அல்ஜீரியாவின் தலைநகரில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 257 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெளஃபாரிக் ராணுவ விமான நிலையத்திலிருந்து பறக்க தொடங்கியவுடன் விமானம் விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது அல்ஜீரியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்து ஆகும்.
இதில் இறந்தவர்கள் பலர் ராணுவத்தினரும் அவர்களது குடும்பமும் ஆகும் என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் விமானக் குழுவினரும் இதில் பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 14 அவசர மருத்துவ ஊர்திகள் உள்ளதாகவும், காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் உள்ளூர் தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
