விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி பட மாளிகையில் வெளியான ‘கட்டா குஸ்தி 2 ‘ திரைப்படம் 50 வது நாளை கடந்து பட மாளிகையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் உற்சாகமடைந்த படக்குழுவினர், ஐம்பதாவது நாள் விழாவை வெற்றி விழாவாக சென்னையில் கொண்டாடினர்.
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, மோக்ஷா, குழந்தை நட்சத்திரம் சாரா, கருணாஸ், லிசி அண்டனி ஆகியோரின் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘கட்டாகுஸ்தி 2’.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகி ஐம்பதாவது நாளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த வெற்றி விழாவில் பட குழுவினருடன் தமிழக அமைச்சர் ராஜ் மோகன் மற்றும் நடனப்புயல் பிரபுதேவா ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் பங்கு பற்றி இயக்குநர் செல்லா அய்யாவு பேசுகையில், ” கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இப்படத்தின் 50வது நாள் வெற்றி விழாவை கொண்டாடுகிறோம். இந்த வெற்றியை மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன்.
ஒரு காலத்தில் 200 நாட்கள் ஓடிய திரைப்படங்களின் விளம்பரங்கள் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. ஆனால் தற்போது படமாளிகைக்கான வெளியீட்டு முறைகளும் ரசிகர்கள் பொழுதுபோக்கு அம்சங்களை பார்க்கும் தளங்களின் தன்மையும் மாறிவிட்ட நிலையில் ‘கட்டா குஸ்தி 2’ ரசிகர்களின் பேராதரவுடன் 50 நாட்களை கடந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.