அமெரிக்காவிலிருந்து மேலும் 55 ஈரானியர்கள் நாடு கடத்தப்பட்டிருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம், குடியேறிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிகையின் ஒரு பகுதியாக அவர்கள் ஈரானுக்குத் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர்.
நாடு திரும்ப வேண்டிய கிட்டத்தட்ட 400 ஈரானியர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கடந்த செப்டெம்பரில் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் தொகுதியாக 120 பேர் கட்டார் தலைநகர் வழி தெஹ்ரானுக்கு (Tehran) அனுப்பப்பட்டனர். மேலும் 55 பேர் எதிர்வரும் நாள்களில் திரும்புவர்.
அரசியல் நோக்கத்தோடும் அனைத்துலகச் சட்டத்திற்குப் புறம்பாகவும் அமெரிக்கா செயல்படுவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளுக்கான குலுக்கல் நிகழ்ச்சி இடம்பெற்றது.
அதற்காக 09 பேருக்கு விசா கேட்டதாகவும் நால்வருக்கு மட்டுமே அமெரிக்கா விசா கொடுத்ததாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.