பறம்பு மலையை ஆண்டு வந்த மன்னன் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளல். அவனது மலையின் செல்வச் செழிப்பையும், கொடையால் அவன் பெற்ற பேரையும் புகழையும் அறிந்து மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பொறாமையினால் பறம்பு மலையை முற்றுகை இட்டார்கள்.
அப்போது பாரியின் நண்பரும் புலவருமான கபிலர் மூவேந்தர்களிடம் சென்று பாரியின் கொடையை, பறம்பு மலையின் செல்வச்செழிப்பை, குடிமக்கள் அவன் மீது கொண்ட அன்பை, படையினரின் வலிமையை, அவர்கள் பாரியின் மேல் வைத்திருந்த விசுவாசத்தை, பாரியினால் அவர்களின் முற்றுகையை நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்க கூடிய வல்லமையை பற்றி எல்லாம் எடுத்துக் கூறி, போரை நிறுத்துமாறு கேட்டார். அவர்கள் சம்மதிக்கவில்லை. இன்னலின் போதும் உறுதுணையாக நின்ற நண்பரான கபிலரிடம் தனது பெண்களான அங்கவை, சங்கவை இருவரையும் ஒப்படைத்த பாரி, “நண்பரே இவர்கள் எனது உயிரினும் மேலானவர்கள். இரகசிய வழியால் இவர்களை காப்பாற்றி செல்லும். யுத்தத்தில் எனக்கு ஏதாவது நடந்தால் அவர்களை பாதுகாத்து வாழ வைக்க வேண்டும்.” என்று வேண்டினான். கபிலர் “பாரி வள்ளலே, அவர்களை பற்றிய கவலையை விடு, நான் எனது சொந்த பெண்கள் போல காத்திடுவேன்.” என்று கூறி அவர்களை கூட்டி சென்றார். பாரியும் பறம்பு மலை மக்களும் நீண்ட நாட்கள் போராடினார்கள். மூவேந்தரின் படை பலத்தால் பறம்பு மலை வீழ்ந்தது.
கபிலர் தன் நண்பன் பாரிக்கு கொடுத்த வாக்குறுதியின் படி, அவனது பெண்களை தன் பெண்களாக கருதி, அவர்களின் அழகையும் அறிவையும் பற்றி சில குறு நில மன்னர்களிடம் கூறி, அவர்களுக்கு திருமணம் செய்விக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காத, துன்பத்தில் கை கொடுக்கும் உறவே உண்மையான நட்பு ஆகும்.
திருவள்ளுவர் “உடுக்கை இழந்தவன்போல கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” என்று சொல்லி வைத்தார்.
மகாலிங்கம் தனி ஒரு பிள்ளையாக கணபதியாராலும் மீனாட்சியாலும் அன்பாகவும், பாசமாகவும், சுதந்திரமாகவும் வளர்க்கப்பட்டிருந்த படியால் தனக்கு சரி என்று பட்ட எதனையும் துணிவாக செய்து பழக்கப்பட்டிருந்தார். கணபதியாரும் மீனாட்சியும் மகாலிங்கத்திடம் எதனையும் எதிர்பார்த்தது இல்லை. கணபதியாரின் அறையில், அவர் இறந்த பிறகு பதினைந்து மூட்டைகளில் நெல் இருந்தது. இருவரும் தங்கள் செத்தவீட்டு செலவை கூட தனக்கு வைக்கவில்லையே என்ற கவலை மகாலிங்கத்திற்கு இருந்தது.
மகாலிங்கம் இலங்கையின் நகரங்கள் எல்லாவற்றுக்கும் சென்று வந்தாலும், அவர் மனதில் தான் ஒரு கிராமத்தான் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது. மகாலிங்கத்திற்கு பல நண்பர்கள் இருந்த போதும் மார்க்கண்டு விதானையாரும் சுப்பிரமணியமும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.
என். எம். பெரேரா நிதி அமைச்சராக இருந்த போது நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. யாழ்ப்பாண முதலாளிகள் வன்னியில் நெல்லை கொள்வனவு செய்து பதுக்குவதை அறிந்தார். ஆனையிறவில் இருந்த பரியரால் (barrier) வன்னியிலிருந்து வாகனங்களில் நெல் கொண்டு போவதை தடுக்க சட்டம் கொண்டு வந்தார்.
[திரு. N. M. பெரேரா திருமதி ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் 1970 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி முதல் 1975 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நிதி அமைச்சராக இருந்தவர். அவர் லங்கா சம சமாஜ கட்சியைச் சேர்ந்தவர்]
முதலாளிகள், லொறியில் ஏற்றுவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை பெற்று, நெல்லை கொண்டு சென்று விடுவார்கள். இலங்கையின் சாதாரண குடிமக்கள் கூப்பனுக்கு பங்கீட்டு (Ration) அரிசியை வாங்கினார்கள். அது அவர்களுக்கு போதாமலிருந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்து, அரிசியை வாங்கி, றெயினில் கொண்டு சென்றார்கள். அதை அறிந்த அதிகாரிகள் றெயின் வரும் நேரத்திற்கு பரந்தன் ஸ்ரேஷனுக்கு வந்து விடுவார்கள். அதனால் அவர்கள் ஸ்ரேஷன் தாண்டியிருந்த பற்றைகளின் மறைவில் நின்று விட்டு, அரிசி பொதிகளுடன் றெயின் ஓட ஓட ஏறி விடுவார்கள். றெயின் ஆனையிறவில் நிற்பதில்லை, அடுத்து பளையில் தான் நிற்கும்.
பளையிலும் அதற்கு அப்பாலும் அரிசி கொண்டு போவதை தடுக்க சட்டம் இல்லை. விசயத்தை அறிந்த அதிகாரிகள் புகையிரதப்பகுதி அதிகாரிகளுடன் கதைத்து றெயினை ஆனையிறவில் நிற்பாட்டி, சோதனை செய்த பின்னர் அனுப்ப ஒழுங்கு செய்தார்கள். மக்களால் றெயினிலும் அரிசியை கொண்டு செல்ல முடியவில்லை. நான்கு ஐந்து பேராக நெல்லை வாங்கி, றக்டரில் ஏற்றி சுட்டதீவு கரைக்கு கொண்டு சென்று, வாடகைக்கு பிடித்த தோணிகளில் ஏற்றி, கச்சாய் கரைக்கு கொண்டு போனார்கள்.
சுட்டதீவு பரந்தன் விதானையாரின் நிர்வாக எல்லைக்குள் இருந்தது. சிறிது தூரம் தள்ளி உப்பளம் அருகே ஏற்றினால், அது ஆனையிறவு விதானையாரின் எல்லைக்குள் வந்து விடும். குடமுருட்டி ஆற்றுக்கு மேற்கே ஏற்றினால், அது பூனகரி–நல்லூர் விதானையாரின் எல்லைக்குள் வந்து விடும்.
கடலால் நெல்லை கடத்துகிறார்கள் என்பதை வன்னியில் மக்கள் அனைவரும் அறிவர். இந்த விடயம் மகாலிங்கத்திற்கும் தெரியும். கிளிநொச்சியிலிருந்த பொலிஸ் சுப்பிறீன்ரென்ட்டும், பொலிஸ் இன்ஸ்பெக்டரும் நேர்மையாகவும் கடமையுணர்வுடனும் சேவை செய்தனர். உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவன், நெல் கடத்தும் மில் முதலாளிகளிடம் காசு பெற்றுக்கொண்டு உதவ முன்வந்தான். எங்கேயும் ஒரு கறுப்பு ஆடு இருப்பது வழமை தானே.
உள் கிராமங்களிலிருந்து லொறியில் பரந்தன் சந்திக்கு நெல் கொண்டு வர, உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் லொறியில் ஏறி முன் சீற்றில் இருந்து விடுவான். லொறியில் உதவி இன்ஸ்பெக்டர் பயணம் செய்கிறார், தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்க வாய்ப்பில்லை என்று கருதி ஆனையிறவு பரியரில் அந்த லொறியை சோதிக்க மாட்டார்கள். உதவி இனஸ்பெக்டர் இயக்கச்சியில் இறங்கி, அவரை பின் தொடர்ந்து வந்த ஜீப்பில் ஏறி திரும்பி வந்து விடுவார்.
ஜீப் வண்டி ஆனையிறவு தாண்டி போகும் போதும், அரை மணித்தியாலத்திற்குள் திரும்பி வரும் போதும் அதன் இலக்கமும் நேரமும் அங்கு பதியப்படுவதை உதவி இன்ஸ்பெக்டர் கருத்தில் கொள்ளவில்லை. அன்றைய திகதியில் அந்த குறிப்பிட்ட ஜீப் எந்த அதிகாரியின் பாவனையில் இருந்தது என்று பதிந்த புத்தகம் பொலிஸ் ஸ்ரேஷனில் இருக்கும்.
தோணிகளில் நெல் கொண்டு செல்வதால், லொறியில் ஏற்றுவது நின்று, உதவி இன்ஸ்பெக்டருக்கு மேலதிகமான வருமானம் இல்லாமல் போனது. மேலதிகாரிகளுக்கு கூறி, அனுமதி பெற்று, ஜீப்பில் கூடுதலான பொலிசாருடன் சுட்டதீவிற்கு போய் பிடிப்பதால் அவனுக்கு லாபமில்லை. பூனகரி-நல்லூர் விதானையாரை, பரந்தன் விதானையாரை அல்லது ஆனையிறவு விதானையாரை அணுகி தடுத்தாலும் அவனுக்கு லாபமில்லை.
உதவி இன்ஸ்பெக்டரும் மூன்று சாதாரண பொலிஸாரும் ஜீப்பில் வராது ஒரு தனியாரின் காரை, ட்றைவரின் விருப்பத்திற்கு மாறாக நடுச்சாமத்தில் மிரட்டி வாடகைக்கு பிடித்துக் கொண்டு, மகாலிங்கம் விதானையார் வீட்டிற்கு வந்தார்கள். சாமத்தில் வீட்டிற்கு முன்னால் நின்று கோணை அடிக்க, விதானையார் நித்திரை குழம்பி ஐந்து பற்றி டோர்ச் லைற்றுடன் வெளியில் வந்தார். உதவி இன்ஸ்பெக்டரை பொலிஸாருடன் கண்டதும் இவன் ஏதோ கரைச்சல் தரத்தான் வந்திருக்கிறான் என்று நினைத்தார். சுந்தர், மணி, பொன்னம்மாவும் வெளியே வந்தார்கள்.
உதவி இன்ஸ்பெக்டரும் பொலிஸ்காரங்களும் நன்கு குடித்திருந்தார்கள். அவர்கள் அருகில் வர மகாலிங்கத்திற்கு சாராய நெடி வீசியது. “என்ன விதானையார் சுட்டதீவால் நெல்லு கடத்துறாங்களாம், அவங்களை பிடிக்க நீங்களும் உதவிக்கு வரோணும்.” என்றார்கள். மகாலிங்கம் “நான் வீட்டை விட்டு வெளியில் வரேலாது, என்ரை ஐயா செத்து இன்னும் முப்பத்தொண்டு முடியேல்லை, நான் லீவில் நிக்கிறன்.” என்று தன் நிலைமையை விளக்கினார்.
உதவி இன்ஸ்பெக்டர் “சரி, காட்டுக்குள்ளை காரில் போகேலாது, உங்கடை றக்டரை தாருங்கோ நாங்கள் போறம்.” என்றான். மகாலிங்கம் ‘இப்ப இவன் போனால் அப்பாவிகளை பிடித்து, மிரட்டி, அடித்து, காசு வாங்குவான். இவனுக்கு றக்டர் குடுக்க கூடாது.’ என்று நினைத்தார். “றக்டருக்கு ஒயில் மாத்த வேணும், மாத்தாமல் ஓடேலாது.” என்று சொன்னார்.
மகாலிங்கம் மறுத்தது அவனுக்கு பிடிக்கவில்லை, நெல் கடத்துபவர்களை பிடிக்காவிட்டால் காசு வராது என்ற கோபம் தலைக்கேற “நீயும் சேர்ந்து தான் நெல்லை கடத்திறாய். அது தான் றக்டரை தாறாயில்லை.” என்றவன் தொடர்ந்து கெட்ட வார்த்தைகளால் ஏசியபடி அடிக்க கையை ஓங்கினான். மகாலிங்கம் கையிலிருந்த ஐந்து பற்றி டோர்ச் லையிற்றால் ஓங்கிய கையில் அடித்தார்.
உடனே மற்ற பொலிசார் மகாலிங்கத்தை கட்டிப்பிடிக்க, மணியும் பொன்னம்மாவும் ஓடி வந்து கட்டிப்பிடித்த பொலிசாரை இழுத்தார்கள். மகாலிங்கம் ஒரு அல்சேஷன் நாயை, ஆனந்தன் என்று பெயரிட்டு குட்டியிலிருந்து வளர்த்தார். அது மகாலிங்கத்தையோ மணியையோ யாராவது தொட்டால் பாய்ந்து கடிக்க போய் விடும். ஒரு பொலிஸ்காரன் மணியை தள்ளி விட ஆனந்தன் அவன் மீது பாய்ந்து, விறாண்டி கடிக்க போனது. மற்ற பொலிஸ்காரன் றிவோல்வரை எடுத்து நாயை சுடுவதற்கு குறி பார்த்தான்.
சுந்தரை ஒரு பொலிஸ்காரன் துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருந்தான். நடுச்சாமத்தில் கார் வந்து மகாலிங்கத்தின் வீட்டுக்கு முன்னால் நின்றதும், பேச்சு சத்தம் கேட்டதும் ஊர் மக்கள் கத்திகளோடும் பொல்லுகளோடும் ஓடி வந்தார்கள்.
முதல் ஓடி வந்த பேரம்பலம், மகாலிங்கத்திற்கு யாரோ அடிக்கிறார்கள் என்று நினைத்து “ஆரடா, என்ரை பிள்ளைக்கு அடிக்கிறது? என்று கேட்டவாறு ஓடிப்போய் அவர்களின் மேல் பாய்ந்தார். பேரம்பலத்தார் நல்ல உயரம் பெருப்பமான மனிதர். அவர் ஆக்ரோஷமாக பாய்ந்ததும் மகாலிங்கத்தை பிடித்திருந்தவனும் நாய்க்கு குறிபார்த்தவனும் மண்டை அடிபட நிலத்தில் விழுந்தார்கள். துவக்கு தூரத்தில் விழுந்து விட்டது. கார் ட்றைவர் அதை எடுத்து பத்திரமாக வைத்துக் கொண்டான். விழுந்தவர்கள் எழும்பி மகாலிங்கத்தை மறந்து பேரம்பலத்தாரை கட்டிப்பிடித்து விழுத்தினார்கள்.
ஓடி வந்த ஊரவர்களில் ஒரு பகுதியினர் விதானையார் வீட்டில் திரள, இன்னொரு குழுவினர் “விதானையார் வீட்டில் பொலிஸ்காரங்கள் கரைச்சல் குடுக்கிறாங்கள், ஆயுதம் வைத்திருப்பாங்கள், அவங்களுக்கு பாடம் படிப்பிக்க வேணும்.” என்று எட்டாம் வாய்க்கால் சந்தியை நோக்கி ஓடினார்கள்.
ஊரவர்கள் பெருமளவில் வருவதை அவதானித்து பயந்து போன ட்றைவர் ஓடிப் போய் காரை திருப்பினான். “நான் போகப்போறன், வாறாக்கள் வாருங்கோ” என்று கத்தினான். பயந்து போன பொலிசார் உதவி இன்ஸ்பெக்டரிடம் “வாருங்கோ போவம், சனம் கெம்பி வருகுது, நிண்டால் கரைச்சல்.” என்றார்கள்.
அவன் “விதானையையும் ஏத்துங்கோடா.” என்று சொல்லி விட்டு ஓடிப்போய் காரின் முன் சீற்றில் ஏறினான். மற்றவர்கள் பின் சீற்றில், இரவு உடையான சாறம் கட்டி, வெள்ளை நிற அரைக்கை பெனியனோடிருந்த விதானையாரை நடுவில் இருத்தி தாங்கள் இரு பக்கத்திலும் ஏறி இருந்தார்கள்.
எட்டாம் வாய்க்கால் சந்தி, பூனகரி றோட்டும் எட்டாம் வாய்க்கால் வீதியும் சந்திக்கும் ஒரு நாற்சந்தி. அங்கு கூடியவர்கள் றோட்டு வேலைக்கு குவித்திருந்த கற்களை கைகள் நிறைய அள்ளிக் கொண்டு, நான்கு மூலைகளிலும் ஒளித்து நின்று வரும் காரை தாக்க தயாரானார்கள். கார் வந்ததும் ஆவேசமாக காரை நோக்கி கற்களை எறிந்தார்கள். காரின் முன் லைற் ஒன்றும், பக்க யன்னல் கண்ணாடி ஒன்றும் உடைந்தன. காரின் ஏனைய பகுதிகள் எல்லாம் கல்லெறிந்த காயம் ஏற்பட்டது.
திறந்திருந்த காரின் யன்னல் கதவால் பாய்ந்த கற்கள் றைவரையும் கரையில் அமர்ந்திருந்தவனையும் தாக்கின. நடுவில் இருந்த மகாலிங்கத்திற்கு கல்லெறி படவில்லை. உதவி இன்ஸ்பெக்டர் சீற்றுக்கு கீழே குனிந்து இருந்து கொண்டான். பயந்து போன ட்றைவர், காரை நிற்பாட்டாது பயத்தினால் அங்கும் இங்குமாக காரை கவிழ விடாமல் ஓட்டினான்.
பாதுகாப்பான இடத்துக்கு வந்திட்டம் என்னு நினைத்த ட்றைவர், டாஸ்போட்டில் (dashboard) வைத்திருந்த றிவோல்வரை எடுத்து, பின்னால் இருந்த பொலிசிடம் கொடுத்தான். அப்போது தான், றிவோல்வரை தவற விட்டதை உணர்ந்த அவன் ட்றைவரின் முதுகில் தட்டி, “பெரிய உபகாரம் தம்பி” என்றான்.
உதவி இன்ஸ்பெக்டர் ட்றைவரின் பிடரியில் அடித்து “மடையா, நீ அங்கை தந்திருந்தால் கல் எறிஞ்சவங்களை சுட்டு விழுத்தியிருப்பன்.” என்று வீராப்பு பேசினான். பிடரியைத் தடவிய ட்றைவர் ‘ஓம், பயந்து குனிஞ்சிருந்த நீ, கை நடுங்கி என்னைத்தான் சுட்டிருப்பாய்’ என்று மனதிலுள் கறுவினான்.
காரை றோட்டில் நிறுத்தி விட்டு விதானையாரை உள்ளே கொண்டு போனார்கள். “கார்க்காசு” என்று கேட்ட ட்றைவரிடம் ஒரு பொலிசுக்காரன் “தம்பி காலமை வந்து கேள். இப்ப ஐயா கோபமாயிருக்கிறார்.” என்றான். உதவி இன்ஸ்பெக்டர் “விதானையை லொக் அப்பில் போடு (lock-up)” என்றான்.
அப்போது தனது அலுவலகத்தை விட்டு வெளியில் வந்த இன்ஸ்பெக்டர், “சரியான குற்றச்சாட்டு இல்லாமல் ஒரு விதானையை லொக் அப்பில் போடுவது பிழை.” என்றார். அத்துடன், விதானையாரை வெளி வாங்கில் இருக்க விட்டு, முறைப்பாட்டை பதியுங்கள் என்று சொன்னார்.
அதற்கு உதவி இன்ஸ்பெக்டர், “விதானையிடம் நெல்லு கடத்தல் செய்பவர்களை பிடிக்க உதவி செய்ய சொல்லி கேட்ட போது உதவி செய்ய மறுத்து, உதவி இன்ஸ்பெக்டரை ஐந்து பற்றி டோர்ச்சால் அடித்தார். நாங்கள் அவரை பொலிஸ் ஸ்ரேசனுக்கு கொண்டு வரும் போது காடையர்களை விட்டு எங்களை காருடன் சேர்த்து கல்லெறிந்து தாக்குவித்தார்.” என்று முறைப்பாடு பதிந்தான்.
கணவனை பொலிசார் கொண்டு செல்வதைக் கண்ட பொன்னம்மா துடித்துப் போய் சுந்தரிடம் “றக்டரை எடுங்கோ, மணியண்ணை வீட்டுக்கு முதலில் போவம்.” என்றா. அந்த நேரத்தில் சுப்பிரமணியத்தார் தான் பொன்னம்மாவுக்கு நினைவில் வந்தார். மணியும் குழந்தையுடன் றக்டரில் ஏறி விட்டாள்.
சாமத்தில் கதவை தட்டி பொன்னம்மா கூப்பிட்டதும், சுப்பிரமணியம் பதறிப்போய் ஓடி வந்து கதவை திறந்தார். அழுதபடி பொன்னம்மா கூறியது முதலில் அவருக்கு விளங்கவில்லை, சுந்தர் விளக்கமாகச் சொன்னான்.
சுப்பிரமணியத்தார், “நீங்கள் அழாதையுங்கோ. எனக்கு தெரிந்த ஒரு மில் முதலாளி இருக்கிறார், அவருக்கு பொலிஸ் சுப்பிறீன்டனுடன் நல்ல பழக்கம். முதல் அவரிட்டை போவம்.” என்று சொல்லி அவசரமாக வெளிக்கிட்டு, காரை எடுத்து வந்தார்.
பொன்னம்மா சுந்தரிடம் “தம்பி வீட்டிலை எல்லாம் போட்டபடி கிடக்குது. நீங்கள் போய் அதை பாருங்கோ.” என்று கூறி அனுப்பினா. காரில் பொன்னம்மாவுடன் மணியும் ஏற வந்ததை கண்ட சுப்பிரமணியத்தார் “பிள்ளை குழந்தையோடை நீ ஏன் அலையிறாய்? நீயும் சுந்தரோடை வீட்டுக்கு போ. நான் அம்மாவோடை போய் ஐயாவை கூட்டி வாறன்” என்று சொன்னார். மணி “இல்லை மாமா, நான் ஐயாவை பார்க்க வேணும்.” என்று அழுத படி காரில் ஏறி விட்டாள்.
கார் நேரே மில் முதலாளியின் வீட்டிற்கு முன்னால் போய் நின்றது. மில் முதலாளி வீட்டுக்கு போன மணியத்தார் அவரை பல முறை கூப்பிட்டார். நாய்கள் பெரிதாக குலைத்தும் அவர் எழும்பி வரவில்லை. காவலாளி வந்து விசாரித்தான். அவனுக்கு மணியண்ணையை தெரியும். அவன் “இரவில் கதவை திறந்தால் முதலாளி பேசுவார். மணியண்ணை நீங்கள் கதவுக்கு கீழாலை குனிஞ்சு வாருங்கோ” என்றான். அடிக்கடி மணியத்தார் போவதால், முதலாளி வீட்டு நாய்கள் அவருக்கு நல்ல பழக்கம், அவை அவரை கண்டதும் வாலையாட்டின.
வீட்டு வாசலில் போய் நின்று கூப்பிட முதலாளி வந்தார், கதவை திறந்து பார்த்து மணியத்தாரை அடையாளம் கண்டு கொண்டு விசாரித்தார். அவரிடம் விசயத்தை சொன்னதும் பயந்து போனவர் மணியத்தாரை பார்த்து “உனக்கு என்ன விசரே? உதவி இன்ஸ்பெக்டர் பொல்லாதவன், சுப்பிறீன்டனிடம் முறைப்பாடு கொடுத்தது தெரிஞ்சால் என்னையும் விட்டு வைக்க மாட்டான். போய் காலமை வரைக்கும் பார், பிறகு யோசிக்கலாம்.” என்று கூறி கதவை சாத்தி விட்டார்.
திரும்பி வந்து காரில் ஏறிய மணியத்தார், அவர் பயப்பிடுறார் “நாங்கள் போய் பார்ப்பம். எங்களை என்ன கடிச்சு தின்ன போறாங்களே?” என்றவர், காரை பொலிஸ் ஸ்ரேசனை நோக்கி செலுத்தினார். பொலிஸ் ஸ்ரேசனுக்கு முன்னால் ஊர் மக்கள் மட்டும் இல்லை, கேள்விப்பட்டு உமையாள்புரம் மக்களும் வந்து குவிந்திருந்தார்கள்.
சிலர் வந்து மணியத்தாரின் காரை சூழ்ந்து கொண்டார்கள், சனங்கள் கூடுதலாக வரக்கண்ட பொலிஸ்காரங்கள் சரியாக பயந்து போனார்கள். உள்ளுக்குள்ளை உதவி இன்ஸ்பெக்டர் ஏதோ பேச மற்றவர்களும் கதைக்க ஒரே கலவரமாய் இருந்தது.
மணியத்தாரால் உள்ளுக்கு போக முடியவில்லை. மகாலிங்கம் வெளி வாங்கிலில் இருப்பது வெளியில் இருந்து பார்த்தவர்களுக்கு தெரிந்தது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது.
மகாலிங்கத்தாருடன் பொன்னம்மா சில சந்தர்ப்பங்களில் நீதவானை சந்தித்திருக்கிறா. பொன்னம்மா “மணியண்ணை நாங்கள் நீதவான் வீட்டை போய் கதைச்சு பார்த்தால் என்ன?” என்று கேட்க, மணியத்தார் “கொஞ்சம் பொறுத்தால் விடிஞ்சிடும். இப்ப விதானையாரை எங்களுக்கு தெரியுது தானே, பயப்பிட தேவையில்லை, சனத்தோடை நிண்டு பார்ப்பம். கிழக்கு வெளிக்க நீதவானிட்டை போவம்.” என்று சொன்னார்.
சிறிது நேரத்தால் மணியத்தார் காரை நீதவானின் விடுதிக்கு விட்டார். காவலுக்கு நின்றவரிடம் விசயத்தை சொன்னார். வெளியில் கார் வந்து நின்றதையும் எதோ கதைப்பதையும் கேட்டு வெளியில் வந்த நீதவான் பொன்னம்மாவை, மகாலிங்கத்தின் மனைவி என்று அடையாளம் கண்டு கொண்டார். அவரை கண்டதும் பொன்னம்மா, “ஐயா, இவரை பொலிஸ்காரங்கள்……..” என்றவ கதைக்க முடியாமல் அழுதா. மணியத்தார் விபரத்தை நீதவானுக்கு சொன்னார்.
“உள்ளுக்குள்ளை வந்து விறாந்தையிலை இருங்கோ, நான் சுப்பிறீன்டனிடம் கதைச்சு பார்க்கிறன்.” என்றவர் உள்ளே சென்று, தொலைபேசியில் கதைத்தார். சுப்பிறீன்டன் நிலைமையையும் சனம் வந்து குவிவதையும் சொன்னார். நீதவான் “நீங்கள் உடனே மகாலிங்கத்தை சரீரப்பிணையில் விடுங்கோ. பிரச்சினையை வளர விடாதீங்கோ.” என்று ஆலோசனை சொன்னார்.
சுப்பிறீன்டன் “நீங்கள் மகாலிங்கத்தின் மனைவியை அனுப்பி விடுங்கோ. மகாலிங்கத்திட்டை கையெழுத்து வாங்கிக் கொண்டு விட சொல்லுறன்.” என்று கூறினார். நீதவான் விசயத்தைச் சொல்ல, மணியத்தார் காரை பொலிஸ் ஸ்ரேஷனுக்கு ஓட்டிப் போய், இறங்கிய பொன்னம்மாவையும் மணியையும் உள்ளே கூட்டிச் சென்றார். மகாலிங்கத்திடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு, அவரை போக அனுமதித்தார்கள்.
மணியத்தார் மகாலிங்கத்தைப் பார்த்து, “வாங்கோ விதானையார் வீட்டுக்குப் போவம்” எனக் கூறி மகாலிங்கத்தின் முதுகை அணைத்தபடி கார் நின்ற இடத்திற்கு கூட்டிச் செல்ல, பொன்னம்மாவும் மணியும் பின்னால் சென்றனர்.
மகாலிங்கத்தை விட்டதைக் கண்ட மக்கள், மகாலிங்கத்தாரின் கையை பிடித்து ஆறுதல் கூறிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்றார்கள். மணியத்தார் மகாலிங்கத்தை காரில் ஏற்றினார். பின்னால் வந்து மணியுடன் ஏறிய பொன்னம்மா ‘மணியண்ணை மட்டும் இல்லாட்டில் என்ன செய்திருப்பன்?’ என்று நினைத்தா. ‘மக்கள் வந்து திரண்டதையும், பெரிய முதலாளியே பயந்து பின்னடித்த போது, மணியண்ணை துணிந்து வந்ததையும், மணியண்ணைக்கு நாங்கள் எவ்வளவு கடமை பட்டிட்டம். அவருக்கு நாங்கள் என்னத்தை செய்யப்போறம்.’ என்றும் நினைத்து அவரை கண்கள் கலங்கப் பார்த்தா. சுப்பிரமணியத்தார் ஏதோ தான் சாதாரணமாக செய்யும் வேலைகளில் ஒன்றை செய்தது போல எதை பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் காரை ஓடினார். சுப்பிரமணியத்தார், மகாலிங்கத்தை வீட்டில் கொண்டு போய் இறக்கி, “ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ” என்று ஆறுதல் சொல்லி விடை பெற்றார்.
உதவி இன்ஸ்பெக்டர் மேல் நெல் கடத்துபவர்களுக்கு உதவி செய்வது பற்றி ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் (complaint) இருந்ததால், விதானையார் வீட்டு பிரச்சினையின் பின்னர், அவர் மேலதிகாரிகளால் உள்ளக இடமாற்றம் செய்யப்பட்டார். தகப்பனின் செத்த வீட்டின் பின் மகாலிங்கம் லீவில் நின்றதையும், கடத்தல் இடம் பெற்றது அவரின் நிர்வாக எல்லைக்குள் இல்லாததையும், உதவி இன்ஸ்பெக்டர் அவர் மீது செய்த முறைப்பாடு பிழையானது, என்பதை மேலதிகாரிகள் புரிந்து கொள்ள போதுமானதாக இருந்ததால், அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை.
மகாலிங்கம், சுப்பிரமணியத்தின் அறிமுகம் கிடைத்த காலத்திலிருந்து கிளிநொச்சி செல்லும் போது மணியத்தார் வீட்டிற்கு சென்று, அவருடன் நின்ற படி கதைத்து விட்டு, கந்தோருக்கு போவது வழமை. காலை எழுந்து காரை கழுவி துடைத்து சாம்பிராணி காட்டி, ஒரு முறை ‘ஸ்ரார்ட்’ (start) பண்ணி பார்த்து விட்டு, குளிக்க செல்வார். குளித்து விட்டு வந்து சாமி கும்பிட்டதும் வெளிக்கிட்டு நின்று கொண்டு “சாப்பாட்டை கொண்டு வாப்பா. நேரம் போட்டுது.” என்று அவசரப்படுவார்.
பொன்னம்மா “இப்ப போய் என்ன செய்ய போறீங்கள். கொஞ்சம் பொறுங்கோ, எனக்கு என்ன நாலு கையும் காலுமே” என்று சொல்லி விட்டு சுடச்சுட புட்டுக்கு கறியை விட்டு கொண்டு வந்து கொடுக்க, நின்ற நிலையில் சாப்பிடுவார். நேஷனலை போட்டுக் கொண்டு, டயறி இருக்கோ என்று சரி பார்த்து விட்டு, வெளிக்கிட்டு விடுவார்.
பொன்னம்மா “இவர் அவசரப்பட்டு கொண்டெல்லோ போறார். இவர் எங்கை போறார் தெரியுமே?, மணியண்ணை வீட்டை போய், அவரோடை அரை மணித்தியாலம் ஊர் கதை கதைச்சுப் போட்டு, பிள்ளைகள் கொடுக்கிற தேத்தண்ணியையும் வாங்கி குடிச்சிட்டு கந்தோருக்கு போவார்.” என்று வீட்டில் நிற்பவர்களிடம் சொல்லுவா.
அன்றைக்கு டீ. ஆர். ஓ. கந்தோரிலை முக்கியமான கூட்டம். நாபனும் லீவில் வந்து நின்றான். மகாலிங்கம் நாபனிடம் “இன்று முக்கியமான கூட்டம் இருக்கு, நீயும் என்னோடு வா. என்னை விட்டிட்டு நீ காரை கொண்டு வா, நான் பின்னேரம் பஸ்ஸிலை வாறன்.” என்று நாபனையும் கூட்டிச் சென்றார்.
கார் குமரபுரத்தில் சுப்பிரமணியத்தார் வீட்டின் முன் நின்றது. “கொஞ்சம் பொறு நான் மணியத்தாரை சந்திச்சு கொண்டு வாறன்.” என்று நாபனிடம் சொல்லி விட்டு உள்ளே போக, அழுகுரல் கேட்டது. பிள்ளையள் “ஐயா, ஐயா, என்ன செய்யுது” என்று கதறி அழுதார்கள். நாபனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
மகாலிங்கம் பதறிக் கொண்டு ஓடி வந்தார். அப்போது அந்த முக்கியமான கூட்டத்தைப் பற்றி அவர் சிறிதும் யோசிக்கவில்லை. “தம்பி, மணியத்தாருக்கு சரியான நெஞ்சுக் குத்து, தாங்கேலாமல் குழறுறார். பிள்ளையள் என்ன செய்யிறதெண்டு தெரியாமல் அழுது கொண்டு நிக்கினம். அவரை கொண்டு போய் மானிப்பாய் ஆஸ்பத்திரியிலை காட்டிக் கொண்டு வாறன். லீவு கடிதம் தாறன், சீப் கிளாக்கரிட்டை (Chief clerk) குடுத்து விபரத்தை சொல்லி விடு.” என்று நாபனிடம் கூறியவாறு டயறிக்குள் இருந்த ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து மளமளவென்று லீவு கடிதம் எழுதி, நாபனிடம் கொடுத்து விட்டு, உள்ளே ஓடினார்.
மகாலிங்கமும், அங்கை நின்ற பரமசாமி என்ற உறவினரும், பிள்ளைகளும் சேர்ந்து மணியத்தாரை தூக்கி காரில் ஏற்றினார்கள். மகாலிங்கம் பிள்ளைகளை பார்த்து ” அழாதிங்கோ பிள்ளையள், ஐயா சுகமாகி வந்து விடுவார்.” என்று சொல்லி விட்டு காரை ஓட, பரமசாமி முன்னுக்கு இருக்க, மணியத்தாரை மடியில் சாய்த்து வைத்த படி அவரின் மனைவி பின்னுக்கு இருந்தா. கார் வேகமாக யாழ்ப்பாணத்தை நோக்கி ஓடியது.
நாபன் டீ. ஆர். ஓ. கந்தோருக்கு போய் விபரத்தை சொல்லி லீவு கடிதம் கொடுத்து விட்டு, வீட்டுக்கு போனான். மூன்று மணியளவில் பரந்தன் சந்திக்கு காரை கொண்டு வந்த நாபன் அவருக்காக காத்திருந்தான். மூன்றரை மணியளவில் கார் திரும்பி வந்தது. மகாலிங்கம் ஓட, பரமசாமி பக்கத்தில் இருந்தார்.
காரை வீட்டிலை நிப்பாட்டியவர் பிள்ளைகளை கூப்பிட்டு “பிள்ளையள் யோசிக்காதேங்கோ, ஐயாவுக்கு நல்ல சுகம். டொக்டர் பார்த்து, சோதிச்சு ஊசி போட, நெஞ்சுக் குத்து நிண்டிட்டுது. இரவு தங்கி நாளைக்கும் பார்த்திட்டு போகச் சொல்லி டொக்டர் சொன்னவர். நாளைக்கு காலமை பரமசாமி போய் கூட்டி வருவார்.” என்று சொல்லி விட்டு வெளியில் வந்த தகப்பனை, நாபன் காரைக் கொண்டு வந்து நிறுத்தி ஏற்றினான்.
சம்பவத்தை கேள்விப்பட்ட பொன்னம்மா, ‘இவரும் மணியண்ணையும் ஒருவருக்கொருவர் இவ்வளவு சினேகிதமாக இருக்கினம், நாபனுக்கு மணியண்ணையின் மகள் சுசீலாவை செய்து வைத்தால் எவ்வளவு நல்லது.’ என்று மனதுக்குள் நினைத்தா.
.
தொடரும்..
.
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
ஓவியம் : இந்து பரா – கனடா
.
முன்னைய பகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/
பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/
பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/
பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/
பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/
பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/
பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/
பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/
பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/
பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/
பகுதி 12 – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/
பகுதி 13 – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/
பகுதி 14 – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/
பகுதி 15 – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/
பகுதி 16 – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/
பகுதி 17 – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/
பகுதி 18 – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/
பகுதி 19 – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/
பகுதி 20 – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/
பகுதி 21 – https://vanakkamlondon.com/stories/2021/01/99913/
பகுதி 22 – https://vanakkamlondon.com/stories/2021/02/100718/
பகுதி 23 – https://vanakkamlondon.com/stories/2021/02/101415/
பகுதி 24 – https://vanakkamlondon.com/stories/2021/02/101804/
பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/
பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/
பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/
பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/
பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/
பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/
பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/
பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/
பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/
பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/
பகுதி 35 – https://vanakkamlondon.com/stories/2021/05/110730/
பகுதி 36 – https://vanakkamlondon.com/stories/2021/05/111664/
பகுதி 37 – https://vanakkamlondon.com/stories/2021/05/112697/
பகுதி 38 – https://vanakkamlondon.com/stories/2021/05/113713/
பகுதி 39 – https://vanakkamlondon.com/stories/2021/06/114747/
பகுதி 40 – https://vanakkamlondon.com/stories/2021/06/115804/
பகுதி 41 – https://vanakkamlondon.com/stories/2021/06/116949/
பகுதி 42 – https://vanakkamlondon.com/stories/2021/06/118039/
பகுதி 43 – https://vanakkamlondon.com/stories/2021/06/119015/
பகுதி 44 – https://vanakkamlondon.com/stories/2021/07/120022/
பகுதி 45 – https://vanakkamlondon.com/stories/2021/07/121109/
பகுதி 46 – https://vanakkamlondon.com/stories/2021/07/122111/
பகுதி 47 – https://vanakkamlondon.com/stories/2021/07/123126/
பகுதி 48 – https://vanakkamlondon.com/stories/2021/08/124048/