Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 3வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 3

வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 3வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 3

10 minutes read

பெரிய பரந்தன் குஞ்சுப்பரந்தன். செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு, கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும்.

 

இக்கிராமங்களின் வரலாற்றை எழுதும் போது வாசகர்கள் வரவேற்பார்களோ என்ற அச்சத்தில் கிராமங்களின், அம்மக்களின் சில செயற்பாடுகளைத் தவிர்த்திருந்தேன். கோவிற் பொங்கல் நடவடிக்கைகள், ஈச்சங்குருத்து வெட்டியுண்ணுதல், தங்குவேட்டை, காட்டில் சென்ற அனுபவமற்றவர்களைப் பேய் பிடித்தல், குறிப்பம்புளி போன்ற விடயங்கள் தவறிவிட்டன.

தங்குவேட்டை:

காலபோகம் முடிவுற்றுச் சிறுபோகம் ஆரம்பிக்க முதல் உள்ள இடைக்காலத்தில் வயல்களில் நீர் வற்றி மீன்கள் கூட்டம் கூட்டமாகச் செத்து மணக்கும். எருமை மாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட குளங்கள், மோட்டைகள் தவிர ஏனைய நீர் நிலைகள் வற்றத் தொடங்கும்.

srilanka460

அதே காலத்தில் காட்டிலும் நீர்ப்பஞ்சம் ஏற்படும். வெகுதூர இடைவெளிகளில் சில மோட்டைகளில் மட்டும் நீர் இருக்கும். யானைகள், குழுவன் மாடுகள், மரைகள், மான்கள், கரடிகள், சிறுத்தைகள், பன்றிகள், மந்திகள் யாவும் இம்மோட்டைகளை நாடி வரும்.

இக்காலமே தங்குவேட்டைக்கு உகந்த காலம் ஆகும்.

வேட்டையில் ஆர்வமுள்ள யாவரும் ஒன்று கூடித்திட்டமிடுவர். துப்பாக்கிகளுடன் வருபவர்களும் உண்டு. துப்பாக்கியை மட்டும் வழங்குபவர்களும் உண்டு. காட்டை நன்கு தெரிந்தவர், குறிபார்த்துச் சுடவல்லவர், துப்பாக்கிக்கு தோட்டா, ஐந்து பற்றி ரோச் லைற்களும், பற்றிகளும் வழங்குபவர்கள், வேட்டையாடிய மிருகங்களை உரித்து இறைச்சியை வார் வாராக வெட்டி வத்தலில் வல்லவர், சமையல் வேலை செய்பவர், தொட்டாட்டு வேலைகள் செய்பவர் என்று தங்குவேட்டைக்குச் செல்பவர் யார் யாரென முடிவு செய்வர். சமையல் பாத்திரம், பண்டங்கள், வேட்டை உபகரணம், கத்தி, கோடரி, மண்வெட்டி முதலியவற்றைத் தோளில் காவி எடுத்துச் செல்வர்.

நீர் நிலைகளிலிருந்து ஒரு மைல் தொலைவில் தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்தப்படும். அவ்விடம் காற்றுவீசும் திசைக்கு எதிர்த்திசையில் அமைந்திருக்கும். காற்று வீசும் திசையில் இருந்தால் விலங்குகள் மோப்பம் பிடித்துவிட்டால் நீர் நிலைகளுக்கு வராது தவிர்த்துவிடும்.

02_rajiv_gandhi_national_park_548

தங்குவேட்டை இரண்டுவிதமாக இடம்பெறும். நீர் நிலைக்கருகே காற்று வீசும் திசைக்கு எதிர்த்திசையில் உயரமான மரங்கள் இருந்தால், அம்மரங்களில் பரண்கள் அமைத்து அவ்வுயரமான பரண்களில் 12ம் நம்பர், 16ம் நம்பர் துப்பாக்கிகளுடன் காத்திருந்து பொருத்தமான மிருகங்கள் வரும் போது வேட்டையாடுவர். யானைகள், கரடிகள், மந்திகள், சிறுத்தைகள், குழுவன் மாடுகளைத் தவிர்த்து விடுவர். மரை, மான், பன்றி என்பவையே வேட்டையாடுபவர்களின் விருப்பத் தெரிவாகும். மரை, மான் பெட்டைகளையும் குட்டிகளையும் தவிர்த்து விடுவர். கலைகளையே (ஆண்) தெரிவு செய்து வேட்டையாடுவர். வேட்டையில் அகப்படும் மிருகங்கள் பதப்படுத்தப்படுவதற்காக உடனுக்குடன் தற்காலிக தங்குமிடத்திற்குக் கொண்டு செல்லப்படும். மிருகங்களின் ஈரல் முதலிய நீண்டகாலம் பாதுகாக்கப்பட முடியாத உள்ளுறுப்புக்கள் நெருப்புத் தணல்களில் சுடப்பட்டு வேட்டையாடுபவர்களுக்கிடையே பங்கிடப்படும். உடனுக்குடன் சுடப்பட்ட ஈரல்களுக்கிணையான சுவையான வேறு உணவு இந்த ஈரேழு உலகத்திலும் கிடைக்காது.

12ம் நம்பர், 16ம் நம்பர் என்பது துப்பாக்கியின் சுடுகுழலின் விட்டங்களின் அளவீடுகள் ஆகும். துப்பாக்கிப் பெட்டியில் ஒரு குண்டுத் தோட்டா, நான்கு நடுத்தரக் குண்டுகள் உள்ள ளுபு தோட்டாக்கள், பதினாறு சிறிய குண்டுகள் உள்ள 4ம் நம்பர் தோட்டா என்பன இருக்கும். ஒரு பெரிய குண்டு உள்ள குண்டுத் தோட்டா யானை, முரட்டுக் குழுவன் மாடு என்பவற்றைச் சுடப்பயன்படும். 4ம் நம்பர் தோட்டாக்கள் முயல், உக்கிழான், காட்டுக்கோழி, மயில், கௌதாரி என்பவற்றைச் சுடப் பயன்படுத்தப்படும். மான், மரை, பன்றிகளுக்கு ளுபு தோட்டாவே பொருத்தமானதாகும்.

நீர் நிலைகளுக்கருகே பொருத்தமான, உயரமான மரம் இல்லாதவிடத்து தங்குவேட்டை சிரமம் வாய்ந்ததாகிவிடும். நீர் நிலையிலிருந்து சுமார் 75 அடி தூரத்தில் காற்று வீசும் திசைக்கு எதிர்த் திசையில் 8 அடி நீளம், 8 அடி அகலம், 8 அடி ஆழமுள்ள கிடங்கு வெட்டப்படும். பலமான 10 அடி நீளமரங்கள் குழியின் வாயை மூடி அடுக்கப்படும். அதன்மேல் இலைகுழைகள் பரப்பப்படும். அவற்றை மூடி மண் போட்டுச் சமன்படுத்துவர். அதில் ஒரு பதுங்குகுழி அமைக்கப்பட்டிருப்பது தெரியாதவாறு மண் முன்போலப் பரவப்பட்டுவிடும். ஒரு மனிதர் இறங்கி, ஏறுவதற்குரிய படியமைப்புகள் ஒரு மூலையில் இருக்கும். உள்ளிருந்தவாறே துப்பாக்கியை நீட்டிச் சுடத்தக்க இரு துவாரங்கள் நீர் நிலைப்பக்கமாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டாவது முறையில் சில சாதக, பாதகங்கள் உண்டு.

deer-2

பதுங்கு குழியிலிருந்து வேட்டையாடிய ஓர் வேட்டைக்காரரால் கூறப்பட்ட ஓர் உண்மைச் சம்பவம் மிகவும் சுவாரஸ்சியமானது. ஒருமுறை ஒரு அனுபவம் குறைந்த வேட்டைக்காரர் பன்றி என்று நினைத்து ஒரு கரடியைச் சுட்டு விட்டார். அது கரடியைக் காயப்படுத்தியதே தவிரக் கொல்லவில்லை. கரடி ஓங்கிக் குரலெடுத்துக் கத்தத் தொடங்கிவிட்டது. அதன் அபயக்குரல் கேட்டு ஒரு கரடிக் கூட்டமே நீர் நிலையில் கூடி விட்டன.

நரிகள் ஏதாவது வேட்டையின் மிச்சம் மீதி கிடைக்காதா எனச் சூழ நின்றன. ஆவேசமுற்ற கரடிகள் பதுங்குகுழியை நோக்கி உறுமியபடி வருவதும் போவதுமாயிருந்தன. தூரத்தில் ஓர் சிறுத்தை உறுமிய சத்தம் கேட்டது. வேட்டைக்காரர்கள் செய்வதறியாது திகைத்துப் போயினர். பயந்து நடுங்கினர். அனுபவசாலியான வேட்டைக்காரர் மற்றவரை இறக்கிவிட்டுத் தாம் துப்பாக்கியை ஏந்தி நிதானமாகக் குறிபார்த்துக் காயப்பட்ட கரடியை நோக்கிச் சுட்டார். கரடியும் இறந்தது. சத்தமும் நின்றது. விலங்குகள் யாவும் நீர் நிலையை விட்டு விலகிச் சென்றன. விடியும் வரை காத்திருந்தே யாவரும் வெளியில் வந்தனர். செய்தி காடு முழுவதும் பரவியதுபோல அடுத்த இரு நாட்களும் விலங்குகள் எதுவும் அந்நீர்நிலையை நோக்கி வரவில்லை. பின்னர் ஒன்றிரண்டாக வரத் தொடங்கின.

ஒவ்வொரு உறுப்பினரும் மூன்று மாதங்களுக்கான இறைச்சி வத்தல்களுடனும் கடைசி நாள் வேட்டையாடிய உடன் இறைச்சியுடனும் தம் தம் வீடு போய்ச்சேர்வர்.

பேய் பிடித்தல்:

வேட்டைக்கு அல்லது சுட்டதீவுக் கோவிலுக்கு சரியான திசை தெரியாது தனித்துச் செல்பவர்கள் காட்டில் திக்குத்திசை தெரியாது சுற்றிச்சுற்றி வருவர். புயம், தனிமை, பசி, தாகத்தினாலும் அலைச்சலினாலும் பித்துப் பிடித்தது போலாகி விடுவர். பாதை தெரியாததே உண்மைக் காரணம். இவர்கள் மீட்புக் குழுவினரால் மீட்கப்படும் போது பேய் பிடித்தவர் போல் இருப்பர். கோவில்களில் கலையாடி திருநீறு இட்டதும் முன்னிருந்த நிலையை அடைந்திடுவர்.

குறிப்பம் புளி:

பெரிய பரந்தனில் நூறாண்டுகள் நிறைந்த, பனைகளை விட உயர்ந்த புளியமரம் ஒன்று உண்டு. காட்டில் எங்கிருந்தாலும் ஒரு சிறிய மரத்தில் ஏறிப்பார்த்தால் அம்மரம் தெரியும். அதன் திசையை நோக்கி நடந்தால் எவரும் தவறாது வீடு வந்து சேரலாம். குறிப்பம் புளியின் அருமை உணர்ந்தவர்களைப் பேய் பிடிப்பதில்லை.

Jungle-Tree-House

புதிர் உண்ணல்:

ஒவ்வொரு விவசாயியும் தனது நிலத்தில் விளைந்த நெல்லரிசிச் சோற்றில் புதிர் உண்ணாமல் வேறு கமக்காரர்களின் புதிரை உண்ணமாட்டார்கள். நன்கு முற்றிய நெற்கதிர்களை அரிந்து நெல்மணிகளைப் பெற்று உரலில் இடித்து புது அரிசியை பெறுவர். நல்லநாள் பார்த்து இரவு நேரத்தில் புதிர்சோறு சமைக்கப்படும். அறுவகைச் சுவையுள்ள கறிகளும் பழ வகைகளும் சேர்க்கப்படும். சமைத்த உணவை ஒரு தலை வாழையிலையில் படைத்து ஒரு புதிய கடகத்துள் வைப்பர். வுயலின் நடுவே மூன்று தடிகளால் கட்டி ஒரு முக்காலி செய்து வைத்திருப்பர். கடகத்திலுள்ள உணவில் ஒரு கரித்துண்டையும் வைத்து, ஒரு வெள்ளைத் துணியினால் சுற்றி ஒருவர் எடுத்துக் கொள்வர்.

வீட்டின் தலைவர் ஒரு செம்பில் தண்ணீருடன் மறுகையில் மணி அடித்தபடி அவரைப் பின் தொடர்வார். பந்தங் கொண்டு போகின்றவர் எல்லோருக்கும் முன்னால் போவார். முக்காலியை அடைந்ததும் துணியை முக்காலியின் மேல் விரித்துக் கடகத்தை அதன்மேல் வைப்பர். நான்கு திசைகளிலும் பந்தங்கள் நடப்படும். ஒரு தட்டத்தில் திருநீறு இட்டு அதன் மேல் கற்பூரம் ஏற்றப்படும். வீட்டின் தலைவர் நான்கு திசைகளுக்கும் நீர் தெளித்து “கூக்கூ” என நான்கு திசைகளிலும் உள்ள காவற்காரத் தேவதைகளைக் கூப்பிட்டு விட்டுத் திரும்பிப் பாராமல் வீட்டை நோக்கி நடப்பார். எல்லோரும் பின் தொடர்வர். பந்தங்கள் அணைந்த பின்னர் ஒரு செம்பில் நீருடன் சென்று, நீர் தெளித்துக் கடகத்துடன் உணவைக் கொண்டு வருவர். தலைவர் அந்தக் கறி சோறு, பழங்கள் யாவற்றையும் குழைத்து உருண்டைகளாக்கி சிறுவர் முதல் முதியோர் வரை வழங்கி விட்டுக் கடைசியாகத் தான் உண்பர். சிறுவர்கள் அடுத்த வருடப் புதிருக்காகக் காத்திருப்பர். தமது வயலைக் காத்த காவற்காரத் தெய்வங்களுக்குப் படைத்த பின்னரே தாம் உண்பதென்பது ஐதீகம் ஆகும்.

விசக்கடி (பாம்புக்கடி):

எங்கள் கிராமத்தவர்களைப் பாம்புகள் தீண்டியது உண்டு. ஆனால் நான் அறிந்தவரை பாம்புக்கடியினால் எங்கள் கிராமத்தவர் எவரும் இறந்ததில்லை. கடித்தது விசமற்ற பாம்புகளாயிருக்கலாம். அல்லது கடி இரையென நினைத்துக் கடித்த இரைக் கடியாயிருக்கலாம். அல்லது எமது மூத்த விசக்கடி வைத்தியர்களின் அனுபவச் சிறப்பாயிருக்கலாம். ஆனால் என்ன கொடுமை. மூத்தோர் இரகசியம் பேணல் என்ற பெயரில் மூலிகைகளின் விசேடங்களை இளைய தலைமுறைகளுக்கு எடுத்தியம்பாது போயினர்.

The_Hunter_Jungle_With_Deer

நாகம் மனிதர்களைக் கண்டால் விலகியோடிவிடும். ஆனால் அவற்றின் உணவு மனிதர்களின் உணவைத் தேடி வரும் அணில், எலி போன்றவையும் மனிதர்களால் வளர்க்கப்படும் கோழி, தாராக் குஞ்சுகளும் அவற்றின் முட்டைகளும் ஆகும். ஆதலால் நேரடியாக மிதித்தால் ஒழிய மனிதர்களைத் தீண்டுவது அரிது. புடையன்கள் அப்படியல்ல. அவற்றைத் தவிர்த்து நடப்பதே புத்தி.

ஈச்சங்குருத்து வெட்டல்:

மாசி, பங்குனி மாதங்கள் ஈச்சங்குருத்து வெட்டிச் சாப்பிட மிகவும் உகந்த காலமாகும். ஈச்சங்குருத்து மிகவும் ருசியானது.

இரண்டு, மூன்று குடும்பத்தவர் இணைந்து வண்டில்களில் சமையல் பாத்திரம் பண்டங்களுடன் வனத்தில் நுழைவர். ஆண்கள் அதிலும் இளைஞர் கோடாரிகளாலும் கத்திகளாலும் ஈஞ்சுகளை வெட்டிக் கொடுக்க ஏனையவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். ஆற்றங்கரையை அடைவதற்கிடையில் எல்லோர் வயிறும் ஈச்சங் குருத்துக்களால் நிறைந்து விடும்.

கூட்டாஞ் சோறு:

ஆற்றங்கரையில் வண்டில்கள் அவிழ்க்கப்பட்டு மாடுகள் மேயக்கட்டப்படும். சமையலுக்கான பாத்திரம், பண்டங்கள் இறக்கப்படும். சிறுவர்கள் கிளித்தட்டு மறித்தல், ஆடு புலி ஆட்டம் ஆடுவர். பெண்கள் ஆற்றில் இறங்கி முதலில் குளித்து விட்டு வந்து ஊர்க்கதை பேசி மகிழ்வர். அரிசி புடைத்தல், காய்கறி வெட்டல் முதலிய சிறு வேலைகளைச் செய்வர்.

buttala

கூவல்கள் (சிறுகிணறுகள்) வெட்டல்:

கிடங்காக வெட்டி நீர் ஊறியதும் பாவிக்கும் சிறுகிணறுகள் ‘கூவல்கள்’ என்று அழைக்கப்பட்டன. கிராம மக்கள் அவற்றைப் ‘பூவல்கள்’ என்றும் அழைப்பர். கூவல்கள் பற்றித் தமிழ் இலக்கியப் பாடல்களும் உண்டு. ஆற்றங்கரையில் வெட்டப்பட்ட கூவல்களில் ஒரு மணி நேரத்தில் பளிங்கு போன்ற தெளிவான நீர் ஊறிவிடும். தேங்காய் துருவுதல், கிடாரங்களில் கூவல்களில் உள்ள நீரை நிறைத்தல், கிடாரங்களில் சோறு ஆக்குதல், காய்கறிகள் யாவற்றையும் போட்டு ஒரு கறி சமைத்தல் யாவும் ஆண்களின் கடமையாகும்.

நீச்சல் போட்டி, சுழியோடல்:

பெண்கள் குளித்து விட்டு வந்து சிறுவர்களை விளையாட்டை நிறுத்திக் குளித்துவிட்டு வருமாறு விரட்டுவர். சிறுவர் ஆற்றில் இறங்கி குளித்து, நீச்சல் போட்டியிட்டு, நீரில் மூழ்கி மூச்சுப் பிடித்து ஏனையவர்களைத் திகைக்க வைத்து மகிழ்வர். சமையல் முடிய பெண்களும் சிறுவர்களும் உணவருந்தி ஆற்றங்கரை மணலில் நல்ல மரநிழலில் உறங்கி விடுவர்.

ஆண்களின் இரகசியம்:

ஆண்கள் முட்டிகளில் கள்ளுக் கொண்டு வருவது யாவரும் அறிந்த இரகசியமாகும். பற்றைகள் மறைவில் சிரட்டைகள், பிளாக்களில் ‘கள்’ குடித்து மகிழ்வர். அதன் பின் ஆண்களின் ஆட்டம் ஆரம்பமாகும். ஆண்கள் ஆற்றில் இறங்கி அதகளப்படுத்துவர். நீச்சல் போட்டி வைப்பர். சுழியோடி விளையாட்டுக் காட்டுவர். ‘கள்’ளின் மகிமையால் சிலர் ஆற்றுத் தண்ணீரில் குஸ்தியும் போடுவர். ஆடிக் களைத்த பின்னர் ஒவ்வொருவராகக் கரையேறி உணவை உண்பர். பின் மணலில் உருண்டு, பிரண்டு நித்திரை கொள்வர். மாலையானதும் அடுத்த ஆண்டு எப்போ வரும் என்ற ஏக்கத்தோடு வண்டில்களைக் கட்டிக் கொண்டு தம், தம் வீடுகளை நோக்கி விரைவர்.

FerryCrossRiver

கூட்டாஞ் சோறு சாப்பிட மீசாலையிலிருந்து உறவுக்கார நங்கையர் வந்திருப்பராயின் கிராமத்து இளைஞர்கள் ஆற்றங்கரையில் உள்ள உயரமான மரங்களில் ஏறி அதிலிருந்து ஆற்றில் குதித்து தம் வீரத்தைக் காட்டி மகிழ்வர்.

 

தொடரும்….

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.

 

முன்னையபகுதிகள் ….

http://www.vanakkamlondon.com/periya-paranthan/

http://www.vanakkamlondon.com/periyaparanthan-2/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More