சூரிச் ராப் இசைக்கலைஞர் ஒருவரின் குடியிருப்பில் இருந்து இரு இளைஞர்களின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
சூரிச் Zollikerberg பகுதியில் இருந்து சுமார் 5.30 மணியளவில் குடியிருப்பு ஒன்றில் இருந்து பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், 15 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் மூச்சுப்பேச்சின்றி கிடப்பதை கண்டுள்ளனர்.
இதேவேளை மருத்துவ உதவிக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.
ஆனால் அவர்கள் முதலுதவி அளிக்க முயன்றும், அவர்களால் அந்த இரு இளைஞர்களையும் மீட்க முடியவில்லை என கூறப்படுகிறது.
அந்த இளைஞர்கள் இருவரும் எவ்வாறு இறந்தார்கள் என்பது தொடர்பில் உரிய பரிசோதனைகளுக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் அனைத்து கோணங்களிலும் விசாரணை முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் மரணம் அல்லது சூழ்நிலைகள் பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலில், சூரிச் ராப் இசைக்கலைஞர் அந்த குடியிருப்பில் வசிப்பதாகக் கூறப்படுகிறது,
ஆனால் சம்பவம் நடந்த நேரத்தில் அவர் வீட்டில் இருந்திருக்கவில்லை என்றே தெரியவந்துள்ளது. மேலும், அந்த 15 வயது சிறுவர்களுக்கும் இசைக்கலைஞருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான உறவு என்ன என்பது இன்னும் வெளியாகவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.