செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா உலகக் கோப்பை நடுவராக பங்கேற்க அமெரிக்கா அனுமதி மறுப்பு: சோமாலிய நடுவர் வெளியேற்றம்

உலகக் கோப்பை நடுவராக பங்கேற்க அமெரிக்கா அனுமதி மறுப்பு: சோமாலிய நடுவர் வெளியேற்றம்

2 minutes read

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடுவராகப் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டிருந்த சோமாலியாவின் முன்னணி கால்பந்து நடுவரான ஓமர் அப்துல்காதிர் ஆர்ட்டான், அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகக் கோப்பை பணிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை போட்டித் தொடருக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, கடந்த சனிக்கிழமை இஸ்தான்புல்லில் இருந்து மியாமி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ஓமர் ஆர்ட்டான், அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையினரின் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பின்னர், அவருக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி வழங்கப்படாமல், நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதால், சர்வதேச கால்பந்து வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA, ஓமர் ஆர்ட்டான், உலகக் கோப்பை போட்டிகளில் நடுவராகச் செயல்பட முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் சிறந்த நடுவராகத் தேர்வான அவர், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடுவராகப் பங்கேற்கும் முதல் சோமாலியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்க இருந்தார்.

FIFA வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிவரவு மற்றும் நுழைவு அனுமதி தொடர்பான விவகாரங்களில் தாங்கள் தலையிட முடியாது என்றும், போட்டிகளை நடத்தும் நாட்டின் அதிகாரிகளின் முடிவே இறுதியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய FIFA தொடர்களிலும் இதே நடைமுறையே பின்பற்றப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட விளக்கத்தில், ஓமர் ஆர்ட்டானின் ஆவணங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கூடுதல் சரிபார்ப்பின் போது சில கவலைக்குரிய அம்சங்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தக் காரணங்கள் குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் அறிமுகப்படுத்திய பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் சோமாலியா ஒன்றாகும். இதுவும் இந்த முடிவுக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என அரசியல் மற்றும் விளையாட்டு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த விவகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சோமாலிய விளையாட்டுத் துறை அமைச்சின் மூத்த ஆலோசகரும் முன்னாள் தேசிய அணித் தலைவருமான சிஸ் அடன் அப்ஷிர் கருத்து வெளியிட்டுள்ளார். ஆப்பிரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க நடுவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஓமர் ஆர்ட்டானுக்கு முழு கால்பந்து சமூகமும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும், அவருக்கு அமெரிக்கா நுழைவு அனுமதி மறுத்திருப்பது விளையாட்டின் நேர்மை மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்கு எதிரானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓமர் ஆர்ட்டானிடம் செல்லுபடியாகும் அமெரிக்க விசாவும் இராஜதந்திர கடவுச்சீட்டும் இருந்ததாக அப்ஷிர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அவை கூட அமெரிக்காவில் நுழைய போதுமானதாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் உலகக் கோப்பை நடுவர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றபோது, சோமாலிய அதிபர் ஹசன் ஷேக் மொஹமுத் அவரை பாராட்டியிருந்தார். ஓமர் ஆர்ட்டானின் அர்ப்பணிப்பு, தொழில்முறை திறன் மற்றும் நேர்மையான பண்புகள் புதிய தலைமுறை சோமாலிய இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக அதிபர் அப்போது தெரிவித்திருந்தார்.

ஆனால், உலகக் கோப்பை வரலாற்றில் இடம்பிடிக்கும் வாய்ப்பாகக் கருதப்பட்ட இந்தச் சாதனை, அமெரிக்காவின் நுழைவு மறுப்பு காரணமாக தற்போது தடைபட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.