இவ்வாண்டு முதல் 6 மாதங்களில் டுபாயில் மக்கள் தொகை 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாக துபாய் புள்ளியியல் மையம் தெரிவித்துள்ளது.
உலகின் மிக முக்கிய வர்த்தக நகரமாக டுபாய் திகழ்கிறது. விமான போக்குவரத்து, வர்த்தகம், நிதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் அதிகமான வேலைவாய்ப்புகளை இந்நகரம் வழங்கி வருகிறது.
இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக டுபாய் வருவது அதிகரித்துள்ளது.
இதனால் டுபாயில் மக்கள் தொகை இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் டுபாய் மக்கள்தொகை 35 இலட்சத்து 50 ஆயிரத்து 400 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 36 லட்சத்து 3 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் டுபாயில் மக்கள்தொகை கடந்த ஒரு ஆண்டில் 89 ஆயிரத்து 196 ஆகவும், கடந்த 18 மாதங்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 595 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அதிகரித்துவரும் மக்கள் தொகையை கருத்தில்கொண்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.