பெண்ணே | கவிதை

இவ்வளவு வெறுமையாய் ஏன்
உணர்கிறேன்?
சாமக்குளிரில்
உறக்கமில்லா இரவில்
மேகம் இழந்த வானோடு
தனித்திருக்கும் நிலவின் அமைதி
கொடூரமாய் இருக்கிறது..
என் மடல்கள் உன்னைச்சேர்வதே இல்லை
எனத்தெரிந்தும்
எழுதிக்கொண்டே இருக்கிறேன்..
பிரிவின்முன் நீ பேசிய வார்த்தைகள்..
‘உனை வெறுத்திட மனமில்லை
பேசாமலிருக்காதே’
உன் மறதியில்
அனுப்பிய மடலின் தாமதத்தில்
அசந்தர்ப்பமாய்
நீ விலக நேர்ந்தது புரிகிறது..
உனைப்பற்றிய ஒரு குறிப்புகூடப்போதும்
என் இரவுகள்
உறக்கத்திடம் ஒப்படைக்கப்பட..
ஒரு வனாந்தரத்தில்
மலை முகட்டின் உயர்ந்த சிகரத்தில்
தனித்து முளைத்திருக்கும் மணற்தீவில்
கல்லறையின் அடி ஆழத்தில்
இருப்பதைப்போல
இவ்வளவு வெறுமையாய்
ஏன் உணர்கிறேன்?

 

நன்றி : Rafiq | எழுத்து.காம்

ஆசிரியர்