Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கோவை புத்தகத் திருவிழாவில் இளம் எழுத்தாளர்களுக்கு விருது 

கோவை புத்தகத் திருவிழாவில் இளம் எழுத்தாளர்களுக்கு விருது 

2 minutes read


கொடிசியா பப்பாசி அமைப்புடன் இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா ஜூலை 19 முதல் 28ம் தேதி வரை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

அதனையொட்டி இளம் இலக்கிய எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு முதல் புனைவு, கட்டுரை, கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது தலா 25,000 ரூபாய் பணமும், விருதுச் சான்றிதழும் அடங்கியது.

புனைவு நூல்களுக்கான பிரிவில் கற்றாழைப்பச்சை நூலுக்காக குணா கந்தசாமிக்கும், அபுனைவு நூல்களுக்கான பிரிவில் “தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்…)” நூலுக்காக ஞா.குருசாமிக்கும், கவிதை நூல்களுக்கான பிரிவில் “விரல்களில் வழியும் விரலற்றவனின் செங்குருதி” கவிதைத் தொகுப்பிற்காக சோலை மாயவன் ஆகியோருக்கும் இளம் இலக்கிய எழுத்தாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த விழாவிற்கு எழுத்தாளர் வண்ணநிலவன் தலைமை தாங்கினார். நானும் ஒரு காலத்தில் இளம் எழுத்தாளனாகவே இருந்தேன். இன்று வாசிப்பு அருகி வரும் டிஜிட்டல் யுகத்தில் ஏராளமான கவனச்சிதறல்கள் உருவாகியுள்ளது. இந்த காலகட்டத்திலும் இளம் எழுத்தாளர்கள் உற்சாகத்துடன் இயங்குவது ஆச்சரியமளிக்கிறது. வாசகர்கள் அதிகமாக புத்தகங்களை வாங்கி வாசிக்க வேண்டும். நாவல் சிறுகதை கவிதைகள் மட்டுமல்ல பிற துறை நூல்கள் வரலாற்று நூல்களையும் வாசிப்பது அவசியம். வாசிப்பது என்பது தியானம் போன்றது என்றார்.

கற்றாழை பற்றி நூலுக்காக விருது பெற்ற குணா கந்தசாமியை இலக்கியக் கூடல் அமைப்பின் தலைவர் டி. பாலசுந்தரம் வாழ்த்தி பேசினார். குணா கந்தசாமியின் வாழ்வனுபவம் பரந்துபட்டது. உலகின் பல்வேறு நிலப்பரப்புகளில் அவர் வாழ்ந்து இருக்கிறார். அந்த அனுபவங்கள் அவரது நூலில் சிறப்பாக இடம் பெற்றுள்ளன. விருது பெற்றவர்களின் நூல்களை வாசகர்கள் பெருமளவில் வாங்கி வாசிக்க வேண்டும். இளம் எழுத்தாளர்கள் மேலும் உற்சாகத்துடன் செயல்பட்டு பல்வேறு ஆக்கங்களைத் தமிழுக்கு அளிக்க வேண்டும் என்றார்.

ஞா. குருசாமியை வாழ்த்திப் பேசிய தொழிலதிபர் எஸ். நடராஜன் இன்று மொழி சார்ந்த மருத்துவம் என எஞ்சியிருப்பது சீன மொழியிலும் தமிழ் மொழியிலும் மட்டும்தான். பிற மொழிகளில் ஒன்று மொழி இருக்காது. அல்லது அந்த பண்பாடு சார்ந்த மருத்துவம் இருக்காது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு இளம் படைப்பாளிகளுக்கு இருக்கிறது. இந்த நூலில் 1970 க்குப் பிறகான தமிழிலக்கியத்தை நூலாசிரியர் மூன்றாண்டுகள் கடும் உழைப்பில் ஆவணப்படுத்தியுள்ளார். அவர் மென்மேலும் இயங்க வாழ்த்துக்கள் என்றார்.

விரல்களில் வழியும் விரலற்றவனின் செங்குருதி கவிதை நூலுக்காக சோலை மாயவனை வாழ்த்திப் பேசிய மரபின்மைந்தன் முத்தையா ஒரு இலக்கியப் படைப்பின் வெற்றி சித்தரிப்பின் வல்லமையில் உள்ளது. கவிஞர் அந்த வகையில் தான் வாழும் சூழலை, இயற்கை சீரழிப்பை, சொந்த நாட்டிற்குள்ளே இடம்பெயற்சி உருவாக்கும் சிக்கல்களை தனது கவிதைகளில் மிக அழகாக படம் பிடித்துள்ளார். குறிப்பாக இவர் எழுதிய பார் கவிதை பெண்களைப் பற்றி அக்கப்போர் பேசும் அபாண்டமான ஆண்களுக்கு ஒரு சவுக்கடி ஆக இருக்கிறது. சோலை மாயவன் இந்த விருதிற்கு முற்றிலும் தகுதி வாய்ந்தவர் என்று குறிப்பிட்டார்.

விருதுகளை பெற்றுக் கொண்டவர்களின் ஏற்புரையுடன் விழா நிறைவடைந்தது. விழாவிற்கு கொடிசியா வின் தலைவர் ராமமூர்த்தி புத்தகத்திருவிழாவில் தலைவர் விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குணா கந்தசாமியின் நூல்கள் தமிழினி பதிப்பகத்தின் ஸ்டாலிலும் சோலை மாயவன், ஞா. குரு சாமி ஆகியோர் எழுதியுள்ள நூல்கள் நமது நம்பிக்கை ஸ்டாலிலும் கிடைக்கும்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More