வடக்கு , கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஏனைய மாகாணங்களில் செறிந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் விகிதாசார பிரதிநிதித்துவத்தை அமுல்படுத்த வேண்டும். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்தகரமாகவே காணப்படுகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பாராளுமன்ற விசேட செயற்குழுவில் அதிருப்தி வெளிப்படுத்தினார்.
மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் செயற்குழு அதன் தலைவர் விஜித்த ஹேரத் தலைமையில் வியாழக்கிழமை (20) பாராளுமன்ற கட்டத்தொகுதியில் கூடியது.இதன்போது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் குழுவின் செயற்பாடுகள் மந்தகதியாகவே காணப்படுகிறது. பழையத் தேர்தல் முறைமையின் கீழ் திருத்தங்களுடன் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை யோசனைகளை முன்வைத்துள்ள பின்னணியிலும் அரசாங்கம் அதனை கருத்திற் கொள்ளவில்லை.
புதிய தேர்தல் முறைமையில் தோற்றம் பெற்ற சட்ட சிக்கலினால் தான் மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. அரசாங்கம் தற்போது புதிய தேர்தல் முறைமையை பிடித்துக் கொண்டுள்ளது.பெண் பிரிதிநிதித்துவம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கும் முன்னுரிமையளிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
பெண் பிரிதிநிதித்துவம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கும் முன்னுரிமையளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு தேர்தலை தொடர்ந்து பிற்போட்டுக் கொண்டு ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதித்துவத்தையும் இல்லாதொழிக்க முடியாது.
வடக்கு , கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஏனைய மாகாணங்களில் செறிந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் விகிதாசார பிரதிநிதித்துவத்தை அமுல்படுத்த வேண்டும். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்தகரமாகவே காணப்படுகிறது.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறதா என்பது சந்தேகத்துக்குரியது. இழுபறி நிலையே தொடர்கிறது என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.