ஒரு சிறிய படகின் மூலம் ஆங்கிலக் கால்வாயை கடந்து போர்ட்ஸ்மவுத் நகருக்குள் சுமார் 140 அகதிகள் வந்து இறங்கியதைத் தொடர்ந்து, அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு வீதி மறியலில் ஈடுபட்டனர்.
நகருக்குள் வந்த அகதிகள் அங்கிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கில் போராட்டக்காரர்கள் வீதிகளை முடக்கினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடுமையான பதற்றம் நிலவியது.
அகதிகள் தரை இறக்கப்பட்ட ஈஸ்ட்னி லேண்டிங் ஃபெர்ரி போர்ட் (Eastney Landing ferry port) பகுதிக்கு மக்கள் செல்வதைத் தவிர்க்குமாறு ஹாம்ப்ஷயர் பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அப்பகுதியில் கூட்டத்தைக் கலைப்பதற்கான அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதை மீறுபவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
“போராட்டக்காரர்களில் பெரும்பாலோர் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து, முகமூடிகளால் தங்களை மறைத்திருந்தனர். அவர்களின் இந்த மிரட்டும் மற்றும் முரட்டுத்தனமான செயல்களை இங்கிலாந்து அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது. அமைதியான முறையில் போராட அனைவருக்கும் உரிமை உண்டு என்றாலும், அது சட்டம் ஒழுங்கு மீறலாக மாறிவிடக் கூடாது” என்று அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அகதிகளை கென்ட் (Kent) பகுதியில் உள்ள மேன்ஸ்டன் பரிசீலனை மையத்துக்கு அதிகாரிகள் கொண்டு செல்வதைத் தடுப்பதே தங்களின் நோக்கம் என்று போராட்டக்காரர்கள் கூறினர்.
இதனால் அகதிகளை ஏற்றிச் செல்லவிருந்த பஸ்களுக்குப் பாதுகாப்பாகப் பொலிஸ் கலகத் தடுப்புக் கேடயங்களுடன் நிறுத்தப்பட்டனர்.
பொதுவாக அகதிகள் டோவர் (Dover) பகுதிக்கு அருகிலேயே தரை இறங்கும் நிலையில், இந்த முறை இவ்வளவு மேற்கே வந்து இறங்கியிருப்பது மிகவும் கவலையளிப்பதாக ஐல் ஆஃப் வைட் ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ ராபர்ட்சன் தெரிவித்துள்ளார்.
போர்ட்ஸ்மவுத் பகுதி மனிதக் கடத்தல்காரர்களின் புதிய மையமாக மாறிவிடக் கூடாது என்று ஹாம்ப்ஷயர் மற்றும் ஐல் ஆஃப் வைட் போலீஸ் கமிஷனர் டோனா ஜோன்ஸ் கவலை தெரிவித்துள்ளார். டோவர் பகுதியில் அரசு மேற்கொண்டுள்ள பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடத்தல்காரர்கள் இப்போது தெற்கு இங்கிலாந்தின் பிற கடற்கரைப் பகுதிகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம் என்றும், இது அரசாங்கத்துக்கு ஒரு முக்கிய சவாலாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.