைஞ்சுகிறார்கள்
ஒரு பெண்ணை காதலன் சமாதானப்படுத்துவதுபோல
குடிகாரனை போலீஸ்காரன் தாஜா செய்கிறான்
ஒரு போலீஸ்காரன் எவ்வளவு
அன்புமிக்க மனிதன் என்பதை
அந்த வழியாகச் சென்ற தெருநாய்கள்
ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு ஓடுகின்றன
குடிகாரன் போலீஸ்காரனின் பிறப்பை
நூறு முறை சந்திக்கு இழுக்கிறான்
போலீஸ்காரனின் கை
குடிகாரனுக்கு அருகில் செல்கிறது
ஆனால் அவனை தொட மறுக்கிறது
எத்தனை எளிய மனிதர்களின்
கன்னத்தில் அறைந்த கரங்கள் அவை
தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாத
எத்தனைபேரை நெஞ்சில் மிதித்த கால்கள் அவை
ஒரு குடிகாரன் நடுத்தெருவில் வைத்து
அத்தனை இழிவாக பேசுகிறான்
போலீஸ்காரன் அப்போது
ஒரு திக்கற்ற நிராதரவான சாமான்யனைபோல
என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறான்
குடிகாரன் பெரிய காரில் வந்து இறங்கியிருக்கிறான்
தைரியமாக கெட்ட வார்த்தை பேசுகிறான்
அவனுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்
என்று தெரியாது
ஒரு ஜாதி தலைவன் இருக்கக்கூடும்
ஒரு மதத்தலைவன் இருக்கக்கூடும்
ஒரு பெரிய அதிகாரி இருக்கக்கூடும்
ஒரு மந்திரி இருக்கக்கூடும்
இவர்கள் எல்லோரையும் விலைக்கு வாங்கும்
ஒரு பணக்காரன் இருக்கக் கூடும்
குடிகாரனின் வசவுகள்
போலீஸ்காரர்களுக்கு வலித்த மாதிரியே தெரியவில்லை
அவர்கள் அங்கும் இங்கும்
சிறுவர்களைபோல ஓடிப்பிடித்து
விளையாடுகிறார்கள்
அது ஒரு பரிபாஷை
இரண்டு அதிகாரங்கள் கூடும்போது
அவற்றிற்கிடையே பிறக்கும்
காமத்தின் முனகல் அது
அதைப்பார்க்க ஆபாசமாக இருக்கிறது
கொஞ்சம் கிளர்ச்சியாகவும் இருக்கிறது
அதிகாரத்திற்கு அதிகாரம்
வாலாட்டுவது ஒரு அற்புத நடனம்
எளிய மனிதன் அதிகாரத்திற்கு வாலாட்டுவதுதான்
காணத்துயரமானது

அதிகாரத்திற்கு
தன்னை எதிர்ப்பவர்கள் யார் என்று
தெரிந்துகொள்ள
கொஞ்சம் அவகாசம் தேவை
குடிகாரன் அதிகாரம் மிக்கவல்ல
என்று தெரிந்துகொள்ள
கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது
குடிகாரன் ஒடிந்த கையில்
மாவுக்கட்டுடன் தோன்றும் காட்சிகள்
வந்துகொண்டிருக்கிறன
அவன் அதிகாரமற்றவனல்ல என
அதிகாரத்திற்கு தெரிந்த மறுகணம்
குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டான்
அந்த மாவுகட்டில் அதிகாரத்தின்
முத்திரை மின்னியது
அதிகாரத்துடனான அபத்த நாடகத்தின் முடிவு
எப்போதும் ஒன்றுதான்

ஒரு பெரிய காரில் போங்கள்
நன்றாக குடித்திருங்கள்
தைரியமாக கெட்ட வார்த்தை பேசுங்கள்
அதிகாரத்தை வெல்லும்
கண்நேர இன்பம்
உங்களுக்கும் நிச்சயம் உண்டு

26.6.2019
இரவு 8.02
மனுஷ்ய புத்திரன்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.