சீனாவின் ஜியாங்ஸி மாநிலத்தைச் சேர்ந்த மாணவன், தொழிற்கல்லூரி சிற்றுண்டிச்சாலையில் வாத்தின் கழுத்திற்குப் பதிலாக எலியின் தலை உணவாக வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
அந்த மாணவரின் பெயர் வெளியிடப்படவில்லை. எனினும், மாணவன், அதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானதாக South China Morning Post செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாணவன், சமூக வலைத்தளங்களில் அந்தக் காணொளியைப் பதிவிட்டுள்ளார். “எலியின் பற்களைக் காண முடிகிறதா?” என அவர் அதில் கேட்டுள்ளார்.
அது பெருமளவில் சர்ச்சையைக் கிளப்பியதாக South China Morning Post தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஜியாங்ஸி தொழிற்கல்லூரி, உள்ளூர் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவை அணுகி, கல்லூரி சிற்றுண்டிச் சாலையின் உணவுப் பாதுகாப்பைச் சோதனையிடக் கேட்டுக்கொண்டது.
எனினும், சோதனை முடிவில் “அது வாத்தின் கழுத்து தான், எலியின் தலை அல்ல,” எனச் சோதனையாளர் அறிக்கையிட்டுள்ளார்.
அறிக்கையை தொடர்ந்து, தொழிற்கல்லூரியில் வழங்கப்படும் உணவு பாதுகாப்பானது என ஜியாங்ஸி தொழிற்கல்லூரி பொது அறிவிப்பு விடுத்துள்ளது.
ஆனால், சமூக வலைத்தளங்களில் அந்தக் காணொளி கண்ட பலர், “வாத்தின் தலைக்குப் பற்கள் எப்படி முளைத்திருக்கும்?” என விவாதித்து வருகின்றனர்.