தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரக் கலைஞராக ஜொலிக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சீமான் நடிக்கிறார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
‘தாய்க்கிழமை’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் – பாக்கியஸ்ரீ போர்சே ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ராஜ் பி. ஷெட்டி, அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த நட்சத்திரப் பட்டியலில் லேட்டஸ்ட்டாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இணைந்திருக்கிறார். விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்து வரும் இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கிராமிய பின்னணியிலான கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இத்திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் இயக்குநரும், நடிகருமான சீமான் இணைந்திருக்கிறார். இதனை படக்குழு பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறது.
இந்திய மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசன் – ஆர். மகேந்திரன் – சிவகார்த்திகேயன் – சீமான் கூட்டணியில் தயாராகி வருவதால் ‘சேயோன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.