பங்ளாதேஷுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற மகளிர் ரி20 ஆசிய கிண்ண அரை இறுதிப் போட்டியில் 40 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று இரவு நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்திக்கும்.
பங்களாதேஷுடனான அரை இறுதிப் போட்டியில் ஷபாலி வர்மா குவித்த அரைச் சதம், தீப்தி ஷர்மா, நந்தனி ஷர்மா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா சற்று சிரமத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் ஷபாலி வர்மா 64 ஓட்டங்களையும் ஹார்மன்ப்ரீத் கோர் ஆட்டம் இழக்காமல் 24 ஒட்டங்களையும் ரிச்சா கோஷ் 21 ஓட்டங்களையும் ப்ராத்திகா ராவல் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சுல்தானா காத்துன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இதில் ஷொர்னா அக்தர் ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களையும் டிலாரா அக்தர் 21 ஓட்டங்களையும் அணித் தலைவர் நிகார் அக்தர் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நந்தனி ஷர்மா 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

