செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை கூர்ப்படையும் மனிதர்… | பகுதி 4கூர்ப்படையும் மனிதர்… | பகுதி 4

கூர்ப்படையும் மனிதர்… | பகுதி 4கூர்ப்படையும் மனிதர்… | பகுதி 4

3 minutes read

இவ்வாறு பேர்மன ஆற்றல் பெற்ற மனிதன் தனது மனவாற்றலால் இருந்த இடத்திலிருந்து கொண்டே பல செயல்களை செய்து முடிக்கும் ஆற்றலை பெறுவதோடு புதிய புலனறிவுகளையும் கைவரப்பெறுவான். அவற்றில் முக்கியமானவையாக ரெலிபதி (telepathy), ரெலிகைனெசிஸ் (telekinesis), ரெலிரான்ஸ்போடேசன் (teletransportation) என்பவற்றைக் கொள்ளலாம். இவ்வாற்றல்களை இன்று சில மனிதர்கள் கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அது ஆரம்ப நிலையில் இருப்பதாகவே விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அவை முழுமையாக விருத்தியடையின், ரெலிபதி மூலம் மனிதன் உலகின் எம்மூலையிலிருந்தாலும் தனக்கு வேண்டியவருடன் மனவாற்றல் மூலம் தொடர்பை ஏற்படுத்தமுடியும். இதனால் உலக தொலைபேசி தொடர்பாடல் முறைமை முற்றாக அழிந்துபோகலாம். எண்ணங்கள் மூலம் மனிதன் உரையாட ஆரம்பிப்பதால் மொழிக்கான தேவையும் அற்றுப்போக வாய்ப்புண்டு.

இவ்வாற்றலை அதிகளவு கைவரப்பெற்றவர்கள் தமது எண்ணங்களை மற்றையவர்களின் மூளைக்குள் பலவந்தமாக புகுத்தி அவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் இடமுண்டு. ரெலிகைனெசிஸ் மூலம் தூர இருந்துகொண்டே பொருட்களை தனது மனவாற்றலால் இயக்கும் ஆற்றல் படைத்தவனாக இருப்பான். ரெலிரான்ஸ்போடேசன் உதவியுடன் மனிதன் ஒரு சூட்சும வடிவில் தான் நினைத்த மாத்திரத்தில் விரும்பிய இடத்தில் தோன்றுவதற்கான சக்தியைப் பெறுவான். அவனது மனவாற்றலைப் பொறுத்து அவன் பயணிக்கும் தூரம் வேறுபடக்கூடியாக இருக்கும். இப்புலனறிவுகளைக் கொண்டு மனிதன் தனது முப்பரிமாண எல்லைகளை உடைத்து வேறு பரிமாணங்களில் தனது இருப்பை நிறுவுவான்.

அதன்போது அவன் கால-வெளி எல்லைகளைக் கடந்தவனாகவும் இருப்பான். மேலும் மனிதன் தனது பேர்மனத்தின் உதவியுடன் அட்டமா சித்திகள் அனைத்தையும் கைவரப்பெற்று அதனை அநாயசமாக பாவிக்கும் ஆற்றல் கொண்டவனாக தோற்றம்பெறும் சாத்தியப்பாடுகளும் நிறையவேயுண்டு.

இயற்கைத்தேர்வினூடாக மெதுவாக நடைபெறும் கூர்ப்புச் செயன்முறையானது பல்வேறுபட்ட தொழிநுட்பங்களுடன் கூடிய மனித தலையீடுகள் காரணமாக எதிர்காலத்தில் எவ்வாறு, எத்திசையில் பயணிக்கும் என்பதை யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியாதுள்ளது. ஆனால் அப்பயணம் தொழிநுட்ப உதவியோடு `செயற்கைதேர்வினூடாக` மிக விரைவாக, அதீத நுண்ணறிவையும் அமரத்துவத்தையும் அடையும் திசையை நோக்கி பயணிப்பதற்கு நிறைய வாய்ப்புக்கள் உண்டு.

இந்தவகையில் பரிணாமவளர்ச்சியின் போக்கை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்ட தொழிநுட்பங்களாக மரபணுப் பொறியியல் (genetic engineering), செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), படியாக்கம் (cloning), நனோ தொழிநுட்பம் (nonotechnoly), எந்திர அறிவியல் (robotics) போன்றன கருதப்படுகின்றன.

இருபது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற மனித மரபணு கருத்திட்டம் (Human Genome Project) மூலம் மனிதனது 23 நிறமூர்த்த சோடிகளிலும் உள்ள DNA களில் காணப்படும் மரபணுக்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன. இதன் மூலம் ஒவ்வொரு மரபணுவும் உடலின் எத்தகைய தொழிற்பாட்டில் பங்குபற்றுகின்றது என அறியப்பட்டது.

இதில் முக்கியமானது பரம்பரையாக கடத்தப்படும் நோய்களுக்கு காரணமான மரபணுக்களையும் கல வயதாதலை (cell aging) கட்டுப்படுத்தும் மரபணுக்களையும் கண்டறிந்ததே. இம்மரபணுக்களை மரபணுப்பொறியியல் முறை மூலம் அகற்றிவிட்டு ஒரு மனிதனை உருவாக்கும்போது அவன் பல பரம்பரைநோய்கள் அற்றவனாகவும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்பவனாகவும் இருப்பான். மேலும் இம்முறையால் நுண்ணறிவையும் அதிகரித்துக்கொள்ளலாம் என கருதப்பட்டது.

ஆனால் ஒப்பீட்டளவில் இது ஒரு மெதுவான செயன்முறையாகும். இதனை விட விரைவானதும் வினைத்திறனுமான வளர்ச்சியை நோக்கியதாயுள்ளது  நைக் போஸ்ட்ரம் (Nick Bostrom) என்ற தத்துவவாதியால் முன்வைக்கப்படும் மாற்று மனிதத்துவம் (Transhumanism) எனப்படும் மெய்யியல் சார்ந்த நிலைப்பாடு. இது எவ்வாறு தொழிநுட்ப உதவிகளோடு மனிதனது அறிவு, உடல், உளசார்ந்த திறன்களை அதிகரித்து இறுதியில் அமரத்துவத்தை அடையாலாம் எனபது பற்றிய கருத்தை முன்வைக்கிறது.

இந்தவகையில் நுண்ணறிவை அதிகரிக்க முயலும் மனிதன் இலத்திரனியல், நனோ தொழிநுட்பம் போன்றவற்றின் உதவியுடன் சிலிக்கானால் ஆக்கப்பட்ட மூளை மேம்பாடுகளை (silicon made brain enhancements) மூளையில் பொருத்தி பாவிக்க தொடங்கும்போது அவன் Homo cyberneticus என்ற புதிய இனமாக தோற்றம் பெறுவான்.

இத் தொழிநுட்பம் வெற்றியடைகையில் மனிதன் தனது முழு மூளையினையும் கணனிமயப்படுத்த முனையும்போது Homo hybridus என்ற இனமாக மாற்றமடைவான். இவ்வினம் அதனது மூளையைத் தவிர ஏனைய உடலமைப்பில் சாதாரண மனிதனை ஒத்ததாகவே இருக்கும். இவ்வினம் மனிதனைவிட பாரிய நுண்ணறிவு பாய்ச்சலைக் கண்டிருந்தாலும் சாதாரண மனித உடற்கட்டமைப்பு அதனது வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக அமையும்.

இதனால் இறுதியில் முழு மனித உடற்கட்டமைப்பும் இயந்திரமயமாக்கப்பட்டு Homo machinus என்ற இனம்உருவாகலாம். இதன் மூலம் மனிதன் இலத்திரனியலூடான அமரத்துவத்தை (electronic immortality) அடைவான். இவ்வினம் தன்னைப்போன்று பல பிரதிகளை உருவாக்கி மிக வேகமாக பல்கிப்பெருகும்.

அதன்போது சூழலுடன் ஒத்துவாழமுடியாத நிலையை அடையும் Homo sapiens sapiens முற்றாக Homo machinus இனால் பிரதியீடுசெய்யப்படும். இவ்வினம் தமது மூளையிலுள்ள தகவல்கள் அனைத்தினையும் ஒரு இயந்திர உடலில் இருந்து தரவேற்றி (upload) இன்னுமொரு இயந்திர உடலில், அது வேறொரு கிரகத்தில் இருந்தால்கூட தரவிறக்கம் (download) செய்வதன் மூலம் விரும்பிய வடிவத்தை பெறுவதுடன் ஒளியின் வேகத்துடன் பயணிக்கும் ஆற்றலையும் பெற்றதாக இருக்கும். தமக்குள் ஏற்றதாழ்வுகள் ஏதுமற்ற இவ்வினம் மிகவிரைவாக வளர்சியடைந்து தம்மினப்பரம்பலைமேற்கொள்ள ஏனைய உடுமண்டலங்களை (galaxy) நோக்கிய பயணங்களை மேற்கொள்ளும்.

இவ்வாறு மனிதன் தொழிநுட்ப உதவியால் கணனிமயப்படுத்தப்பட்ட பிரக்ஞையுடன் கூடிய ஒரு இயந்திரமாக மாறி அமரத்துவத்தை அடைந்தாலும் அதன்போது மனிதன் மனிதனாக இருப்பானா என்பது கோள்விக்குரியது. அத்தோடு மனிதன் இயந்திரமாக மாறும் காலகட்டத்தில் ஏற்படும் சில தவறுகள் மனிதகுலத்தை அடியோடு அழிப்பதற்கும் வழிவகுக்கும்.

பாரிய மாற்றங்களை எதிர்நோக்கி நிற்கின்ற இக்காலகட்டத்தில் இனம், மதம், சாதி என பல பிரிவுகளாக பிளவுபட்டிருக்கும் நமது மனித இனமானது இக்குறுகிய நோக்குடைய சிந்தனைகளை உடைந்தெறிந்து ஒரு ஆரோக்கியமான முன்னோக்கிய பாய்ச்சலுக்கு தன்னை தயார்படுத்துமா? அல்லது இப்பிளவுகள் காரணமாக தன்னையே மாய்த்துக்கொள்ளுமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

 

நிறைவு பெற்றது..

 

 

நன்றி : பொ. மனோ | பதிவுகள் இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.