செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உலகத் தமிழர் பேரவையின் இமயமலைப் பிரகடனத்துக்கு எதிராக ரெலோ போர்க்கொடி!

உலகத் தமிழர் பேரவையின் இமயமலைப் பிரகடனத்துக்கு எதிராக ரெலோ போர்க்கொடி!

1 minutes read

“தனி நபர்கள் தமக்குள் பொறுப்பற்ற பிரகடனங்களை உருவாக்கி அவற்றைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக முன்மொழிய முற்படுவது கண்டனத்துக்குரியது. உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் பௌத்த பிக்குகளுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைக் கொச்சைப்படுத்தும் முகமாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.”

– இவ்வாறு ரெலோவின் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“உலகத் தமிழர் பேரவை அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடாது அவர்களது அனுமதியைப் பெறாமல், தன்னிச்சையான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது வேதனைக்குரியது. புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மைக் காட்டிக் கொண்டு எமது ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளையும் தவறாக வழி நடத்திச் செல்லும் இந்த நடவடிக்கையை நாங்கள் நிராகரிக்கின்றோம். இந்த நடவடிக்கையானது அவர்களது சொந்த நலன்களைப் பூர்த்தி செய்வதற்கு தமிழ் மக்களின் அரசியலைப் பலிக்கடாவாக்கும் செயற்பாடா என்று சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.

ஈழத் தமிழர்களால் தமது அரசியல் அபிலாஷைகளை அடைவதற்காக நமது தேசத்தில் அயராத முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் நடவடிக்கைகளுக்குப் புலம்பெயர் அமைப்புகள் ஆதரவாகச் செயற்பட வேண்டுமே தவிர அவற்றை மலினப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் அவர்கள் நேரடியாக ஈடுபடுவது வருத்தம் அளிக்கின்றது.

அவர்கள் முன் வைத்திருக்கும் பிரகடனத்திலே மாகாணங்களுக்கான அதிகாரங்களைப் பகிர்வதற்கே புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறி இருப்பது வேடிக்கையானது மாத்திரமல்ல தமிழ் மக்களுடைய அரசியல் இலக்கையே புரிந்து கொள்ளாதவர்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

தமிழ் மக்களின் இறுதி அரசியல் தீர்வு என்பது சமஷ்டி முறையான ஆட்சியமைப்பாகவே இருக்க முடியும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறாத கொள்கையோடு தொடர்ந்தும் பயணித்து வருகின்றது . அந்த அரசியல் தீர்வுக்கான பேச்சில் கலந்துகொள்ள அரசால் அழைப்பு விடுக்கப்பட்டபோது, நல்லிணக்க நடவடிக்கையாக ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து தேர்தல்களை நடத்துமாறு நாங்கள் அரசிடம் கோரியுள்ளாம். அதன் அடிப்படையில் பேச்சுகளும் நடந்தன. இந்த நேரத்திலே புதிய அரசியல் யாப்பு, மாகாண சபைக்கான அதிகாரங்களைப் பகிர்வதற்காக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று முன்வைக்கின்ற கோரிக்கை அபத்தமானதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷையைக் குழி தோண்டிப் புதைக்கும் ஆபத்தான நடவடிக்கையும் ஆகும்.

ஒருசிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காகத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மலினப்படுத்தும் நடவடிக்கைகளில் புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் ஈடுபட வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை வைப்பதோடு, நமது கண்டனத்தையும் பதிவு செய்து கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.