ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் மறக்க முடியாத காதல் பக்கங்கள் அதிகம் உண்டு என்றே கூறமுடியும். பருவத்தில் காதல் மலர்வதும் ஒரு தித்திப்பான அனுபவம் தான். மனதில் சேமித்து வைக்கும் காதல் மெளனச்சிறையுடைத்து வார்த்தைகளால் வெளியில் வரத்துடிக்கும் அனுபவங்களை “மடை திறக்கும் மெளனம்” கவிதைத்தொகுப்பு நூல் அருமையாக சித்தரித்துக் காட்டுகிறது.
காதல் கொண்ட மனம் இயற்கையோடு ஒன்றித்து நேசங்களை பகிர்ந்தளித்து மௌனமாய் மாய வித்தை காட்டிச்செல்கிறது. புதுப்புது கோணங்களில் புதிய நெகிழ்ச்சிகளில் உவமை உருவகங்களை ஏற்றிச் சென்று கவிதைக்கடலில் ஆழ்ந்து விடச் செய்துவிடுகிறார் கவிஞர்.
காதலைச் சொல்லிட தமிழ் போல் வேறெந்த மொழியுமில்லை என்பது நாம் அறிந்ததே. அததற்கு ஓர் எடுத்துக்காட்டு இந்நூல். வரிகளால் உருவமேற்றி உருவத்தால் உணர்வுகளேற்றி வாசிப்போரை நெகிழ வைக்கின்றது கவிக்களங்கள்.
காலத்துக்கு ஏற்றாற் போல இன்ப ருசியுடன் அணிகளை கையாண்டு நூலோடு அடைக்களமடையச் செய்துவிடுகிறது.
உண்மையில் காதல் ஒரு பெருந்தீ. கவிதைகள் ஒவ்வொன்றிலும் மௌன தீயினை புகையச்செய்து கவிக்களங்களில் பற்றவைத்து காதல் தனிமையை குளிர்காயச்செய்துவிடுகிறது.
மெல்லக்கிளர்ந்து மௌனச்சிறையுடைத்து கதகதப்போடு நெஞ்சை நெருடும் அணிகள் கவிப்பொலிவை மெருகூட்டி நிற்கின்றன. உதாரணமாக “நீ என்பது என் அமுதவிஷம்” என்னும் கவியில் இருந்து
காதலில் அமுதம் நீ
இன்னோர் அமுதம் நான்
அதிகமாய் உண்டு
விடமேறிக் கிடப்போம்
நமைக் கொல்லும்
காதலைக் கொன்று……
இதயத்தை பரவசப்படுத்தி காதல் அமுதத்தை அதிகமாய் ஊட்டி விடுகிறது வரிகள்.
காதல் நினைவுகளை மீட்கையில் தேநீருக்கும் சுவை கூடிவிடுகிறது என்று மிக அற்புதமாக “காதலும் தேநீர்ப்பொழுதுகளும்” கவிதையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
ஒரு குவளை தேநீருடன்
மெளனமாய் அமர்ந்தபடி
மலையெனக் குவிந்த
காதல் நினைவுகளைக் குடிக்கையில்
தேநீரின் சுவை கூடிக்கொண்டே செல்கிறது…
என மிக அருமையாக வரிகளை நகர்த்திச்செல்கிறார்.
தனிமனித வாழ்வியலில் சிந்தனைகளைத் துளிர்த்துவிடுவது மெளனம். “மௌனமே கடவுள்” எனும் கவியில் அருமையாக ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.
சில குரோதங்களில்
சிறு மௌனம் போதும்
காந்தியின் அகிம்சைகளை அசைபோட..
சில துரோகங்களில்
சில நேர மௌனம் போதும்
பாரதி மெல்ல மெல்ல உள்ளிருந்து
ரௌத்திரம் விதைத்திட…
சொற்களின் அதிர்வுகளை விட
மௌனத்தின் அதிர்வுகள்
வீரியத்தைத் தந்துவிடுகின்றன..
சில மன்னிப்புகளையும்
பல தவறுகளையும்
தவிர்த்துவிடுகிறது
ஒரு மௌனம்..
தனிமைகளையும் மெளனங்களையும் இதமாக அனுபவித்து விடுகிறது வரிகள்.கனதியான காதல் உணர்வுகளை மெல்லிசையால் வருடிவிட்டுச் செல்லும் கவிகளில் ஒன்றாக “இசையால் நிரம்பும் தனிமை” மிக அழகாக சித்தரித்து நிக்கிறது.
நான் வாசிக்கையில் இதமாகவும் ஆழமாகவும் அனுபவித்த கவிதை இது என்பதை சற்று மிகையாக குறிப்பிடமுடியும்.
இந்த அறையில்
கொஞ்சம் தனிமையில்
இருந்தவளை
சாளரத்தின் வழியே
நுழைந்த காற்று
சுமந்து வந்த பாடல்
எங்கோ அழைத்துச் செல்கிறது…..
வாசிப்பின் இறுதியில் எங்கேயோ நம்மை இழுத்துச்செல்வதைப்போல நாம் அறிய முடியும்.
நவீன கவி அமைப்புடன் வாசிப்போர் மனதில் ஆழமாக பதிந்திடும் ஒரு திரட்சி மிக்க காதல் கருத்துக்கள் பொதிந்த தொகுப்பாகவே தந்துள்ளார்.
ஆசிரியரின் கவிதைகள் இனிமை, சிறப்பான சிந்தனை , சொற்கவி கோர்ப்பு, தனிமை,காதல் என்பன மடை திறந்தாற் போலவே சலிப்பூட்டாத வரிகள் நேர்த்தியாகவே அமைந்துள்ளன.
தனிமையின் தேடல் காதல் ஒன்றாகவே படைத்துள்ளார்.கவிஞரின்அழகான சொல்லாடல் ஒரு சிறு புரள்வும் அல்லாது காதலில் வசப்பட்ட கவிகளை இறுதிவரை கலக்கம் இல்லாமல் செல்கிறது. காதலை மீண்டும் அனுபவிக்கச் செய்து விடுகிறது மடைதிறக்கும் மெளனம் கவிதைத்தொகுப்பு நூல்.
நயம் மிக்க காதல் கண்ணியம் பொதிந்த கவிதைகளை படைத்த மரியாதைக்குரிய நூலாசிரியர் சங்கரி சிவகணேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கேசுதன்