Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை மட்டக்களப்பு வரலாற்றில் காணாமல் போன ‘பெரியதுறை’ | பிரசாத் சொக்கலிங்கம்

மட்டக்களப்பு வரலாற்றில் காணாமல் போன ‘பெரியதுறை’ | பிரசாத் சொக்கலிங்கம்

15 minutes read
திருப்பொரும்துறை

நீர்வழிசார்  போக்குவரத்தின் தொடக்க மற்றும் முடிவு புள்ளிகளில் உருவான தளம் அதன் பயன்பாட்டுத் தன்மையில் இறங்குதுறை, துறைமுகம், படகுத்துறை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. இந்தப்போக்கில் மட்டக்களப்பும் பல துறைகளை தனது வரலாற்றில் பதிவு செய்திருக்கின்றது.

மட்டக்களப்பு வரலாற்றில் நீர்வழிப்போக்குவரத்தால் உருவான துறைகளின் அல்லது துறைமுகங்களின் ஓர் அறிமுகமாகவும் அதில் குறித்த ஒரு துறையையும் அதை அண்டி ஏற்பட்ட மக்கள் குடியிருப்பையும் அதன் வழி கட்டமைக்கப்பட்ட பண்பாட்டினையும் தேடும் முயற்சியாக  பயணிக்கும் இக்கட்டுரை  மிகச் சுருக்கமானதாகும்.

வரலாற்றில் மட்டக்களப்புத் துறைகள்

பதின்நான்காம் நுாற்றாண்டில் தோன்றியதாக கருதப்படும் இலக்கியமான கண்ணகி வழக்குரையின் துரியோட்டும் காதை தரும், கடல்சூழ் இலங்கையில் காணப்பட்டதாக கருதப்படும் பல்வேறு துறைமுகங்கள் பற்றி சேதிகளில்,

பன்றித்தீவு சல்லித்தீவு பாலமுனை பாசிக்குடா

என்றைக்கா லமும் வழங்கும் ஏறாவூர் தனைக்கடந்து

சென்றப்போர் புளியந்துறை சேரப்புற கிட்டோடி

மற்றலொத்த தொடமார்பர் மட்டக்களப்பில விட்டார்.   (பாடல் 151, பக் – 42 கண்ணகி வழக்குரை)

மேற்குறித்த பாடலை அடிப்படையாக பன்றித்தீவும், பனிச்சங்கேணிக்கு அருகில் உள்ள சல்லித்தீவும், பாலமுனையும், கல்குடா எனும் பெயருடைய பாசிக்குடாவும், புன்னைக்குடாவை குறித்து காட்டும் ஏறாவூரும், புளியந்துறை என வழங்கும் புளியந்தீவும், மட்டக்களப்பு என வழங்கிய சம்மந்துறையும், திருக்கோயிலான கந்தபாணத்துறையையும், மட்டக்களப்பில் காணப்பட்ட துறைமுகத் தொன்மங்களாக அடையாளப்படுத்த முடியும்.

”இலங்கையின் கீழ்ப்பாகத்தில் காணப்பட்ட சதுப்பேரியினூடே தமது ஓடத்தைச் செலுத்தி தொடர்ந்து தென்திசைநோக்கிப் பயணிக்க வாவி எல்லையில் ஓடம் சென்றதும் அப்பாற்செல்ல வழியில்லாமை கண்டு “இதுமட்டும மட்டடா மட்டக்களப்படா” எனக்கூறி அந்த இடத்திலே மட்டக்களப்பென்னும் நாமத்தைச் சூட்டி ஒரு கிராமத்தை அரணாக்கினர்” (FXC நடராசா  1962 : 7) என  மட்டக்களப்பில் முக்குவர் குடியேற்றம் பற்றியும், “கடல்வழியாக புகுந்த கப்பலானது மட்டக்களப்பு வாவியில் புகுந்து வீரமுனையில் கரைதட்டி நின்றது. வீரமுனையில் கப்பலில் இருந்து இறங்கிய சீர்பாததேவி, தனது வேண்டுதலுக்கிணங்கத் தன்னுடன் கப்பலில் வந்த மக்களை கோயில் ஒன்று எடுக்க பணித்தாள் ” (அருள்செல்வநாயகம் 1982:46)  என சீர்பாதகுல குடியேற்றம் பற்றியும் சொல்லப்படும் சேதிகளுடன் “கண்டி அரசன் போர்த்திக்கேயரை நாட்டில் இருந்து வெளியேற்ற ஒல்லாந்தருடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி 400 கட்டுகறுவாவும் 78 அந்தர் மெழுகும் 3056 இறாத்தல் மிளகும் மேலும் பல பொருட்களையும் சேர்த்து அனுப்புவதற்காக சம்மாந்துறை துறைமுகத்திற்கு அனுப்பிவைத்தான்” (Baldaeus Phillipus 1672:122) என வெளிநாடுகளுடான வர்த்தக நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு துறைமுகங்கள் பயன்படுத்தபட்டதற்கான தகவல்களும், மட்டக்களப்பு வாவியை உள்ளடக்கிய துறைகள்(துறைமுகங்கள்), குடியேற்ற, வர்த்தக, அரசியல், போர் நடவடிக்கைகள் என்கிற பல்வகைப்பயன்பாட்டு வகிபாகத்திற்கு வலுவான சான்றுகளாகும்.

மட்டக்களப்பு வாவியென்பது இலங்கையின் கிழக்கு கரைக்கு சமாந்தரமாக மட்டக்களப்பின் நிலப்பிரதேசத்தை ஊடறுத்து வடக்கு தெற்காக, பங்குடாவெளியில் தொடங்கி சம்மாந்துறை வரைசெல்லும் உப்புநீரேரியாகும். இந்த வாவியையும் கிழக்கு கடலையும் இணைக்கும் முகத்துவாரம், கல்லாறு, ஒலுவில் என்ற ஊர்களை அண்டி இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்பு வரை காணப்பட்ட நீர்முகவாயில்கள், கடலுாடான வெளிநாட்டுப் பயணங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பினும், இன்றைய மட்டக்களப்பு நகரில்  இருந்து சில கிலோமீற்றர் துாரத்தில் அமைந்திருப்பதும், பருவமழைக் காலங்களில் மட்டுமே வாவியையும்  கடலையும் இணைக்கும் நீர்முகவாயிலானது,  முன்பு கடலையும் வாவியையும் இணைத்த நீர்முகவாயிலாக காணப்பட்டதுடன், அதனுாடன நீர்வழிப்போக்குவரத்து மட்டக்களப்பு வாவியில் தெற்திசையில் காணப்பட்ட பழைய மட்டக்களப்பான சம்மாந்துறை வரை விரிந்தும் காணப்பட்டது. வரலாற்றுக்காலம் தொடக்கம் மட்டக்களப்பிலிருந்து கடல் வழியான பயணங்கள் இடம் பெற்றதற்கு இயற்கையாக அமைந்த இந்த தரைத்தோற்ற அமைப்பு மிக முக்கிய காரணியாகும்.

பொதுவாக நீர்வழிப் போக்குவரத்தானது பருவபெயர்ச்சி காற்று, தரைத்தோற்றம், கால்வாய், நீர்முகவாயில், நீர்ப்பரப்பு, அதன் ஆழம்  என்பவற்றுடன் அரசியல், பொருளாதார, வர்த்தகத்தில் எழும் மாறுதல்களாலும், நீர்வழிப்போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் துறைகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் அமைந்து விடுவதுடன். தொடர்ந்து அவை இடப்பெயர்களில் மட்டுமே நிலைத்துவடுவதையும் காணலாம். இந்த போக்கில் வாவியை அண்டி நீர்வழிப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்ட வலையிறவுத்துறை, கன்னங்குடாத்துறை, மண்முனைத்துறை, களுதாவளைத்துறை, குறுமன்வெளித்துறை, மண்டூர்த்துறை, கிட்டங்கித்துறை,  தீர்வைத்துறை (ஆரையம்பதி) என்கிற துறைகளுடன், “துறை”யை விகுதியாக கொண்ட ஊர் அல்லது இடப்பெயராக அமைந்து விட்ட துறைநீலாவணை சம்மாந்துறை, அம்பிளாந்துறை, மாவிலங்கத்துறை, கொம்மாதுறை, வேப்பையடித்துறை, பெரியதுறை என்பவையும் மட்டக்களப்பில்  கண்கூடு. 

மட்டக்களப்பு துறைகள் குகிள் வரைபடத்தை அடிப்படையாகக்கொண்டது

திருப்பெரும்துறை

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆட்சி வீச்சுக்கு உட்டபட்ட மட்டக்களப்பின் நகர பகுதி கிட்டத்தட்ட 75 கிமீ சதுர நிலப்பரப்பும் 11 கிமீ வரையான நீர்ப்பப்பரப்பை கொண்டது. அரச நிருவாக பிரிவாக மண்முனை வடக்கு பிரதேசம் என அறியப்படும் இவ் நிலப்பரப்பில், வதியும் 92,894(2020 இல்)  தொகை அளவிலான மக்களாலாலும் (Resource Profile 53:2020) தினமும் நகரை நோக்கி வந்து செல்லும் கிட்டத்தட்ட 50,000 வரையான மக்களாலும், வெளியேற்றப்படுகின்ற திரவமல்லாத கழிவுகளை தாங்கிக்கொள்கின்ற (திண்மக்கழிவு முகாமைத்துவம்) இடமென பலராலும் அறியப்பட்டதான இன்றை திருப்பெரும்துறையே அன்றைய பெரியதுறை.

வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் பாதை மட்டக்களப்பு நகருக்கான வரவேற்பு வளையிக்கு அடுத்ததாக வலதுபக்கம் திரும்பியவுடன்  எதிர்ப்படும் கொத்துக்குளம் மாரியம்மன் கோவிலை கடந்து 300 மீட்டர்  பயணித்து திருப்பெரும்துறைக் கிராமத்தை அடையலாம். கிராமத்திற்கு மேற்காக கிழக்கு மேற்காக மட்டக்களப்பு வாவியும் வடக்கு தெற்காக கொத்துக்குளம். வேப்பையடித்துறை என்கின்ற கிராமங்களையும் எல்லைகளாக கொண்ட இக்கிராமத்தில் (திருப்பெரும்துறை கிராம அலுவலகர் பிரிவு) 463 குடும்பங்களை சேரந்த 1663(2020 இல்) மக்கள் வதிகின்றனர்.  (Resource Profile 50:2020). திருப்பெரும்துறையின் சமூக நிருவாக கட்டமைப்புக்களுக்கு  நெருக்கமாகவும், புவியியல் ரீதியாக அருககருகேயும் கொத்துக்குளம் மற்றும் வேப்பைடியத்துறை என்ற கிராமங்கள் அவதானிக்கப்படுவதால், அக்கிராமங்களும் பெரியதுறையுடன் இணைவுற்ற கிராமங்களாக  கொண்டே  இக்கட்டுரை கையாள்கின்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் - திருப்பெரும்துறை

(மட்டக்களப்பு மாநகரசபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம்)


பெரியதுறையின் இடப்பெயர் அதன் எழுச்சி, அங்கு வாழ்ந்த சமூகம்

மட்டக்களப்பு முகத்துவாராம் ஊடாக வரும் உருக்கள் என அழைப்படும் பெரிய அளவிலான கடற்கலங்கள்(உரு) பெரியதுறையில் தரித்து வர்த்தகத்தில் ஈடுபட்டமையாலும் இத்துறையருகே அவை தரித்து நின்றமையாலும் இத்துறை பெரியதுறை என வழங்கிற்று (வீ.சி. கந்தையா 67 :  1991) எனக்கூறுவர். மேலும் 1815 களில் மட்டக்களப்பில் இருந்து விந்தானை நோக்கிய படையெடுப்பின் போது கப்டன் ஜோன்சன் பெரியதுறையில் இருந்து படை நகர்த்தினான் எனவும் (S.O.Canagaratnam 80: 1921) குறிப்பிடுவர். அத்தோடு நீர்வழிப்போக்குவத்துக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட துறைகள் காணப்படும் பிரதேசத்தில், பிரதானமாக, அளவில் பெரியதாக மட்டுமன்றி வெளிநாடுகளுடனான வர்த்தக நடவடிக்கைகைளுக்கும் பயன்படுத்தப்பட்ட துறை, பெரியதுறை என்ற பெயரில் அறியப்படுவதற்கான வழக்கத்திற்கு வடக்கிலங்கையில் நெடுந்தீவு, புங்குடுதீவு போன்ற இடங்களில் காணப்படும் பெரியதுறையை உதாரணமாக்கலாம். எனவே மேற்படி தகவல்களின் அடிப்படையில்  மட்டக்களப்பில் பலதுறைகள் காணப்பட்டடிருப்பினும் வெளிநாடுகளுடனான வர்த்தக தொடர்புகளுக்கும் போர்நடவடிக்கைகளுக்கும் உகந்ததாக விசாலமானதாகவும் குறித்த துறை பயன்படுத்தப்பட்டதாலே “பெரியதுறை” என அழைக்கப்பட்டது என கொள்ள முடியும். குறிப்பாக மட்டக்களப்பு பெரியதுறையானது ஒரு துறையாக மட்டுமன்றி அப்பெயரில் ஊராக அறியப்பட்டிருப்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டிது.  

போர்த்திக்கேயர் மட்டக்களப்பு புளியந்தீவில் காலுன்றிய காலத்தில் அங்கு வசித்த மக்கள் தங்களின் சமயம் மற்றும் பண்பாடுகளை பேணிக்காப்பதற்காக பெரியதுறையிலும் அதனை அண்டியும் குடியேறினார்கள் (வீ.சி.கந்தையா 67 :  1991) என பெரிய துறையின் தோற்றுவாய்கான காலமாகவும் காரணமாகவும் கணிக்கப்படுகினறது.  எனினும், யாழ்ப்பாணம் நல்லுாரைச் சேர்ந்து சகோதரர்களான மாப்பாணர் முத்துப்பிள்ளை, மற்றும் மாப்பாணர் வேலுப்பிள்ளை என்பவர்கள் இடம்பெயர்ந்து  உள்ள துரைவந்தியமடுவில்(கல்முனைக்கு அருகில்) குடியேறியதாகவும், பின்னர் அவர்கள் பெரிய துறைக்கு இடம்பெயர்ந்ததாகவும்  அவர்களே பெரிய துறை முத்துக்குமார வேலாயுதசுவாமி கோவிலின் ஆரம்பகர்த்தாக்கள் (வீ.சி.கந்தையா 69 :  1991)  என பெறப்படும்  தகவல்களும்,  கோவிலை நிருவகிக்கும் பொறுப்புவாய்ந்த நபரை,  “வண்ணக்கர்” என குறித்தழைக்கும் மட்டக்களப்பு மரபுக்கு மாறாக, பெரியதுறை முத்துக்குமார வேலாயுதசுவாமி கோவிலின் தர்மகத்தா “மணியக்காரர்” என யாழ்ப்பாண மரபில் குறித்து அழைப்படுகின்றார் என்கிற தகவலும் பெரியதுறைக்கும் யாழ்பாணத்துக்குமான தொடர்புகள் நமக்கு ஆர்வத்தை துாண்டுபவனவாக அமைகின்றது.

மேலும், பெரியதுறையில் வாழ்ந்து சமூகம் தங்களை ”தனக்காரர்”  என அடையாளப்படுத்தும் போக்கில், மட்டக்களப்பு மாவட்ட கையேடு என்ற வரலாறு பேசும் ஆவணத்தில் மட்டக்களப்பு சமூக பிரிவுகளில் குறித்துக்காட்டப்படும் ”தனக்காரர்” (S.O.Canagaratnam 35 : 1921)சமூகத்தினர். மகோன் வருத்ததாக கருதப்படும், பண்டைய மட்டக்களப்பு  சமூக பிரிவுகளை வரையறுக்கும், மட்டக்களப்பு மான்மியத்தில் காணப்படும் சமூகப் பிரிவுகளுக்குள் குறித்துக்காட்டப்படவில்லை என்பதோடு. போர்த்திக்கேயர் கோட்டை கட்டியதன் பின்னரே இன்றைய மட்டக்களப்பு நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் முக்கியத்துவம் பெறத்தொடங்கின என்பதும்,

வீறு பெருந்துறை வாழவெண் ணீறு

விளங்கி மிகுந்தோங்க – நல்ல

நாறுங் களபம் விரைதீப மேற்ற

நல்லட்சுமி சூழ்நதுவர….     (வசந்தன் கவித்திரட்டு 39:1940 ) 

அதாவது, நல்ல வாசனை திரவியங்கள் வாசனை பரப்பும், மிகுந்த செல்வம் நிறைந்ததும்(நல்லலட்சுமி), சைவம்(வெண்ணீறு) தழைத்து ஒங்கும், பெருமிதமும் வெற்றியும் தனிச்சிறப்பும் கொண்ட பெரிய துறையில்…  என ஞானாச்சாரியாராக சிவன், வீதியில் பவனி வருவதை வர்ணித்துப் பாடப்படும் ஞானவேதியர் பள்ளுப்பாடலானது, 18 ஆம் நுாற்றாண்டுகளில் எழுந்த இலக்கியமான கருதப்படுவதால், 18 ஆம் நுாற்றாண்டுகளில் பெரியதுறை சிறப்புற்றுக் காணப்படுவதற்கான இலக்கியச் சான்று என்கிற அடிப்படையிலும்,

16 ஆம் நுாற்றாண்டுகளில் மட்டக்களப்பு கோட்டையை போர்த்துக்கேயர் கட்டிய பின்னர், இன்றைய சம்மாந்துறையில் அன்று நிலைகொண்டிருந்த ஆட்சியிருக்கை இன்றைய மட்டக்களப்பு நகரான புளியந்தீவுக்கு இடம்பெயர்ந்தது, இவ் ஆட்சியிருக்கை புளியந்தீவை நோக்கி இடம் பெயர்ந்ததால்,  புளியந்தீவுவை அண்டி காணப்பட்ட இடமாகவும், துறை அமைவதற்கான சாதகமான தரைத்தோற்ற அமைப்பு காணப்பட்டதாலும், பெரியதுறையின் தோற்றமும் அதனுடனான குடியிருப்பு உருவாக்கமும் இடப்பெற்றதாக கருத முடியும்.

தனக்காரர் என்பவர்கள் யாழ்ப்பாணத்தில் கோயில் சொத்துக்களை முகாமை செய்பவர்களாகவும் யானைகளை வியாபாரம் செய்யும் (A.Jeyaratnam Wilson 18 :2000) சமுகம் எனவும் கூறப்படுவதோடு, பிற்காலத்தில் வேளாளர் சமுகத்துக்குள் உள்வாங்கப்பட்ட (கா.சிவத்தம்பி 74 :1994)  சமூகமாக பேசப்படுகிறார்கள். இந்தியா காஞ்சிபுரத்தில் இருந்து சுத்த வேளான் பிரபுவும் பதினெண் வரிசைப் பட்டயம் பெற்ற சேதுகாவல சேனாதிராசா சந்திரசேகர மாப்பாண முதலியார் என்பவர் கீரிமலைக்கு பிணி ஒன்றினைப் போக்குவதற்காக, தனது பதிணென் வரிசை ஏவற்காரர்களுடன் வந்தாகவும் பின்னர் அவர்கள்  யாழ்பாணத்தில் உடுப்பிட்டியை அண்டி குடியேறியதும், அவர்களின் வழித்தோன்றல்கள் மாப்பாணமுதலியார் என்ற குடும்பப்பெயரால் அழைக்கப்பட்டதாகவும் அறியப்படும் தகவல்களுடன் (க.வேலுப்பிள்ளை 220 :1918). பெரிய துறையில் குடியேறிய மாப்பாணர் குடும்பபெயர்களை கொண்ட பெரியார்களையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம்.

அத்துடன்  பெரிய துறையில் குடியேறிய மாப்பாணர் குடும்பபெயர்களைக் கொண்ட பெரியார்கள், நல்லுாரை பூர்வீகமாக கொண்டவர்கள் என நம்பப்படுவதும், நல்லுார் கோவில் மீள்உருவாக்கம் பெறுவதில் முக்கிய பங்கு வகித்தவர்களும், (க.குணராசா 1987 : 51) அக்கோவிலின் நிருவாக கட்டமைப்புகளுடன் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கும் மாப்பாண முதலியார் என்ற குடும்பப் பெயர்கள் வழங்கி வருவதும் இங்கு நமது கவனத்தை ஈர்கின்றன.

இவற்றை விட, மட்டக்களப்பில் இருந்து (இன்றைய அம்பாறை) 25 மைல் துாரத்தில் உள்ள வம்மிமடு(வம்மிமடு எனும் கிராமம் பிற்காலத்தில் நிந்தவூர் என பெயர் பெற்றது)  என்ற கிராமத்தில் வதியும் தனக்காரர்கள் புகையிலை தொழிலை மேற்கொள்பவர்களாக காணப்படுகின்றனர் (Simon Casie Chitty, Modliar 18 :1834),  என்கிற குறிப்பும் Casts – Tannecarras Tobacco Planters, Number – 361 அதாவது தனக்காரரை புகையிலை செய்கையாளர்கள் (Ceylon Census 1814 : 126)  என 1814 ஆண்டு இலங்கை  கணக்கெடுபில் காணப்பட்ட சாதிய கணக்கொடுப்பு வரிசையில் குறிப்பிடப்பட்டிருப்பதும் நமக்கு இன்னொரு பரிமானத்தை தருகின்றது.

இருப்பினும் பெரியதுறை வாழ்ந்த தனக்காரர் சமூகம், மேற்குறித்த தொழில்களை மேற்கொண்டதாக தகவல்கள் இல்லை அத்தோடு, அவர்கள் கல்வியில் மேன்பட்டவர்களாகவும், நிலவுடமையாளர்களாகவும், பொருளாதாரவளம் மிக்கவர்களாகவும் காணப்பட்டனர், இன்றும் காணப்படுகின்றனர்.  தனக்காரர் என்பது தனம் + காரர் அதாவது செல்வம் மிகுந்தவர்கள் என்பதைக் குறித்து நிற்கின்றது என அச் சமுகப் பெரியவர்கள் (பூ.சீவகன்  : வயது 58) தரும் தகவல்களும், “தனக்காரர் – தனம் என்பது பொன்னின் பரியாயநாமத்தொன்றதலின் பொருளுரடையாரென்னும் பொருள்படவந்த பெயரே தஞ்சாதிப்பெயரென்பர்” (க.வேலுப்பிள்ளை  220 :1918)  என யாழ்பாண வைபவ கொளமுதி கூறும் விளக்கங்களோடு, பெரியதுறை ஏழுச்சி மிக்கதாக காணப்பட்ட காலத்தில் வெளிநாட்டு வர்த்தகத்தில் அச்சமூகம் ஆற்றிய பங்களிப்பு போன்றவற்றினுாடாக அச் சமூகம் தன் செல்வாக்கை நிலைநிறுத்தும் தன்மையிலும் “தனக்காரர் சமூகம்” பற்றிய விரிவான ஆய்வுக்கான தேவையும் இங்கு உணரப்படுகின்றது.

திண்ணைப்பாடசாலை

1814 ஆண்டு, வில்லியம் ஒல்ட் அவர்கள் மட்டக்களப்பு வருகையின் பின்னால், அவர் ஆரம்பித்த மெதடிஸ்த மத்திய கல்லுாரி, மட்டக்களப்பு கல்வி வரலாற்றில் பெரும் எழுச்சியை உண்டாக்கியது. அவரின் வருகைக்கு முன்னரே மட்டக்களப்பில் வெல்லாவெளி, ஆரையம்பதி, சம்மாந்துறை, மண்டுர் (வெல்லவூர்க் கோபால் 56 :1992) போன்ற இடங்களில் நடைபெற்ற திண்ணைப் பாடசாலைகள் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் வாய்மொழி மூலத் தகவல்களாகவே கிடைக்கின்றன, ஆனால்,

“இலங்கையில் பிரதானமானவற்றில் ஒன்றாக இருந்த பெரியதுறை கிறிஸ்தவப் பாடசாலைக்கு விஜயம் செய்தேன். அது மட்டக்களப்பு தீவிலிருந்து சுமார் 2 மைல் தூரத்திலிருந்தது. அங்கிருந்த சிறுவர்களின் தோற்றம் திருப்திகரமாக இருந்தது. வெறும் 15 வயதான அவர்களின் ஆசிரியர் நடந்துகொண்ட விதமும் வியப்பூட்டுவதாக இருந்தது. அவன் பொது நிறத்தில் இருந்தான். இனிதான மற்றும் சமாளித்துப்போகக்கூடியவன் என்பது அவனது நடத்தையில் புரிந்தது. மாணவர்கள் கம்பீரமாகவும் சாந்தமான முகங்களுடனும் திகழ்ந்தார்கள். அவர்களது தலைமயிர்கள் வார்ந்து பின்னி கொண்டை போலக் கட்டப்பட்டு வெள்ளி ஊசியால் குத்தப்பட்டிருந்தன. சிலர் வலப்பக்கமும் சிலர் இடப்பக்கமும் கொண்டையிட்டிருந்தனர். சில முடிக்கீற்றுகள் முகத்தில் படிய வாரப்பட்டிருந்தன. கழுத்தின் பின்புறம் மிக நெருக்கமாக முடி வெட்டப்பட்டிருந்தது. அவர்களது ஆடையணிகள் அழகாக இருந்தன. இந்த சிறுவர்கள் வாலிப வயதை எட்டும் போது, கொண்டை பின்புறம் கட்டப்பட்டு, அதன் எழில் இல்லாமல் செய்யப்படுகிறது. இங்குள்ளவர்களின் மேற்றட்டுச் சிறுவர்கள், கழுத்தில், காலில் புயங்களில் தங்க வளையங்கள் அணிந்திருக்கிறார்கள். மற்றவர்கள் இடையைச் சுற்றி மெல்லிய கைத்தறிப் பருத்தி தவிர, அவ்வளவு ஆடம்படரமான அணிகளைக் காணமுடியவில்லை. அனைவரும் தரையில் பாயில் சம்மணமிட்டு அமர்ந்து, தங்களுக்கான கற்பித்தலை கூர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இயலுமான அளவு உரத்த குரலில் அவர்கள் மீள மீள வாசிப்பது, பியானோவை விரைந்து மீட்டுவதைப் போல் ஒலித்துக்கொண்டிருந்தது. இவர்கள் சிங்களவர்களும், இந்தியாவின் ஏனைய இனக் குழுக்களும் போல, ஒரே மாதிரித்தான் எழுத்துக்களைக் கற்கிறார்கள். அவற்றை தரையில் அல்லது கற்பலகையில் பரப்பிய மண்ணில் எழுதி, அதை உரத்துச் சொல்லி, எழுதும் முறையையும் சொல்லிப் பயில்கிறார்கள். உதாரணமாக ஆனாவை எழுதுவது என்றால் அ மேலே, நடுவில், கீழே என்று அந்த கற்றுச்சொல்லல் இடம்பெறுகிறது. ஐந்து வயதுப் பையன்கள், இந்த முறைக்குப் பின்னர் சரளமாகவும் தெளிவாகவும் எழுதுகிறார்கள். அடுத்த நிலையை அடைந்தோர், பித்தளைப் பிடியிடப்பட்ட கூர் உருக்கு முனை கொண்ட எழுத்தாணியால் தாலிப்பனை அல்லது பனை இலைகளின் கீற்றுகளில் எழுதுகிறார்கள். அவை ஆட்டுத்தோலை விடத் தடித்தவை, ஆனால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்காதவை. இப்படி எழுதி முடித்ததும், அவர்கள் இலைமீது கருப்புச் சாயமொன்றைப் பூசி, எழுத்துக்களை துலக்கமாகவும் அழகாகவும் தென்படச் செய்கிறார்கள்”

என 1802 ஆம் ஆண்டு செப்ரம்பர் 8 இல் பெரியதுறைக்கு தான் மேற்கொண்ட விஜயத்தினை யேம்ஸ் கோடினர் (Reverend James Cordiner 1807 : 261) அவர்கள் மேற்கண்டவாறு குறித்துக்காட்டுகின்றார்.

இது மட்டக்களப்பில் 1800 களில் பாடசாலைகள் நடைபெற்றன என்பதற்கு கிடைக்கும் எழுத்துமூல சான்றாகும் என்பதோடு. பெரியதுறையில் நடந்த பாடசாலை கிறிஸ்தவப் பாடசாலை என்பது, மட்டக்களப்பில் மெதடிஸ்த மிசன் காலுான்ற முன்பே கிறிஸ்தவ மத அமைப்புக்கள் கல்விக்கு சேவையாற்ற தொடங்கிவிட்டன என்பதையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. அனைவரும் தரையில் பாய்போட்டு சம்மணமிட்டு கல்வி பயின்றனர் என குறித்துகாட்டப்படுவதில் இருந்து சமுகத்தில் ஏழை பணக்கார போன்ற ஏற்றத்தாழ்வு வேறுபாடு இன்றி கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டதை வெளிப்படுத்துவதாகவும், பெரிய துறையினை, இலங்கையின் பிரதான இடமான குறிப்பிடுவதானது அன்றைய பெரிய துறையின் செழிப்பையும் சுட்டிநிற்பதையும இதனுாடாக புரிந்துகொள்ளலாம்.

பெரியதுறையின் வழிபாடு

”பெரியதுறைக்கு அருகே முற்றாக வெறுமையான, பெரும்பாலும் கைவிடப்பட்டு எப்போதாவது மட்டும் ஓரிருவர் தரிசிக்கிற ஒரு சிறிய பூர்த்தியாகாத இந்துக்கோவில் ஒன்று இருக்கிறது. அதில் வேலைப்பாடுகள் இல்லாத, ஆனால் மனித உருவங்கள், யானை, புலி என்பன செதுக்கப்பட்ட பூச்சுதிர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றன” யேம்ஸ் கோடினர் அவர்கள் பெரியதுறையில் அமைந்திருந்த கோவிலை வர்ணிக்கின்றார்.

முத்துக்குமார வேலாயுத சுவாமி கோவில் பெயர்கொண்ட இக்கோவிலும் அதன் அருகே சிவன் கோவில் ஒன்றும் அமைந்திருந்ததும், ஆவணியில் நடக்கும் ஐந்து நாள் திருவிழா மிகவும் கோலாகலமாக நடந்ததாகவும் அறியமுடிகின்றது. (வீ.சி. கந்தையா 67 :  1991) இத் திருவிழாவுக்கு ஒருதடவை இந்தியாவில் இருந்து சின்னமேளம் உரு(கடற்கலம்) ஒன்றில் அழைத்துவரப்பட்டு திருவிழா சிறப்பிக்கப்பட்டது. இங்கு சின்ன மேளம் என்பது நடன மாதர்கள், அதற்கான இசை, முட்டுக்காரர் எனப்படும் தாளவாத்தியக் கலைஞர் (மிருதங்கம்) குழல், திட்டிக்காரர் எனப்படுபவர் ஆகியோர் அடங்கிய குழுவாகும். இதில் நடனமாதரே பிரதானமானவர்கள். சின்னமேளம் என்பதை சுருக்கமாக, மத்தளம் துருத்தி முதலிய வாத்தியங்களுடன் தாசிகள் பாடிக்கொண்டு ஆடுதற்குரிய சதிர்மேளம் என்பர். முதன் முதலில் இந்தியாவில் இருந்து மட்டக்களப்புக்கு சின்னமேளம் அழைத்துவரப்பட்டது பெரியதுறை கோவிலுக்கே என்கிற வரலாற்றுத் தகவலும் நமக்கு பெரியதுறைக்கும் இந்தியாவுக்குமான போக்குவரத்து தொடர்பையும் பெரியதுறை மக்களின் பொருளாதார செழிப்பையும் புரிந்து கொள்ள போதுமானதாகும்.

 திருப்பெரும்துறை முத்துக்குமார வேலாயுதசுவாமி கோவிலின் இன்றைய தோற்றம்

 (திருப்பெரும்துறை முத்துக்குமார வேலாயுதசுவாமி கோவிலின் இன்றைய தோற்றம்)

பெரியதுறையின் வீழ்ச்சி

அரச சனத்தொகை கணக்கெடுப்பின் படி 1814 ஆம் ஆண்டு 241 பேரும்,  1871 இல் 345 பேரும், 1891 இல் 287 பேரும், 1901 இல் 270 பேரும், பெரியதுறையிலும் அதனை அண்டிய வேப்படித்துறை மற்றும் கொத்துக்குளத்திலும் வாழ்ந்திருக்கின்றார்கள், எனினும், 1911 இல் 181 பேர் 1921, இல் 27 பேர் 1931, இல் 34 பேர் என 1901 களுக்கு பின்னரான கணக்கொடுப்புகளில் சனத்தொகை குறைவடைந்து செல்வது பெரியதுறை நலிவடைந்து சென்றதை வெளிப்படையாக காட்டி நிற்கின்றது.

1907 இல் ஏற்பட்ட புயல் மற்றும் 1912 இல் ஏற்பட்ட வாந்திபேதி என்பவற்றால் இங்கு வாழந்த மக்கள் வெளியேறி(வீ.சி.கந்தையா 70 :  1990)   கல்லடித்தெரு, பிள்ளையாரடி, ஊறனி, செங்கலடி போன்ற பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர் என்பர். அத்தோடு 13ஆம் நுாற்றாண்டிலும் பின்னர் 19-ஆம் நூற்றாண்டில் மீண்டும் பரவிய கொள்ளைநோய் அல்லது “பிளேக்” (Plague) குடலிய நுண்ணுயிரி வகையான  கொடிய தொற்று நோய்க்கு சுமார் உலகெங்கும் ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இந்த தொற்று பரவியவர்களில் 80 சதவீதம் பேர் மரணமடையும் அளவுக்கு அந்நோயின் தீவிரம் இருந்தது. 

“பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட துறைமுகங்களிலிருந்து கப்பல்கள் வருவது தொடர்பான விதிமுறைகள்” என 75க்கும்  மேற்பட்ட உப விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும்  30.11.1900 இல் இலங்கை அரசு மிகவும் வர்த்தமானி பிரகடனம் செய்திருந்து. வெளிநாட்டில் இருந்து பிளெக் நோய் பரவும் வாயில்களாக துறைமுகங்கள் காணப்பட , இலங்கையை நோக்கி இந்நோய் பரவுதலை தடுக்க அரசு மேற்கொண்ட கடுமயான நடவடிக்கையாக இவ் பிரகடனத்த காணலாம். எனினும் இதனயும் தாண்டி பரவிய பிளெக் 1918, 1919 ஆம் ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தில் தீவிரம் அடைந்தாக மருத்துவ  அறிக்கைகைள் கூறுகின்றன. மட்டக்களப்பில் 1900 களில் வெளிநாடுகளுடன் நேரடித்தொடர்பில் காணப்பட்ட பெரியதுறைக்கும் பரவிய பிளெக் நோய் அவ்மக்களின் இடம்பெயர்வுக்கு காரணமாக அமைந்திருக்க இருக்கும் வாய்ப்புக்கள் அதிகமானவையே.

திருப்பெரும்துறை என மீண்டும் மக்கள் குடியிருப்பான பெரியதுறை

காடுமண்டி சனநடமாற்றமின்ற இருந்த பெரியதுறை, 1972 ல் மட்டக்களப்பு பொதுசந்தை வியாபாரியும் கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் ஞானச்செல்வம்  பெரும்துறை பற்றி அறிந்து அங்கிருந்த கோவிலை  புணரமைத்து வழிபாடு செய்யபோது மீண்டும் பெரும்துறையில் சனக்குடியேற்றம் ஏற்பட ஆரம்பித்ததாக கூறுவர். (வீ.சி.கந்தையா 71 :  1990)   இதன் பின்னரே பெரியதுறை திருப்பெரும்துறை என்கிற பெயரையும் சூடிக்கொண்டது.

முடிவாக,

காலத்துக்கு காலம் ஏற்படும் தரைத்தோற்ற மாற்றங்களால் மட்டக்களப்பு வாவியையும் கடலையும் இணைக்கும் முகத்துவாரம் மூடப்பட்டது, மட்டக்களப்பிலிருந்த நீர்வழி கடல் தொடர்பு குன்றியதற்கான பிரதான காரணமாக இருப்பினும் பெரிய துறையின் வீழச்சியில் நோயினால் ஏற்பட்ட மக்கள் இடம்பெயர்வும் முக்கிய பங்காற்றியமையை மறுக்க முடியாதது. மட்டக்களப்பின் துறைமுகக் குடியிருப்புக்களாக காணப்பட்ட இடங்கள் இன்று இடப்பெயர்களில் மட்டுமே நிலைகொண்ருக்கும் தன்மையில்  துறைகள் அது சார்ந்த மக்களின் சமூக அமைவு, பண்பாடு, இயங்கு நிலை போன்றவை பெரியதுறை போல் வரலாற்றில் காணமால் போனதாகவே ஆகிவிட்டிருக்கின்றன.

மட்டக்களப்பில் டச்பார் என்றழைக்கப்படும் வாவிக்கும் கடலுக்கும் இடையிலான வெறும் 300 யார் மட்டுமே ஒடுங்கிய நிலப்பரப்பை திறந்துவிட்டால் எல்லாக்கப்பல்களும் பெரும் கடலில் இருந்து வாவிக்குள் இலகுவாக பயணிப்பதற்கான தரைத்தோற்றம் ஏற்படும் (S.O.Canagaratnam 4: 1921)  என  எஸ்.ஒ. கனகரெத்தினம் சுட்டிக்காட்டிருப்பதைப்போல. மட்டக்களப்பில் காணப்பட்ட நீர்வழிப்போக்குவரத்துக்கான தரைத்தோற்றத்தை சாதகமாக்கி மட்டக்களப்பு வாவியில் ஒரு உட்துறைமுக கட்டமைப்பு கட்டுமானம் ஒன்றை விருத்தி செய்திருந்தால். மட்டக்களப்பு பெரும் துறைமுக நகராக வியாப்பித்திருக்கும். இன்று மட்டக்களப்புக்கு வேறு ஒரு அடையாளம் இருந்திருக்கும்.

 (திருப்பெரும்துறை முத்துக்குமார வேலாயுதசுவாமி கோவிலின் இன்றைய தோற்றம்)

  (திருப்பெரும்துறை முத்துக்குமார வேலாயுதசுவாமி கோவிலின் இன்றைய தோற்றம்)

உசாத்துணை –

  • எம்.ஐ. எம்.சாகீர், சம்மாந்துறை இடப்பெயர் வரலாறு, 2012
  • எப்.எக்.சி. நடராஜா, மட்டக்களப்பு மான்மியம், 1962
  • அருள் செல்வநாயகம், சீர்பாத குல வரலாறு, 1982
  • பண்டிதர் வீ.சி.கந்தையா, மட்டக்களப்பு சைவக் கோவில்கள் – 2, 1991
  • க.வேலுப்பிள்ளை, யாழ்ப்பாண வைபவ கௌமுதி,  1918
  • பேராசிரியர் கா.சிவத்தம்பி, தமிழ்ச்சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும், 1994
  • கவிக்கோ வெல்லவூர்க் கோபால், வெல்லாவெளி வரலாறும் பண்பாடும், 2012
  • கந்தையா குணராசா, நல்லைநகர் நுால், 1987
  • O.Canagaratnam, Batticalo District of the Eastern Province, 1921
  • Simon Casie Chitty Modliar The Ceylon Gazetteer, 1834
  • Reverend James Cordiner, A description of Ceylon, 1807
  • Planning Division, Batticaloa District Secretariat, Resource Profile, 2020,
  • A True and exact Description of the Great island of Ceylon, Baldaeus Phillipus 1672
  • Jeyaratnam Wilson, Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the Nineteenth, 2000
  • M. Langford and P. Storey Source: Health Transition Review , 1992, Vol. 2, Supplement. Historical Epidemiology and the Health Transition,1992


    நன்றி – தாய்வீடு (July), கனடா மற்றும் ஆரையம்பதி (http://www.arayampathy.lk/)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More