Monday, March 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை புதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா? | நிர்மலன்

புதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா? | நிர்மலன்

10 minutes read
புதிய மதிப்பீடு வடிவம் அறிமுகம்: புதிய மதிப்பீட்டு முறையை அறிமுகம்  செய்கிறது சிபிஎஸ்இ - cbse unveils new exam format for classes vi to ix |  Samayam Tamil

கலைத்திட்டத்திலுள்ள  கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய பணியாகக் கருதப்படுகின்றது. கற்றல் இலக்குகளை மாணவர்கள் அடைந்துள்ளனரா என மதிப்பிடவும், கற்றல் இடர்பாடுகளைக் கண்டறிந்து அதற்கான பரிகார வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தி அனைத்து மாணவர்களும் குறித்த கற்றல் இலக்கை அடையச் செய்வதற்கு மதிப்பீடு இன்றியமையாதது ஆகும். இதுவே மதிப்பீட்டின் பிரதான நோக்கமாகவும் கருதப்படுகின்றது. அத்துடன் பாடசாலைகளில் மாணவர்களின் கல்வித்தரத்துடன் சமூகப் பண்புகள், ஆளுமைகள், ஒழுக்கப் பண்புகள் போன்றவற்றையும் ஆசிரியர்கள் மதிப்பிட்டு அறிவது இன்றியமையாதது ஆகும். மதிப்பீட்டுப்பணி ஆசிரியர்களின் உயர் தொழில் பொறுப்புக்களில் இன்றியமையாத கூறாகக் காணப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் ஆசிரியர்கள் தமது மா

ணவர்களின் பாடப்பொருள் அறிவை மாத்திரம் அறிய முற்பட்டனர். அதற்கு பாடசாலைப் பரீட்சைகள் பயன்பட்டன. இப் பரீட்சை முறைகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இன்றைய சூழலில் பரீட்சை முறையில் தரத்தை உயர்த்துதல் பற்றி  கல்வியியலாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்தியக் கல்வியியலாளர் கலாநிதி இராதகிருஸ்ணன் கல்வியில் ஒரே ஒரு சீர்திருத்தத்துக்கு மட்டுமே இடம் உண்டு எனின் அச் சீர்திருத்தம் பரீட்சைமுறை தொடர்பாகவே இருக்க வேண்டும் என்கின்றார். இவ்நிலையில் புதிதாக பதவியேற்ற அரசு பல கல்விச் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளதாகக் கூறுகின்றது. அரசாங்கத்தினால் எவ்வகையான சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் இலங்கையில் மாணவர்களை மதிப்பிடும் முறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை எந்த சீர்திருத்தங்களும் பயன் தரப்போவதில்லை.

                இலங்கையின் கலைத்திட்டம் ஆனது பரீட்சையினால் மூழ்கடிக்கப்பட்ட  ஒன்றாகவே  காணப்படுகின்றது. கல்வி ஆணைக்குழுவின் கல்வித்தரத்தை  உயர்த்துதல்  தொடர்பாக அறிக்கையில் குறிப்பிட்டது போல் பரீட்சைகள் நாயை ஆட்டும் வால் போல் கலைத்திட்டத்திற்கு ஆணையிடுகின்றன. இப் பரீட்சைமுறை ஒழியும் வரை மாணவர்களுக்கு எதிர்காலத்துக்குத் தேவையான என்ன என்ன திறனைகளைக் கற்பிக்க வேண்டும்  என்று ஆசிரியர்களுக்கு விளங்கப்போவதில்லை. மாணவர்களின்  வகுப்பறை  மதிப்பீடுகளில் எதிர்காலத்துக்குத் தேவையான திறன்கள் குறித்து ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். கற்றல் என்பது தனியே பாடநூல்களாலும், ஆசிரியர்களாலும், பாடசாலையினாலும் மேற்கொள்ளப்படும் விடய அறிவு மாத்திரம் அன்று என்பதனை  அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கற்றல் தொடர்பான பழைமையான மாயையினை நீக்குவதற்கு நன்கு வடிவமைத்த மதிப்பீட்டு அணுகுமுறைகளை அமுல்படுத்த வேண்டும். பாடசாலைக்கு வெளியே  சமூகத்தில் வாழ்க்கைக்குத் தேவையான திறன்களில் தமது அறிவைப் பிரயோகிக்க  உதவுவதாக  மதிப்பீட்டு  முறைகளை  வடிவமைக்க வேண்டும்.

                நவீன கல்வியியல் சிந்தனையாளரும் பாடசாலைகள் அற்ற சமூகம் என்ற நூலின் ஆசிரியருமான இவான் இலிச் தனி மனித வளர்ச்சி என்பது அளவிடமுடியாதது, மதிப்பிடமுடியாதது என்று கூறுகின்றார். அத்தோடு வேறு ஒருவரின் அடைவோடும் அதனை ஒப்பிட முடியாது என்றும் கூறுகின்றார். அத்தோடு கற்றல் என்பது அளவிட முடியாத படைப்பாற்றல் அதனை மதிப்பிடுவதால் மாணவர்களின் படைப்பாற்றல் திறனில் பாதிப்பு ஏற்படும்  என்கின்றார்.

                இன்றைய நிலையில் கற்றலைப் பாடப் பகுதிகளாக்கி முன்னரே ஆயத்தப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்களாகப் பாடத்திட்டத்தை அமைத்து அதனை  மாணவருக்குப்  புகுத்தி அதனை அளக்க முயல்வதாக அரசு காட்டிக் கொள்கின்றது. மாணவர்கள் தமது தனிப்பட்ட வளர்ச்சிகளை அளக்க மற்றவர்கள் தரும் அளவீட்டுக்கு தம்மை உட்படுத்திக் கொள்கின்றனர். இதனால் மாணவர்களின் படைப்பாற்றல் திறன் காணாமல் போய்விடுகின்றது. மதிப்பீடுகளை உண்டாக்கவும் அளவிடவும் முடியும் என்ற கருத்தை அரசு நிறுவன மயப்படுத்தப்பட்ட  அமைப்புக்களான  பாடசாலைகள், பரீட்சைத் திணைக்களம் மூலம் அனைவரையும் ஏற்றுக் கொள்ளச் செய்கின்றது.

                இதேசமயம் மாணவர்கள் ஒவ்வொருவரும் தனியாள் வேறுபாடுகளைக் கொண்டு அமைந்தவர்கள் அவர்களில் சிலர் கட்புலம் சார்ந்த கற்றல் பாங்குகளை உடையவர்களாகக் காணப்படுவார் சிலர் தர்க்கம் சார்ந்த கற்றல் பாங்கையுடையவர்களாகக் காணப்படுவார் சிலர் மொழி சார்ந்த கற்றல் பாங்கையுடையவர்களாகக் காணப்படுவார். சிலர் உடல் இயக்கம் சார்ந்த கற்றல்பாங்கையுடையவர்களாகக் காணப்படுவார். சிலர் இயற்கையுடன் இணைந்த கற்றல் பாங்கையுடையவர்களாகக் காணப்படுவர். இதேபோல் வேறுவேறு கற்றல் பாங்குகளை உடைய மாணவர்களை ஒரே வகுப்பறையில் வைத்து இருந்து ஒரே வகையான கற்றல் கற்பித்தலை நடாத்தி அவர்களை ஒரே வகையான மதிப்பீட்டுக்கு உட்படுத்தலை  எந்தவகையில் தரமான மதிப்பீடாகக் கொள்ள முடியும். அவர் அவர் தனித் திறமைகளைக் கருத்தில் கொள்ளாமல் நடைபெறும் கற்றல் கற்பித்தல் எந்தளவு வெற்றிகரமான கற்றல்  கற்பித்தலாக இருக்க முடியும். தனித்தனி வகையான கற்றல் பாங்கையுடையவர்களை வகுப்பின் இறிதியில் எழுத்துச் சோதனையினை மூலம் மாத்திரம் அளவிட்டு மதிப்பிடுதல் எந்தவகையில் சிறப்பான மதிப்பீடாக இருக்க முடியும்.

இவ்வாறான மதிப்பீடுகள் அம் மாணவர்களின் தனித்திறமைகளை புதைக்கின்ற செயற்பாடாவே அமையும் என்பது வெளிப்படையானது. எனவே மதிப்பீடு என்பது மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளைக் கருத்திற் கொண்டே மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு மதிப்பீடு அந்த அந்த கற்றல் பாங்குகளுக்கு ஏற்பவே திட்டமிடப்பட வேண்டும். அத்தோடு இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களைச் சமாந்தர வகுப்புகளாகப் பிரித்தல் பரீட்சைப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் மாணவர்கள் உளரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். உண்மையிலேயே மாணவர்களை சமாந்தர வகுப்புக்களாகப் பிரித்தல் அவர்களின் கற்றல் பாங்குகள் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் அவர்களின் கற்றல் பாங்குகளுக்கு ஏற்ப கற்றல் கற்பித்தலைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். அத்தோடு மதிப்பீடுகளையும் திட்டமிட்டுக் கொள்ளலாம். பன்முக நுண்மதிக் கொள்கையினை வெளியிட்ட ஹவாட் காடுனரின் கருத்துப்படி மாணவர்களின் நுண்மதி ஆற்றலுக்குப் பொருத்தமாக கற்றல் கற்பித்தல், மதிப்பீடு என்பவற்றைத் திட்டமிடாமல் அந்த கற்றல் கற்பித்தல் வெற்றியளிக்கமாட்டாது  என்கின்ற கருத்தும் நோக்கத்தக்கது.

                இதேசமயம் கல்வி மதிப்பீடுகள் சில எடுகோள்களின் அடிப்படையிலானவை என்பதனை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு பரீட்சை மூலம் மாணவர்களின் நடத்தை முழுவதையும் அவதானிப்பதோ அளவிடுவதோ முடியாத விடயம் அளவிடப்படும் நடத்தைகள் அவதானிக்கப்படாத நடத்தைகளாலும் பிரதிநிதித்துவம் செய்கின்றது என்கிற அடிப்படையில் தான் கல்வியில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல வருடங்கள் கற்ற கல்வியினை ஒரு வினாத்தாள் மூலம் அந்த மாணவனை மூன்று மணித்தியாலங்களில் அவனது எதிர்காலத்தை  மதிப்பிட முடியும்; எனின் பரீட்சைகள் தான் உலகின் முதல் யோசியக்காரனாக இருக்க வேண்டும். எனவே இவ்வாறான இறுதி மதிப்பீடுகளைக் குறைத்து தொடர்மதிப்பீடுகள், மாணவர் சுயவிபரப் பதிவேடு, பாடசாலை மட்டக்கணிப்பீடு போன்றவற்றை வலுப்படுத்துவதன் மூலம் மாணவர் தொடர்பான சிறந்த மதிப்பீடுகளைப் பெறமுடியும்.

                இதேசமயம் ஒவ்வொரு மாணவர்களும் தனியாள் வேறுபாடுகளைக் கொண்டவர்கள். எனவே இவ் வருடம் பரீட்சை எடுத்த மாணவர்களின் பெறுபேறுகளை சென்ற ஆண்டு பரீட்சை எடுத்த மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளுடன் ஒப்பிடுவது தவறானது ஆகும். இந்த ஆண்டு பரீட்சை எடுத்த மாணவர்கள் வேறு சென்ற ஆண்டு பரீட்சை எடுத்த மாணவர்கள் வேறு எனவே இவ்வாறான மதிப்பீடுகளை கல்வி அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்று கல்வி மதிப்பீடு என்பது புள்ளிவிபரங்களாகவே சுருங்கிவிட்டது. அடைவு மட்டம் எவ்வளவு? கடந்த வருடத்தை விட இந்த வருடம் எத்தனை சதவீதம் அதிக அடைவுமட்டம் என எண்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஒரு வகுப்பறை என்பது புள்ளிவிபரங்களின் தொகுப்பு அல்ல என்பதனை கல்வி அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்வார்கள் எனின் தரம் 5, தரம் 11 பரீட்சைகளின் மதிப்பீடுகள் வெளியிடப்படும் போது வெற்றுக் கூச்சல்களைக் காணமுடியாது.

                இதேசமயம் ஒரு பரீட்சையில் ஒரு மாணவன் பூச்சியம் புள்ளிகளைப் பெற்றான் ஆயின் அவனுக்கு அப்பாடம் பற்றிய அறிவு பூச்சியம் என்பதல்ல அந்த அளவீட்டு கருவி வினாத்தாள் அடிப்படையிலேயே அவனது புள்ளி பூச்சியம். வேறு ஒரு அளவீட்டுக் கருவியின் அடிப்படையில் அந்த மாணவனை மதிப்பிட்டால் அவனால் சிறந்த புள்ளிகளைப் பெறமுடியும் என்பதனையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறித்த காலத்தில் சிறந்த அளவீட்டு கருவியாகக் காணப்படுவது சிறிது காலத்தில் சிறந்த அளவீட்டு கருவியாக இருக்க வேண்டும்; என்பதல்ல. மாணவர் அடைவு என்பது அறிகை, மனவெழுச்சி, உளஇயக்க ஆட்சிகளில், மாணவர்களின் நடத்தை மாற்றத்தை குறிப்பிடுகின்றது. கூடுதலாக அடைவுச் சோதனைகளில் அறிகை ஆட்சியினை மாத்திரம் கருதுகின்றனர். மாணவனின் அடைவை அளவிட எழுத்துச் சோதனை மூலம் பெறப்படும் தகவல்கள் போதுமானவையல்ல மாணவனின் சொல்சார், எண்கள்சார் அறிவை வைத்து மாணவரின் உடல்சார் தொழிற்பாடு தொடர்பான அனுமானங்களை மேற்கொள்ள முடியாது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவை போன்ற பல்வேறு எடுகோள்களின் அடிப்படையில் தான் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது என்பது நோக்கப்பட வேண்டிய விடயம் ஆகும்.

                இதேவேளை இலங்கையின் கல்வி மதிப்பீட்டு முறைகளுக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதனை அவதானிக்க  முடியும். ஒரு பரீட்சையில் கரும்பு எங்கு விளைகின்றது என்பது வினா ஆயின் ஒரு மாணவனுக்கு பாடப்புத்தகத்திலுள்ள விடை தெரியும். எழுதினான் புள்ளி கிடைத்தது. ஆனால் மற்றைய மாணவனுக்கு பாடப்புத்தகத்தினுள்ள விடை ஞாபகம் வரவில்லை. ஆனால் அவனது கிராமத்தில் கரும்பு விளைகின்றது. ஆனால் அது பாடப்புத்தகத்தில் இல்லை அதனை எழுத முடியாது. அதனால் புள்ளி இல்லை. இப்போது இரண்டு மாணவர்களுக்கு முன்பும் கரும்பை வைத்து இதன் பெயர் என்ன என்று கேட்டால். சரியான விடை எழுதிய மாணவனுக்கு அதன் பெயர் கரும்பு என தெரியாது. விடை எழுதாமல் புள்ளி எடுக்காத மாணவனுக்கு தமது ஊரில் விளையும் கரும்பு பற்றி நிறையவே தெரியும். எனவே எமது நாட்டில் கல்வி நடைமுறையிலிருந்து எவ்வளவு விலகியுள்ளது என்பதனையே இது காட்டிநிற்கின்றது. எனவே தனியாக புத்தக அறிவை மாத்திரம் அளவிடும் மதிப்பீட்டு முறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

                இதேசமயம் குறித்த வகுப்புக்கான திறன்களாக வரையறுக்கப்பட்டவை அந்த வயதுக்குரிய சராசரி குழந்தைகளை மனதில் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால் சில குழந்தைகளின் அடைவு என்பது சில சமயங்களில் சாத்தியப்படாது போகலாம். இலங்கையின் பாடநூல் தயாரிப்பில் இந்த வயதுக்கு இந்த திறன் பொருத்தமானது என்பது தொடர்பான விஞ்ஞான ரீதியான ஆய்வின் அடிப்படையில் பாடநூல்கள் தயாரிக்கப்படுவதாகத்  தெரியவில்லை. இலங்கையில் கலைத்திட்ட மாற்றம் என்பது தனியே பாடப்புத்தகங்களின் மட்டை மாற்றுவதாகவும் பாடவரிசை மாற்றுவதாகவுமே காணப்படுகின்றது. குறித்த வகுப்பு மாணவர்களுக்கு இந்த திறன்கள் போதியது என கலைத்திட்டக் குழுவே தீர்மானிக்கின்றது.

இது சராசரி மாணவனை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. எனவே சராசரி மாணவனை விட குறைந்தவர்கள் கற்றலில் இடர்படுதல் கட்டாயம் நடைபெறும் ஒன்றாகவே காணப்படும். எனவே இதனை பயன்படுத்திய மதிப்பீடுகள் எந்தளவு நம்பகம் மிக்கன என்பதும் சிந்திக்க வேண்டியது அத்தோடு கலைத்திட்ட மாற்றம் ஆனது நவீன மதிப்பீடு முறைகளுடன் இணைந்ததாகவே இருக்க வேண்டும். இதேவேளை எனக்கு இவை எல்லாம் தெரியும் என்கின்ற புரிதல் மாணவருக்கு ஏற்படும் போது மட்டுமே தெரியாத விடயங்கள் தொடர்பாக சிந்திக்க முடியும். மாணவர்களுக்கு எது தெரியும் என்ற அடிப்படையில் மாணவர் மதிப்பீட்டை வைத்து மாணவர் சார்பாக நியாயம் கூறும் ஆசிரியர்கள், அதிகாரிகள் இன்மையும் கவலைதரும் விடயம் ஆகும்.

                இதேசமயம் இன்றைய மதிப்பீட்டு முறைகளால் பாடசாலை என்பது தனியே அறிவை தேடும் இடமாகவே கருதப்படுகின்றது. இன்று ஒரு மாணவன் அறிவை மட்டும் தேடி பாடசாலைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. அறிவு இணையம் முழுவதும் கிடைக்கின்றது. திறன்களை வளர்த்துக் கொள்ளத்தான் பாடசாலைக்கு வரவேண்டும். எனவே அறிவை மட்டும் சோதித்து அதன் தோல்விகளை மட்டும் பேசும் கல்வி மதிப்பீட்டுமுறைகள் முடிவுக்கு கொண்டு வருவது அவசியமானது. மாணவர்களின் தோல்வியை நினைவுபடுத்திக் கொண்டு இராத மாணவர்களின் பல்திறனுக்கு மதிப்பளிக்கும் மதிப்பீட்டு முறை காலத்தில் தேவையாகும். திறமையில்லாத மாணவர் என்று ஒருவர் கூட இல்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வோர் ஆற்றல் பொதிந்துள்ளது. அது வெளிப்படும் இடமும் நேரமும் வேறு ஆக இருக்கலாம். சிலர் படிப்பில் கெட்டிக்காரராக இருக்கலாம். சிலர் விளையாட்டில் சிலர் நடனத்தில் என அத்தனை பேரின் திறமைகளையும் வெளிப்படுத்தும் மதிப்பீட்டு முறை அத்தியாவசியமானது ஆகும்.

                இதேவேளை ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை என்ற நூலின் ஆசிரியரான பின் நவீனத்துவக் கல்விச் சிந்தனையாளர் போலோ பிறைரே இன்றைய கல்வி முறையினை வங்கி முறைக்கல்வி என விமர்சிக்கின்றார். கல்வி என்பது வங்கியில் பணத்தைப் போட்டு வைப்பது போன்ற வேலை என்கின்றார். ஆசிரியர் பணம் போடுபவன் போல் செய்திகளை அதிலே போடுபவராக இத்தகைய செய்திகள் சேமித்து வைக்கும் பகுதியாக மாணவர் இருப்பதால் அதனை ஏற்றுக் கொண்டு அதனை மனப்பாடம் செய்து திரும்பச் சொல்பவர்களாக இன்றைய கல்விமுறை  இருப்பதாகக்  குற்றம் சாட்டுகின்றார். இவ்வாறான கல்விமுறை மற்றும் மதிப்பீட்டு முறைகளால் மாணவர்கள் இலகுவில் ஒடுக்கப்படுபவர்களாக மாற்றப்படுவதாகவும் குற்றம் காண்கின்றார். இதேவேளை இவற்றான கல்வி, மதிப்பீட்டு முறைகள் மாணவர்களை சுயசிந்தனை அற்றவர்களாக படைப்பாற்றல்திறன் அற்றவர்களாக மாற்றுகின்றது. எனவே இவ்வாறான கற்பித்தல் முறைகளும், மதிப்பீட்டு முறைகளும் நிச்சயம் மாற்றம் ஏற்படுதல் அவசியமாகும். சோக்கிரடிஸ் சிந்தனையைத் தூண்டுவது தான் உண்மையான கல்விமுறை என்று கூறுகின்றார் என்பதும் நோக்கத்தக்கது.

                இன்றைய மாணவர்களின் வன்முறை மற்றும் போதைப்பொருள் பாவனைக்கும் நாட்டில் மதிப்பீடு முறைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. மாணவர்களின் தோல்வியை மாத்திரம் வெளிப்படுத்தும் மதிப்பீடுகளினால் மாணவர்கள் மனரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். இதுவே வன்முறையாக மாற்றம் அடைகின்றது. நாட்டில் கல்வி மதிப்பீட்டு முறை அனைத்து மாணவர்களின் பன்முகத்தன்மைக்கு ஏற்ப மாற்றம் ஏற்படும் போது இவ்வாறான புறத்தாக்கங்கள் குறைந்து செல்லும் என்று  கல்வியியலாளர்கள்  கூறுகின்றார்கள்.

 எனவே பரீட்சை என்பது தெரிந்ததை வெளிக் கொண்டுவரும் வாய்ப்பாக நோக்க வேண்டும். மாணவர் கல்வி பெறும் விதத்தை ஒரு அறிவுப்பரிமாற்றமாக  நோக்காமல் பலவகையான கற்றல் அனுபவங்களைப் பெறுபவையாக கற்றல் கற்பித்தல் மாற்றமடைய வேண்டும். நாம் எங்கு இருக்கின்றோம் என்று அறிவதற்கு பரீட்சைகள் முக்கியமானவை தான் பரீட்சை என்பது என்றோ ஒருநாள் என்னும் போது தான் சிரமங்கள் ஏற்படுகின்றது. தெரிந்த விடயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக பகிரும் பரீட்சை முறை அறிமுகப்படுத்த வேண்டும். பதினொரு ஆண்டுகள் கற்ற ஒரு மாணவர் ஒரு நாளிலேயே சித்தியடையவில்லை என்கின்ற அறிவிப்புக்கள் உளவியல் ரீதியாக அபத்தமானவை. இதே வேளை உலகின் அனைவராலும் பாராட்டப்படும் கல்விக் கொள்கையினைக் கொண்ட பின்லாந்தில் பரீட்சையினை அடிப்படையாகக் கொள்ளாத கல்வி முறையே உள்ளது. ஆனால் அங்கு பயிலும் மாணவர்கள்  சர்வதேசரீதியாகப் போட்டிப் பரீட்சைகளில் முதலிடம் பெறுகின்றனர் என்பது அவதானிக்கப்பட வேண்டிய விடயம் ஆகும்.

                இதேவேளை பின் நவீனத்துவ கல்விச் சிந்தனையாளர் இவான் இலிச் கற்பித்தலைக் கற்றலோடு குழம்பிக் கொள்ளக் கூடாது. அதிக புள்ளி பெறுதலை கல்வியோடு குழப்பிக் கொள்ளக் கூடாது. பட்டங்களைத் தகுதியோடு குழப்பிக் கொள்ளக்கூடாது. சரளமான பேச்சை புதியன சொல்லும் ஆற்றலோடு குழப்பிக் கொள்ளக்கூடாது என்று கூறுகின்றார். அத்தோடு மருத்துவச் சிகிச்சையினை உடல் நலன் பேணல் என்றும் பொலிஸ் தரும் பாதுகாப்பை உறுதி என்றும் வணிகப் போட்டியை வளர்ச்சி என்றும் கொள்ளப்படுவது போல் மாணவர் பெறும் பரீட்சை மதிப்பீடுகளை கல்வி அடைவு என்று  தவறாக் கொள்கின்றோம் என்கின்றார்.

இதேசமயம் திறன்களை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசு கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தற்போதுள்ள தேர்ச்சி அடிப்படையாகக் கொண்ட கலைத்திட்டத்தை விட சிறப்பாக இருக்க வேண்டும் ஆனால் தற்போதுள்ள பரீட்சையின் கனதி குறைக்கப்பட்டு பிரயோக அடிப்படையில் பரீட்சைகள் மாற்றப்பட வேண்டும் இதனால் வேலைவாய்ப்பு அற்றோர் தொகை குறைந்து நாடு அபிவிருத்தி நோக்கி நகரும் என்பது திண்ணம்.

அது எவ்வாறு இருந்த போதும் ஒவ்வொரு மாணவரிடமும் வேறுவேறு ஆற்றல்கள் காணப்படும். எனவே ஒவ்வொரு மாணவரையும் மதிப்பிட தனித்தனி தராசு வேண்டும்  எல்லா மாணவரையும் ஒரே முறையில் மதிப்பிட முடியாது. ஒரே உடையினை வைத்துக் கொண்டு எல்லா உடல்களிலும் நுழைக்க முனைகின்றோம். அது பொருந்தவில்லை என்கின்ற போது அது உடையின் கோளாறு என்பதையும் புரிந்து கொள்ளாமல் யாரோ ஒருவர் மீது குற்றம் காணமுயல்கின்றோம். எனவே மதிப்பீட்டின் நவீன அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் புதிய அரசு நடைமுறைப்படுத்த போவதாகக் குறிப்பிடும் நாட்டிற்கு பொருத்தமான கலைத்திட்டத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.

இராமச்சந்திரன் நிர்மலன், ஆசிரியர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More