கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய செயலாளர் நாயகமாக பதவி ஏற்ற பட்ரீஷியா ஸ்கொட்லண்ட் பின்னர் அவர் இலங்கைக்கு வரும் முதலாவது விஜயம் இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பட்ரீஷியா ஸ்கொட்லண்ட் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார்.
1 ஆம் திகதி இவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து உரையாடவுள்ளார். அத்துடன், மலிக் சமரவிக்கிரம, பயிசர் முஸ்தபா, அகில விராஜ் காரியவாசம் உள்ளிட்ட பல அமைச்சர்களையும் சந்தித்து உரையாடவுள்ளார்.
இந்த சந்திப்புக்களின் போது லண்டனில் இந்த ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. இதுதவிர, பொதுநலவாய நாடுகளின் வர்த்த நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்தும், செயலாளர் நாயகம் பட்ரீஷியா ஸ்கொட்லண்ட் கவனம் செலுத்தவுள்ளார்.
