‘ஒழுக்கம் மற்றும் நடத்தை தொடர்பான’ தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக உள்ளக ஒழுங்முறை தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது.
அதேவேளை, முன்னாள் டெஸ்ட் வீரர்களான இமாம் உல் ஹக், மொஹம்மத் ரிஸ்வான் ஆகியோர் தொடர்பான விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘ஒழுக்கம் மற்றும் நடத்தை’ தொடர்பான விஷயங்களை உள்ளக ரீதியாக மீளாய்வு செய்து வருவதாகவும், இந்த செயல்முறை உரிய விதிகளின் கீழ் நடத்தப்படுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஊடகப் பணிப்பாளர் அமீர் மிர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இத்தகைய விஷயங்களை அதன் நிலையான நடைமுறைகளின்படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கையாள்கிறது. இந்த செயல்முறை சபையின் விதிகளின் கீழ் நடத்தப்படுகிறது, இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் முறையான பரிசீலனை செய்யப்படுவதை இது உறுதி செய்கிறது’ என அவர் மேலும் தெரிவித்தார்.
லண்டனில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் தங்கியிருந்தபோது அவர்களின் செயல்பாடுகள் மற்றும் தொடர்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக, இமாம் மற்றும் ரிஸ்வானின் கையடக்க தொலைபேசிகளிலிருந்து தரவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பெற்றதாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, லோர்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் இங்கிலாந்திடம் 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பின்னர், இந்த இரண்டு வீரர்களின் தொலைபேசிகள் அணியின் பாதுகாப்பு அதிகாரியால் கையகப்படுத்தப்பட்டு, அவற்றின் தரவுகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட சில மணி நேரத்துக்குப் பின்னர் திரும்பக் கொடுக்கப்பட்டன.
தொலைபேசிகளை கையகப்படுத்தியதையோ அல்லது அவற்றின் தரவுகளைப் பெறப்பட்டதையோ பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தவில்லை.
இந் நிலையில், சரிபார்க்கப்படாத அறிக்கைகளை உறுதிப்படுத்தப்பட்ட உண்மையானதாக கருத வேண்டாம் என திங்களன்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊடக பணிப்பளாளர் எச்சரித்தார்.
உள்ளக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் கருத்து தெரிவிக்க முடியாது எனக் கூறி, கூடுதல் விவரங்களை வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மறுத்துவிட்டது.
இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் டெஸ்ட் அணி இரு பெரும் தோல்விகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, எட்ஜ்பாஸ்டனில் நாளை ஆரம்பமாகவுள்ள மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்டுக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கணிசமான மாற்றங்களைச் செய்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்று தொடரை தனதாக்கிக்கொண்டுள்ளது.
ஹெடிங்லேயில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 103 ஓட்டங்களாலும் லோர்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 194 ஓட்டங்களாலும் பாகிஸ்தானை இங்கிலாந்து இலகுவாக வெற்றிகொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இமாம் மற்றும் ரிஸ்வான் உட்பட ஏழு வீரர்களை டெஸ்ட் அணியில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விடுவித்ததுடன், சிவப்பு பந்து கிரிக்கெட்டின் முதன்மை பயிற்றுநரான சர்ஃபராஸ் அகமதுவிற்குப் பதிலாக மைக்கல் ஹெசனை இடைக்காலப் பயிற்றுநராக நியமித்தது.