செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கடந்து போகாத காதல் | சிறுகதை | வினோத் குபிரிக்

கடந்து போகாத காதல் | சிறுகதை | வினோத் குபிரிக்

5 minutes read

என் பெயர் வினோத். என்னுடைய 23 வது வயதில், பெங்களூரில் பேருந்து நடத்துநராக வேலை செய்துகொண்டிருந்தேன். பேருந்தின் டிரைவரும் என் நண்பருமான ராஜாவும் நானும் இணைந்து வாரக் கடைசி நாளில் தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கச் செல்வோம். பெங்களூரில் வசித்தாலும், எனக்கு தமிழ் படங்களின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. நடிகர்கள் சிவாஜி எம்.ஜி.ஆரின் படங்களை, திரையரங்குகளில் வெளியான அன்றே தவறாமல் பார்த்துவிடுவேன். என் நண்பன் ராஜா. பெங்களூரில் மேடை நாடகம் போடுவதால், சிவாஜி நடிப்பின் ஒவ்வொரு அசைவுகளையும் உன்னிப்பாகக் கவனிப்பான். எங்கள் பேருந்து செல்லும் வழியில், மகாராணி பெண்கள் கல்லூரி இருந்ததால்,  கல்லூரி மாணவிகள் பலர் எங்கள் பேருந்தில் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு எனது பாணியில் அதாவது  ஸ்டைலாகப் பயணச்சீட்டு எடுத்துக் கொடுப்பேன்.

பேருந்தில் பயணிகளைப் பின்பக்கம் வழியாக ஏறச் செய்து, முன் பக்கம் வழியாகப் பயணிகளை இறங்கச் செய்வேன். ஒருநாள் பேருந்தின் முன்பக்கம் வழியாக ஒரு கல்லூரி மாணவி ஏறினார். அதைக் கண்டதும் எனக்கு ஆத்திரம் வந்தது, உடனே அந்தப் பெண்ணைக் கண்டபடி திட்டினேன். அவரும் பதிலுக்கு என்னைத் திட்டினார். இரண்டு பேருக்குமிடையே பெரிய வாய் தகராறு உருவானது. பேருந்தில் பயணிகள் எல்லோரும் எங்கள் இருவரின்  சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ராஜா, பேருந்தை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு, என்னை சமாதானம் செய்தான்.

சமாதானமான பின்பும் அந்தப் பெண்ணுக்குப் பயணச்சீட்டை நான் கொடுக்கவில்லை. டிக்கெட் சோதனை ஆய்வாளரிடம், அவள் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எப்போதும்போல் டிக்கெட் சோதனை ஆய்வாளர்கள் அங்கு வரவில்லை. அவள் என்னை மறுபடியும் கோபமடைய செய்வதற்காக, பின்பக்க வழியாக இறங்கினார். அவரைக் கடுமையாக முறைத்துப் பார்த்தேன். அந்தப் பெண்ணும் பதிலுக்கு முறைத்துவிட்டு, என் முகத்தைப் பார்த்துக்கொண்டே தரையில் எச்சில் துப்பினார். அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கமே வரவில்லை. அந்தப் பெண்ணை அவமானப்படுத்தியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

மறுநாள் அந்தப் பெண் பேருந்து நிறுத்தத்தில்  நின்றுகொண்டிருந்தார். எங்கள் பேருந்து, அவள்   நின்றுகொண்டிருந்த இடத்துக்கு வந்தது. அவள் ஏற வரும்போது, இரண்டு முறை ஜோராக விசில் அடித்தேன். பேருந்து நகர்ந்து சென்றது. என்னைப் பார்த்து, காலில் இருந்த செருப்பை எடுத்துக் காட்டினார். எனக்கே உரிதான சிரிப்பால் அந்தப் பெண்ணை நக்கல் செய்தேன். மறுநாள் அந்தப் பெண் மறைந்து மறைந்து பேருந்தில் ஏறினார். அதை நான் கவனித்தபோதும், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

Representational Image

“நடந்தே கல்லூரிக்குப் போனா  உடம்பில் உள்ள கொழுப்பு  குறையும்” என்று சத்தமாக, அவருக்குக் கேட்கும்படி கூறினேன். நான் கூறியதைக் காதில் வாங்காத மாதிரி தன் தோழிகளிடம் பேசிக்கொண்டிருந்தார். இப்படியே எல்லா நாள்களும் அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் சண்டை நீடித்தது. சில நாள்களிலேயே அது கேளிக்கை சண்டையாக மாறியது. அவளை ரசிக்கத் தொடங்கினேன். பார்வைகளைப் பறிமாறிக்கொண்டோம். அவள் பெயர் நிர்மலா. மருத்துவ மாணவி… பின் ஒரு மாத காலமாக, அவள் பேருந்தில் வரவில்லை.

என்னை அறியாமலேயே அவளைத் தினமும் தேட ஆரம்பித்தேன். அவளுக்கு என்ன ஆனது என்று எனக்குள்ளே கேள்வி எழுப்பத் தொடங்கினேன். அவள் நின்றுகொண்டிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் சுற்றும் முற்றும் பார்த்து, அவள் எங்காவது ஒளிந்து இருக்கிறாளா என்று நினைத்துக்கொள்வேன். அவளை நினைத்தே என்னுடைய இரவு நேரம் தூக்கம் கெட்டது. ராஜா பொழுதுபோக்குக்காக நாடகம் போடுவதால், என்னுடைய மனநிலையை மாற்றுவதற்காக ஒரு நாள் அங்கு சென்றேன்.

எனக்கு குருசேத்திரம் நாடகத்தில் துரியோதனன் கதாபாத்திரம் கொடுத்தான். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் நாடகத்தைக் காண கூடி இருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் நிர்மலா இருப்பாள் என்று நினைத்துக்கொண்டு மேடையில்  நடித்து முடித்தேன். நாடகம் முடிந்ததும், மக்கள் துரியோதனன் வேஷம் அணிந்த என்னைப் பார்ப்பதற்காக வந்து, பாராட்டவும் செய்தார்கள்.

மறுநாள் பேருந்தில் நிர்மலா எப்போதும்போல் முன்பக்கமாக ஏறினாள். அவளிடம் எந்த ஒரு வார்த்தையும் நான் பேசவில்லை. அவளுடைய முகம் சற்று கவலை கலந்த முகமாக இருந்தது. பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டு, என்ன பேசலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்த சமயத்தில்,

“உன் நடிப்பு சூப்பரா இருந்தது, முக்கியமா உன்னோட ஸ்டைல் பார்க்க வித்தியாசமா இருக்கு” என்று சிரித்தபடி கூறினாள். நானும் சிரித்துக்கொண்டே,

“நீ அங்கே வந்து இருந்தியா. நான் உன்னைப் பார்க்கவே இல்லை” என்றேன்.

“உன்ன பார்க்க நிறைய பேர் அங்கே கூடி இருந்தாங்க. அதனால  உன்னோட கண்ணுல நான் படல” என்று கூறினாள்.

“அடுத்த வாரம் சத்ரபதி சிவாஜியின் கதாபாத்திரத்தை நடிக்கப் போறேன். கண்டிப்பா நீ வரணும்” என்று மிகுந்த ஆவலாகக் கூறினேன்.

“நான் எதுக்கு வரணும்” என்று அவள் கிண்டலாகப் பதிலளித்தாள். அவளின் காது பக்கத்தில் சென்று, விசிலை சத்தமாக ஊதினேன்.

அவள் தன் கண்களை மூடி “ஐயோ”  என்று கத்தினாள். பிறகு  நிர்மலாவுக்கும் எனக்கும் நட்பு உண்டானது. அதுவே சில நாள்களில் காதலாக மலர்ந்தது.

Representational Image

ஒரு நாள் ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான சினிமா நடிப்புப் பயிற்சி சம்பந்தமான விளம்பரத்தை எடுத்துக்கொண்டு வந்து, என்னிடம் கொடுத்தாள்.

“சினிமாவில சேர நல்ல கலரா இருக்கணும்” என்றேன்.

“திறமை இருந்தா போதும் சாதிக்கிறதுக்கு. உன்னுடைய  ஸ்டைல், சிரிப்பு, நீ பேசுற வசனம் எல்லாமே கண்டிப்பா மக்களுக்குப் பிடிக்கும்” என்றாள்.

“உண்மையா சொல்றியா?” என்று சந்தேகத்துடன் கேட்டேன்.

“கண்டிப்பா நீ பாரு. உன்னோட படத்துக்கு பெரிய கட்அவுட் வைப்பாங்க. நீ எதிர்பார்க்காத அளவுக்கு பேரும் புகழும் கண்டிப்பா உனக்கு கிடைக்கும்” என்று ஆனந்தமாகக் கூறினாள்.

இதைக் கேட்ட எனக்கு சிரிப்புதான் வந்தது. இது எல்லாம் என் கனவுலகூட நடக்காது என்று நினைத்துக்கொண்டேன்.

சினிமா நடிப்பு பயிற்சியில் சேர, அவளே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, சென்னைக்கு அனுப்பினாள். சில நாள்களிலேயே பதில்  கடிதமும் வந்தது. அதில் நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. நான் சினிமாவில் நடிக்கச் சென்று,  வெறுங்கையோடுதான் திரும்பி வருவேன் என்று எங்கள் வீட்டில் பேசினார்கள். என்னை ஊக்குவித்தது நிர்மலா ஒருத்தி மட்டுமே.    சென்னை செல்வதற்கான பணத்தையும் ஏற்பாடு செய்து, என்னை  அனுப்பி வைத்தாள். சென்னை திரைப்படக் கல்லூரியில் நடைபெற்ற நேர்காணலில், நாடகத்தில் நான் நடித்த கதாபாத்திரங்களின் வசனம் பேசி நடித்து, நேர்காணலில் வெற்றி  பெற்றேன். வெற்றியோடு பெங்களூருக்குச் சென்று, நான் வெற்றி பெற்ற விஷயத்தை நிர்மலாவிடம் கூறினேன். அவள், என்னைவிட மிகுந்த சந்தோஷம் அடைந்தாள். அவளுடைய கண்ணில் நீர் வழியத் தொடங்கியது. அவளின் ஆனந்தத்தைப் பார்த்தபடியே அமைதியாக நின்றுகொண்டிருந்தேன். என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நெற்றியில் முத்தங்கள் கொடுத்தாள். நிலா வெளிச்சத்தில் இரவுப் பூச்சிகளின் சத்தத்தில், அவளுடன் நானும் என்னுடன் அவளும் இருந்த இனிமையான தருணம் அது.

Representational Image

பின்பு, சென்னையில் சினிமா திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். என் படிப்பு செலவுக்காக மாதம் 120 ரூபாய் பணத்தை அஞ்சல் மூலமாக அனுப்புவாள். பண்டிகை விடுமுறை நாள்களில் பெங்களூர் சென்று அவளுடன், நான் நடிப்பில் கற்றுக்கொண்ட விஷயத்தையும், என்னுடன் வகுப்பில் படிக்கும் மாணவர்களைப் பற்றியும் பேசுவேன். ஆண்கள் பொதுவாகவே நமக்கு சொந்தமான பெண்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதேபோல்தான் நானும் நிர்மலா பற்றி எதுவும் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. இப்படியே இரண்டு வருடங்கள் சென்றன. ஒருநாள் என்னுடைய பிறந்த நாளில் தங்கச் சங்கிலி ஒன்றை எனக்குப் பரிசாக அளித்தாள். இன்றும் என்னுடைய பிறந்த  நாளன்று அதை அணிந்துகொள்வேன். அதில் நிம்மி என்று எழுதி இருக்கும்.

பிறகு, இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  அதைத் தொடர்ந்து நிறைய படங்கள் வரவும் ஆரம்பித்தன. இந்தக் காலகட்டத்தில் நிர்மலாவுக்கு நிறைய கடிதங்கள் எழுதினேன். ஆனால், அதற்கான எந்த ஒரு பதிலும் வரவில்லை. என் மனதில் கலக்கம் உண்டானது. இதனால் நடிப்பில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் போனதால், பட வாய்ப்புகள் வரவில்லை. என்னுடைய சிந்தனை முழுவதும் நிர்மலாவைப் பற்றியே இருந்தது. ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் படப்பிடிப்பில் இருந்து பெங்களூரு கிளம்பிச் சென்றேன். ராஜாவிடம் நிர்மலாவைப் பற்றி விசாரித்தேன்.

Representational Image

“அவள் பேருந்தில் சில மாதங்களாக வரவில்லை” என்று கூறினான். இதைக் கேட்டதும், எனக்கு அதிர்ச்சி உண்டானது. உடனே அவளுடைய வீட்டுக்குச் சென்று பார்த்தேன். அவளுடைய வாடகை வீடு காலி செய்யப்பட்டிருந்தது. அவள் படித்த கல்லூரிக்குச் சென்று விசாரித்தபோது, அவளைப் பற்றி யாருக்கும்  எதுவும் தெரியவில்லை. அவள் இருந்த பகுதியைச் சுற்றி இரண்டு மூன்று நாள்களாகத் தேடினேன்.

நான் உறங்கும்போதும் என்னுடைய ஆன்மா நிர்மலாவை தேடிக்கொண்டேதான் இருந்தது. மறுபடியும் சென்னைக்கே திரும்பிச் சென்றேன். ஒரு கல்லை செதுக்கி சிற்பம் ஆக்கிய பின்பு, அந்தச் சிற்பத்தை மறுபடியும் கல்லாகவே வடிவமைக்க பல யுகங்கள் ஆகும். அதேபோல்தான் காதலில் தோல்வியடைந்த என்னுடைய மனமும் இருந்தது. என் மனநிலையை மாற்ற நினைத்து, ஓயாமல் நடிக்கத் தொடங்கினேன். நிர்மலாவைப் பற்றி சற்றுகூட நினைக்க நேரமில்லாமல், என்னுடைய முழு சிந்தனையை வேறு பக்கமாகத் திருப்பினேன். நிறைய படங்கள், புகழ், பணம் என எல்லாவற்றையும் சம்பாதித்தேன். பின், மறுபடியும் அவளை நினைக்கத் தொடங்கினேன். என்னுடைய மனநிலை மாற்றம் அடையத் தொடங்கியது.

என்னையறியாமலேயே எல்லோரிடமும் கோபம் அடைய ஆரம்பித்தேன். என்னைப் பார்ப்பவர்கள் எல்லோரும், பைத்தியம் பிடித்துள்ளது என்று நினைக்கத் தொடங்கினார்கள். வாழ்க்கையில் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் நகர்ந்து சென்றேன். என்னால் நிறைய பேர் துன்பம் அனுபவித்ததை எண்ணி, என்னை ஆன்மிகத்தில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். இரவில் நான் பார்த்து ரசித்த நட்சத்திரங்கள் எத்தனையோ கோடிகள்.  ஆனால், என் இதயத்தில் நட்சத்திரமாகத் தோன்றி, என் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றியவள் என்றுமே நிர்மலா மட்டுமே. இன்னும் அவளைத் தேடிக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு பேருந்து பயணத்திலும்.

 

– வினோத் குபிரிக்

கட்டுரையாளர் குறிப்பு!

நடிகர் தேவனின் நேர்காணலிலும், இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உரையாடலிலும், ரஜினியின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையிலும், நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, என் கற்பனையுடன் இந்த கதையை எழுதியுள்ளேன்.

நன்றி : விகடன்.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More