எங்கள் கதைகளை எழுதுவதே எனக்குப் பிடித்தமான எழுத்துப் பணி: வெற்றிச்செல்வியுடன் சில நிமிடங்கள்

எழுத்திலும் சரி, வாழ்விலும் சரி, போராட்டத்திலும் சரி முன்னூதாரணமாக இருப்பவர் போராளி வெற்றிச்செல்வி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 வருடங்கள் போராளியாக செயற்பட்ட வெற்றிச்செல்வி வெடி விபத்தொன்றில் ஒற்றை கையையும் கண்ணையும் இழந்த மாற்றுத்திறனாளி. நாவல், கவிதை, சிறுகதை என ஆக்க இலக்கியங்களை படைத்து வரும் இவர், இப்போது கொரோனா பேரிடர் காலத்தை எப்படி கடந்து வருகிறார் என வினாவினோம். வணக்கம் லண்டனுக்கு போராளி வெற்றிச்செல்வி அளித்த சிறு நேர்காணல் இது. -ஆசிரியர்

கொரோணா காலத்தை எப்படிக் கடக்கிறீர்கள்?

பெருமளவான காலம் வீட்டில் இருக்கக் கிடைத்ததை நல்லதொரு வாய்ப்பாக அமைத்துக் கொள்ள முடிந்தது. என்னையும் என்னைச் சுற்றியும் இயற்கையின் அற்புதங்களை, மேலும் மேலும் உணர பெரும் வாய்ப்பாக இக்காலத்தைப் பயன்படுத்த இயலுமாக இருந்தது. இயற்கை விவசாயத்தின் மீதான பெரும் ஈர்ப்புடன் ஆரம்பித்திருந்த செயற்பாடுகளுக்கு இக்காலம் பெரும் வரவேற்பை வழங்கியிருக்கிறது. தொண்டர்களுடன் தொலைபேசியிலேயே வேலை செய்யும் இணைப்புத் திறன் வளர உதவியிருக்கிறது. வீட்டில் இருந்துகொண்டே வேறு மாவட்டங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் வேலை செய்ய முடிந்திருக்கிறது. நல்லபல நட்புறவுகளைக் கட்டியெழுப்பியிருக்கிறது. போதுமானளவு சக்தியை மீதப்படுத்தியும் இருக்கிறது.

இக்காலத்தில் என்ன இலக்கிய முயற்சிகள் நடக்கின்றன?

“எங்களின் கதைகளை எழுதுதல்” என்பது எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்துப்பணி. அதனால் எழுத விரும்புவோர் அனைவரும் எழுதுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதில் ஈடுபாடுண்டு. வாழ்வியல் பதிவுகளை உள்ளது உள்ளபடி பதிவாக்கும் தொகுப்பு முயற்சியின் 3ஆவது படியில் ஏறிக்கொண்டிருக்கிறேன். “பங்கர்” வாழ்வியல் பதிவுகள் எனும் தலைப்பின்கீழ் சேர்க்கத் தொடங்கிய வாழ்வியல் பதிவுகளில் இதுவரை 28 பதிவுகள் சேர்ந்துள்ளன. மிகவும் பெறுமதியான வாழ்வியல் பதிவுகள் அவை. நூல் வடிவமைப்பு வேலையை அரம்பித்து விட்டோம்.

புதிய இளம் எழுத்தாளர்களாக வளர்ந்துவரும் சித்திரா மற்றும் குணவதனி ஆகியோரது சிறுகதை நூல்கள் இரண்டிலும் தற்போது வேலை செய்து கொண்டிருக்கிறேன். அவையும் விரைவில் வெளிவரும்.
போருக்குப் பின்னான வாழ்வியல் குறித்து நாவல் ஒன்றை எழுத ஆரம்பித்துள்ளேன். சில அத்தியாயங்கள் நகர்ந்துள்ளன. அத்துடன் மதிப்பார்ந்த நண்பர் வசிகரன் குலசிங்கம் அவர்களது வழிப்படுத்தலில் நடைபெறும் ‘எங்கட புத்தகங்கள்’ படைப்புகள் சார்ந்த போட்டிகளிலும் இயன்றளவு ஒத்தாசைகளை வழங்கி வருகிறேன்.

இச்சுழலில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் எவை?

உண்மையிலேயே சிக்கல்கள் இருக்கின்றன. அதில் அரைவாசிக்கு மேலுள்ள சிக்கல்கள் மனச் சிக்கல்கள். அச்சிக்கல்களை அவர்கள் அவர்களை அவர்களுக்குள் அறிந்தால் மட்டும்தான் நிவர்த்தி செய்ய முடியும். உடல்நிலையில் பாரிய சவால்களை உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்களதும் நண்பர்களதும் குடும்ப உறவினர்களதும் அன்பும் ஒத்துழைப்பும் சிகிச்சையும் அக்கறையும் மிகமிகமிக அவசியமமாகும். அவற்றை ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளதும் பார்வை வட்டத்திற்குள் உள்ள சக மனிதர்கள் பொறுப்பெடுக்க வேண்டும்.

சுயதொழில்களில் ஈடுபட்டுவரும் மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சவால்கள் இருக்கின்றன. தற்போதைய சூழலுக்கு விற்பனை செய்ய முடியாத உற்பத்திகளால் அவர்கள் வருமானம் ஈட்ட இயலாது. மாற்றுத்திறனாளிகளும் ஒன்றுக்கு மேற்பட்ட கைத்தொழில்ககளைச் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக பசுக்களை வைத்திருப்பவர்கள் பால் பண்ணைக்கு பால் வழங்க முடியாத மூழல் எனில் தயிருக்குப் போட்டுவிட்டு, மலிந்துபோய்க்கிடக்கும் பச்சைமிளகாயை வாங்கிவரலாம். தயிரை மோராக்கி மோர் மிளகாய் போட்டு சேமிக்கலாம். மோரை எடுக்கும்போது மிகப்பெறுமதியான பசு நெய்யையும் தயாரிக்கலாம். கிராமத்தில் இருந்தே ராஜ வாழ்க்கை வாழ்வதற்கான வழிகளை கண்டடைய தன்னம்பிக்கையும் முயற்சியும்தான் முதல் முதலீடுகள். இவை இரண்டையும் யாரும் யாரிடமிருந்தும் வாங்க முடியாது. அன்றாடம் உணவுக்கு உலருணவு அன்பளிப்புகள் தாராளமாகக் கிடைக்கின்றன. (அப்படி யாருக்கும் கிடைக்கவில்லை எனில் அறியத்தாருங்கள்.)

நேர்காணல் – பார்த்தீபன்

ஆசிரியர்